மு.க.ஸ்டாலின்

"உங்கள் சகோதரனான இந்த ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள்!": முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை!

"உங்கள் சகோதரனான இந்த ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள்!" என தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையாற்றினார்.

"உங்கள் சகோதரனான இந்த ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள்!": முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"கழக அரசு துறைவாரியாக நிகழ்த்தியுள்ள சாதனைகள் உள்ளாட்சியிலும் தொடர மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்!” என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (17-02-2022) மாலை - காணொலி வாயிலாகத் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

மன்னராட்சிக் காலத்திலும்- பாளையக்காரர்கள் ஆட்சிக் காலத்திலும்- எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் இருந்த ஊர்தான் திருநெல்வேலி!

மாவீரன் பூலித்தேவன்- வீரபாண்டிய கட்டபொம்மன் - மாவீரன் சுந்தரலிங்கம் - வீரன் அழகு முத்துக்கோன் - மகாகவி பாரதியார்-கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. - என இந்த இந்திய மண்ணின் விடுதலைக்காக- தமிழ் மண்ணில் போராடிய- தியாகிகள் பெயரைக் கேட்டாலே- “நெஞ்சிலே வீரமும் – நாட்டுப்பற்றும் – தமிழ்ப்பற்றும் மேலோங்கிய அவர்களின் போராட்ட வாழ்வு- நமக்கெல்லாம் இன்றும் புத்துணர்ச்சியைத் தந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைத் தலைநிமிர வைக்கிறது!

ஆனால், அண்மையில் நடைபெற்ற குடியரசு நாள் விழா அணிவகுப்பில், இத்தகைய விடுதலை வீரர்களின் திருவுருவச் சிலைகள் உள்ள அலங்கார ஊர்தியை அனுமதிக்காமல் “யாரு வ.உ.சி.?... அவர் என்ன Business man-ஆ?” என்றும்; வீர மங்கை வேலுநாச்சியார் சிலையைப் பார்த்து “ஜான்சி ராணியா” என்றும் கேட்டிருக்கிறார்கள். ஆங்கிலேயரை எதிர்த்து வென்ற வீர மங்கைதான் வேலுநாச்சியார் என்று சொன்ன பிறகு, சரி அவர் அமர்ந்திருக்கும் குதிரையின் நிறத்தைப் பழுப்பு நிறத்திற்கு மாற்றுங்கள்” என்று கேட்டு நிராகரித்தார்கள்.

இது அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது! நம்முடைய மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், எப்போதும் “தமிழ்… தமிழ்நாடு” என்று பேசுகிறாரே, அவருக்குத் தெரியாமல் இது நடந்து இருக்கலாம் என்று நினைத்து, “நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாட்டு அலங்கார ஊர்திகள் குடியரசு நாள் விழாவில் இடம்பெற வையுங்கள்” என்று முதலமைச்சர் என்ற முறையில், உங்களின் உணர்வுகள், நமது உணர்வுகள், இந்த தியாகிகளைப் போற்றி கொண்டாடுகிற இளைஞர்களின் உணர்வுகள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி, நானே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்!

ஆனாலும், வல்லுநர் குழுவினுடைய முடிவு என்று கைவிரித்துவிட்டார்கள்! இந்த விடுதலை வீரர்களுடைய தியாகத்தைக் கூட தெரிந்து கொள்ளாதவர்கள், எப்படிப்பட்ட வல்லுநர்களாக இருப்பார்கள்?

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா? நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், தமிழ்நாட்டு வீரர்களுடைய புகழ் யாருக்கும் தெரியாமல் போய்விடுமா? ஆனால், இன்றைக்கு அந்த அலங்கார ஊர்திகள் தமிழ்நாடு முழுவதும் வலம் வந்து, அதற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பையும்; நம்முடைய விடுதலை வீரர்களை நீங்கள் கொண்டாடியதையும்; இந்தியா மட்டுமல்ல உலகமே திரும்பி பார்த்தது! அதுதான் தமிழ்நாடு!

"உங்கள் சகோதரனான இந்த ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள்!": முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை!

