நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவை பகுதியின் பல்வேறு இடங்களில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பரப்புரை மேற்கொண்டார்.
தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசுகையில், ‘‘தமிழக முதல்வராகப் பதவியேற்று 8 மாதங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.
கொரோனாவையும் பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக பணியாற்றினார். மு.க.ஸ்டாலின்போல் நிர்வாகம் தெரிந்த ஒருவரால்தான் கொரோனாவிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற முடிந்தது. உள்ளாட்சியிலும் தி.மு.க நல்லாட்சி தரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தலைமுறைக்கான திட்டமாகும். இதனை கிண்டல் செய்த பா.ஜ.க இன்று உ.பி மாநிலத்தில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என வாக்குறுதி அளித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், தி.மு.க அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும் என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. 10ஆண்டுகளாக எதையும் செய்யாத முந்தைய எடப்பாடி அரசு, தற்போது தி.மு.க அரசை குறை கூறுகிறது.
மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதில் பா.ஜ.கவை மிஞ்ச வேறு யாருமில்லை. இந்து, முஸ்லீம் என அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக சகோதர, சகோதரிகளாக வாழக்கூடிய தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை பா.ஜ.க முன்னிறுத்தி வருகிறது
சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.கவை மட்டும் மக்கள் நம்பிவிட வேண்டாம். பா.ஜ.கவின் கொத்தடிமையாக உள்ள அந்தக் கட்சி தேர்தலுக்காக இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பிரிந்திருப்பது போல் நாடகமாடுகின்றனர். தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் ஒன்றிணைந்து கொள்வார்கள். ” எனப் பேசினார்.