இத்தகைய மாவீரர்களைக் கொடுத்த நெல்லைச் சீமையில், தமிழர்களின் இதயசூரியனாம் உதயசூரியனுக்குப் பெருமிதத்தோடு ஆதரவு கேட்கிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்ல, திராவிட இயக்க வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஊர்தான் இந்த நெல்லைச் சீமை!

* 1920-ஆம் ஆண்டு, நெல்லையில் நடந்த காங்கிரசு மாநாட்டில்தான் முதன்முதலாக, வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் கொண்டு வந்தார்கள்.

ஆலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேறுகிறது. ஆனால், பொதுமாநாட்டில் நிறைவேற விடாமல் தடுத்துவிடுகிறார்கள்! அதற்குப் பிறகுதான் வகுப்புவாரி உரிமையின் உண்மையான எதிரி யார் என்று தந்தை பெரியார் உணர்ந்து கொள்கிறார். தந்தை பெரியாரோடு வ.உ.சி. அவர்களும் கை கோத்து, சமூகநீதிக் கொடியை உயர்த்திப் பிடித்தார்.

* முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டமான 1938-ஆம் ஆண்டு போராட்டத்தின்போது, பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த நெல்லை சீமைக்கு வந்து ஒருவார காலம் தங்கி, பல்வேறு இடங்களில் எழுச்சி முழக்கம் செய்தார்! இளைஞர்களின் நெஞ்சில் இருந்த மொழியுணர்வைத் தட்டி எழுப்பினார். தமிழ்மொழி காக்க பேரறிஞர் அண்ணாவின் பின்னால் திரண்ட தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை- நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” எனப் பாடி, புரட்சிக் கனல் கக்கியதற்கு வித்திட்டது இந்த நெல்லைச் சீமை! தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் உரிமையாளர் திருவரங்கர் வீட்டில் தங்கித்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வடிவமைத்தார்.

* “ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்!

நீ தேடிவந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!”

எனப் போர்ப்பரணி பாடி இந்தித் திணிப்பை எதிர்த்தாரே நம் தமிழினத் தலைவர் கலைஞர், அவர் 1965-ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டதும் பாளையங்கோட்டைச் சிறையில்தான்! இது நெல்லைச் சீமையின் வரலாறு! மொழிப்போரின் வரலாறு! திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு! தமிழ்நாட்டின் வரலாறு!

* என்னுடைய வாழ்க்கையிலும், நெல்லைக்கு முக்கியப் பங்கு உண்டு.

1980-ஆம் ஆண்டு இளைஞரணி தொடங்கப்பட்டு இருந்தாலும், 2007-ஆம் ஆண்டுதான் முதன்முதலாக, இளைஞரணி சார்பில் மாநில மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டை நெல்லையில்தான் நடத்தினோம்! தலைவர் கலைஞர் அவர்கள் அந்த மாநாட்டின் எழுச்சியைப் பார்த்துவிட்டு அதிகம் பாராட்டினார்!

* நெல்லை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது நெல்லையப்பர் கோயில்தான். ஏழாம் நூற்றாண்டில், நின்றசீர் நெடுமாறப் பாண்டியரால் கட்டப்பட்டது. இத்தகைய பாரம்பரியமான கோயிலை, 700 ஆண்டுகளுக்குப் பின்னால் புதுப்பித்து, திருப்பணிகள் செய்து கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.

அதுமட்டுமா!

1974-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான், நெல்லையப்பர் கோயில் கலைக்கூடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் மட்டுமல்ல, இந்த நெல்லையப்பர் கோவில் திருப்பணிகளைச் செய்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்!

* தலைநகர் சென்னையில் அண்ணா மேம்பாலம் அமைத்தது போல, நெல்லையில் 1973-ஆம் ஆண்டு ஈரடுக்குப் பாலம் அமைத்து, அதற்கு ‘திருவள்ளுவர் பாலம்’-என்று பெயர் சூட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

* செல்லப்பாண்டியன் பெயரிலான பாலமும் தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டதுதான்.

இவ்வாறு, நெல்லை நம்மோடு - நம் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஊர்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது! ஆட்சி அமைத்து இன்னும் ஓராண்டு கூட முடியவில்லை. இந்த ஒன்பது மாத காலத்தில், அ.தி.மு.க. பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை, நாம் செய்திருக்கிறோம்! இதை ஏதோ நான் மிகைப்படுத்தி இல்லை; ஆதாரப்பூர்வமாகதான் சொல்கிறேன்.

ஆனால், திருவாளர் ‘பச்சைப் பொய்’ பழனிசாமி அவர்கள், தி.மு.க. இந்த ஒன்பது மாத காலத்தில் எந்தச் சாதனையையும் செய்யவில்லை என்று, நாள்தோறும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நாங்கள் என்ன சாதனைகளைச் செய்திருக்கிறோம் என்று, அவரே தெருவில் இறங்கி மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆட்சியை விட்டு அகற்றப்பட்டு ஒன்பது மாதம் ஆனதால், இவர்கள் ஆட்சியில் நடந்த அநியாயம், அராஜகம் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிட்டு இருப்பார்கள் என்று நினைத்து, தி.மு.க. ஆட்சிக்கு சட்டம் ஒழுங்கு பற்றிப் பாடம் எடுக்கிறார் பழனிசாமி.

"உங்கள் சகோதரனான இந்த ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள்!": முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை!

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்று கொஞ்சம் நினைவூட்டட்டுமா?

* பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் - 6 பேர் பலி,

* ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் -13 பேர் பலி,

தூத்துக்குடி ரஞ்சித்குமார்,

லூர்தம்மாள்புரம் கிளாஸ்டன்,

சிலோன் காலனி கந்தையா,

ஓட்டப்பிடாரம் தமிழரசன்,

மாசிலாமணிபுரம் சண்முகம்,

தூத்துக்குடி ஸ்னோலின்,

தூத்துக்குடி அந்தோணி செல்வராஜ்,

தாமோதரன் நகர் மணிராஜ்,

தூத்துக்குடி கார்த்திக்,

திரேஸ்புரம் ஜான்சி,

தூத்துக்குடி செல்வசேகர்,

தாளமுத்துநகர் காளியப்பன்,

உசிலம்பட்டி ஜெயராமன்,

இவர்களுடைய பெயரெல்லாம் பழனிசாமிக்கு ஞாபகமிருக்கிறதா?

ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது மன்னன் நீரோ எதையோ வாசித்தானாமே, மக்களுக்குச் சாப்பிட ரொட்டி கிடைக்கவில்லை என்றபோது, கேக் வாங்கிச் சாப்பிடட்டும் என்று ஒரு ராணி சொன்னாரே, அதைப் போல, ‘துப்பாக்கிச்சூடு பற்றி நான் டி.வி. பார்த்துதான் தெரிந்துகொண்டேன்' என்று சொன்னவர்தான் பழனிசாமி! அதனால்தான் ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறேன்!

* சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் அடித்துக் கொலை, மறந்துவிட்டீர்ககளா? நீதிமன்றமே கொலை என்று சொல்ல முகாந்திரம் இருக்கிறது என்று சொன்னபிறகும், உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்கள் என்று சொன்னீர்களே! அதாவது ஞாபகம் இருக்கிறதா? இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தை, காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து எடுத்து, வருவாய்த் துறையின்கீழ் காவல் நிலைய நிர்வாகத்தை உயர்நீதிமன்றமே ஒப்படைத்ததே, அது யாருடைய ஆட்சி? உங்கள் ஆட்சிதானே! போலீஸ் துறை உங்களிடம்தானே இருந்தது! ஞாபகம் இருக்கிறதா? இவ்வாறுதான் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சட்டம் – ஒழுங்கு பாழ்பட்டு கிடந்தது!

நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி கொலையும், சிறையில் ராம்குமார் மரணமும்தான் அ.தி.மு.க. ஆட்சி!

* திருச்சி ராமஜெயம் கொலை,

* ஏர்வாடி காஜா மொய்தீன் கொலை,

* கச்சநத்தம் பட்டியல் இனத்தவர் மூன்று பேர் படுகொலை,

* உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கொலை,

உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை,

இவ்வாறு நாள்தோறும் ‘கொலை - கொள்ளைதான்’ அ.தி.மு.க. ஆட்சியில் தலைப்புச் செய்தியாக இருந்தது!

* தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை, திருவள்ளுவர் சிலைகள் அவமதிக்கப்பட்டது. மானுட சமுதாயத்தின் உயரிய சிந்தனையாளர்களான இவர்கள் மேல் கறை பூச, நாசகார சக்திகளுக்கு எப்படி தைரியம் வந்தது? யார் கொடுத்த தைரியம் அது? அப்படிப்பட்டவர்கள் சட்டம்-ஒழுங்கு பற்றி பாடம் எடுக்கலாமா?

*பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது யார்? அதற்கு என்ன காரணம்? குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களையும் அந்தச் சட்டத்தில் இருந்து தப்பிக்க விட்டது யார்?

அவ்வாறு ஒரு கொடூரமான கும்பலைக் காப்பாற்ற வெட்கமே படாமல் செயல்பட்டதுதான், கூவத்தூரில் தவழ்ந்து பதவி பெற்ற பழனிசாமியின் அதிமுக ஆட்சி!

தமிழ்நாடு அரசின் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித்துறை சோதனை, தமிழ்நாட்டு வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கின்ற அந்தச் சம்பவம் நடந்தது அதிமுக ஆட்சியில்தான். தமிழ்நாடு காவல்துறைக்கே தலைவரான டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடந்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்!

இவ்வாறெலாம் ஆட்சி நடத்தி, தமிழர் விரோத பா.ஜ.க.விற்கு அடிமை சேவகம் செய்து, மோசமான - மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஆட்சியை நடத்திய, ‘பழனிசாமி – பன்னீர்செல்வம் கம்பெனி’, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இப்போது வாக்கு கேட்கிறார்கள்? எந்தத் தகுதியோடு தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கிறார்கள்? ஒருபக்கம் மக்கள் விரோத ஆட்சியை நடத்திவிட்டு, இன்னொரு பக்கம் கோமாளிக் கூத்துகளை நடத்திக்கொண்டு இருந்தவர்தான் பழனிசாமி!

இதே தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும் இரண்டே மாதங்களில், 100 கொலைகள் நடக்கவிட்டு வேடிக்கை பார்த்த வரலாறு அ.தி.மு.க. ஆட்சிக்கு இருக்கிறது! அம்மையார் ஜெயலலிதா ஓய்வெடுக்கப் பயன்படுத்திய கொடநாடு பங்களாவில், கொலையும் கொள்ளையும் நடந்ததே! மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தீர்களா! கொடநாடு என்று சொன்னாலே அம்மையார் ஜெயலலிதாவின் பெயர்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும்! ஆனால், இப்போது அங்கு நடந்த கொலை – கொள்ளைதான் ஞாபகத்திற்கு வருகிறது! ஹாலிவுட் த்ரில்லர் படத்திற்கு இணையாக இருக்கிறது, அங்கு நடந்த சம்பவம்! அம்மையார் ஜெயலலிதா அவர்கள், கொடநாட்டில் பல நூறு ஏக்கர் நிலங்களை தொடர்ச்சியாக வாங்கினார். பெரிய பங்களாவைக் கட்டினார். அவர் சென்னையில் இல்லை என்றால், கொடநாட்டில்தான் இருப்பார். முதலமைச்சராக இருக்கும்போதே பல வாரங்கள் கொடநாட்டில் தங்கி இருப்பார். அம்மையார் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதே, அந்த பங்களாவில் ஒரு கொள்ளை முயற்சி நடந்தது. ஆனால் அது அப்போது தடுக்கப்பட்டது. அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017 ஏப்ரல் 24-ஆம் நாள் நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் ஒன்பதாவது எண் நுழைவாயிலில், 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அப்போது, ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார். கொள்ளையடித்த 11 பேர் கும்பல், இங்கிருந்து தப்பித்தார்கள். இதில் சம்பந்தப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்த கனகராஜ். இவர் அம்மையார் ஜெயலலிதாவினுடைய கார் டிரைவராக இருந்தவர்.

ஜாமீனில் வெளியில் வந்த சேலம் கனகராஜ் மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவருடைய உறவினர்கள் பேட்டி கொடுத்தார்கள். இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சயான் என்பவரது மனைவியும் மகளும் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள். இதில் சயான் மட்டும் தப்பினார். இந்தச் சம்பவம் நடந்த 15-ஆவது நாள், கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு ஐந்து பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்த மர்மமான வழக்குதான், இந்த கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு! யாரும் இதை மறக்கவில்லை பழனிசாமி அவர்களே! அதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்!

கொடநாடு பங்களா மர்மம் இப்படி என்றால், அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று விசாரணை ஆணையத்தை உங்கள் ஆட்சியிலேயே அமைத்தீர்களே, அந்த ஆணையத்தையும் முடக்குனீர்களே, அந்தக் கதையையும் கொஞ்சம் ஞாபகப்படுத்தட்டுமா!

அதற்காகக் கூட ‘தர்மயுத்தம்’ என்று ஒன்றை, ஒருவர் நடத்தினாரே, அதாவது ஞாபகம் இருக்கிறதா? உங்கள் பக்கத்திலேயே இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வத்தை கேளுங்கள்… ‘மனம் அறிந்து பொய் பேசினால் மனதே நம்மை தண்டிக்கும்’ என்று உண்மைகளை வரிசையாகச் சொல்லுவார். அவர் சொல்கிறாரோ இல்லையோ, நீங்கள் சொல்கிறீர்களே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று, அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வருவேன் என்று வாக்குறுதி தந்தேன். அதன்படி, ஓ.பன்னீர்செல்வமும் நீங்களும் கூட்டணி வைத்து முடக்கிவிட்டுச் சென்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் இப்போது செயல்படப் போகிறது. விரைவிலேயே நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் உண்மைகளை சொல்லத்தான் போகிறது!

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது; நிர்வாகம் நேர்மையாக நடக்கிறது; அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்றுகிறார்கள்; சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன; ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க. அரசின் திட்டங்கள் சென்று சேருகின்றன.

* தேர்தலுக்கு முன்பே, எல்லாத் தொகுதிகளுக்கும் சென்று மனுக்களை வாங்கினேன். அதில், 2 இலட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. அந்தப் பயனாளிகளிடம் சென்று கேளுங்கள்!

* மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்று உத்தரவு போட்டிருக்கிறோம்.ம் பேருந்துகளில் ஏறிப் பயணம் செய்யும் பெண்களிடம் “நீங்க டிக்கெட் எடுத்துப் பயணம் செய்கிறீர்களா?, இல்லை இலவசப் பயணமா?” என்று பழனிசாமி கேட்கட்டும்!

* மக்களின் வீட்டுக்கே சென்று, ஸ்டாலின் 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தாரா இல்லையா என்று கேட்கட்டும்!

* குடும்ப அட்டை வைத்திருக்கின்ற ஒரு வீட்டுக்குப் சென்று, கொரோனா கால நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருள்கள் கிடைத்ததா? இல்லையா என்று கேட்கட்டும்.

* பொங்கலுக்கு 22 வகையான பொருள் கிடைத்ததா இல்லையா என்று கேட்கட்டும்.

* ஆவின் பால் வாங்குபவர்களிடம் சென்று 3 ரூபாய் குறைந்திருக்கிறதா இல்லையா என்று கேட்டுப் பார்க்கட்டும்!

* மோட்டார் பைக்கில் போகின்ற ஒருவரை நிறுத்தி, லிட்டருக்கு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைந்திருக்கிறதா இல்லையா என்று கேட்கட்டும். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, இந்தியா முழுவதும் பெட்ரோல் - டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது. அந்த விலையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தவும் இல்லை; குறைக்கவும் இல்லை! ஆனால், நாட்டுக்கே முன்னோடியாக கழக அரசுதான் முதலில் பெட்ரோல் விலையை குறைத்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் வியாபரம் செய்தவர்களும், அன்றாடம் வேலைக்கு போகிறவர்களும் பெரிதும் பயனடைந்தார்கள்.

* மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்ந்திருக்கிறதா இல்லையா என்று கேட்கட்டும்.

* ஒருகாலப் பூஜை செய்யும் திட்டத்தின்கீழ் உள்ள கோயில் அர்ச்சகரிடம் சென்று, மாத ஊக்கத்தொகை தருகிறார்களா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

* திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு, மாத ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்ததா என்று கேட்கட்டும்.

* சம்பா பருவப் பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைத்ததா என்று கேட்கட்டும்!

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் கிடைத்திருக்கிறதா என்று கேட்கட்டும்.

* காவிரி டெல்டாவில் 61 கோடி ரூபாய் செலவில், குறுவை சாகுபடித் தொகுப்பு கிடைத்திருக்கிறதா என்று, பழனிசாமி அவர்களே கேளுங்கள்.

* நெசவாளர்களிடம் பஞ்சிற்கு ஒரு விழுக்காடு நுழைவு வரி ரத்தாகி இருக்கிறதா இல்லையா என்று கேளுங்கள்.

* அரசுப் பணியாளர்களிடம் 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்ந்திருக்கிறதா இல்லையா என்று கேளுங்கள்.

* ஓய்வுபெற்ற 2,457 போக்குவரத்து ஊழியர்களுக்கு, ஓய்வூதிய நிலுவைத் தொகையான 497 கோடியே 32 லட்ச ரூபாயை கொடுத்திருக்கிறேனா இல்லையா என்று சென்று கேளுங்கள்.

* 13 லட்சம் பேரின் நகைக்கடன் ரத்தாகி இருக்கிறது. அது உண்மையா இல்லையா என்று அவர்களிடம் சென்று கேளுங்கள்.

* ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்’ மூலம் 50 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். அது பொய் என்று நிரூபிக்க திராணி இருக்கிறதா?

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. வேண்டும் என்றால் அது சரியான தகவலா என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.

- இந்த வேலையைப் பழனிசாமி ஒழுங்காக ஒரு மணி நேரம் பார்த்தால், உண்மையில் கடந்த ஒன்பது மாதகாலம் எந்த வகையில் எல்லாம் மக்களுக்கு தி.மு.க. நன்மை செய்திருக்கிறது என்று அவர் தெரிந்து கொள்ளலாம்! பத்தாண்டுகாலம் தமிழ்நாட்டையே பாழ்படுத்திய அ.தி.மு.க.வைச் சேர்ந்த, பழனிசாமி - பன்னீர்செல்வம் நாடகக் கம்பெனி தி.மு.க.வைப் பார்த்து எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று சொல்வது பூனை கண்ணை மூடிட்டு உலகமே இருட்டாக இருக்கிறது என்று சொல்வதற்கு ஒப்பானது.

"உங்கள் சகோதரனான இந்த ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள்!": முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை!

‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ இதுதான் தி.மு.க.வினுடைய முழக்கம்! அதன்படித்தான் நடக்கிறோம்! எந்நாளும் நடப்போம்!

* மகளிர் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று சொன்னோம். எத்தனையோ திட்டங்களை, அறிவிப்புகளைக் கடந்த ஒன்பது மாதங்களில் வெளியிட்டிருக்கிறேன்.

அவற்றுள் ‘மகளிருக்கு நகரப் பேருந்தில் இலவசப் பயணம்’ என்று கையெழுத்து போட்டதுதான் என் நெஞ்சிற்கு நெருக்கமான திட்டம்!

வேலைக்குச் செல்லும் பெண்கள்- காய்கறி- பூ- மீன் எனச் சிறு வியாபாரங்களுக்குச் செல்லும் தாய்மார்கள்- கல்லூரிகளுக்குச் செல்லும் சகோதரிகள்- ஏன், உற்றார் உறவினர்களைச் சந்திக்க செல்லும் பெண்கள் எல்லாம்- இந்தத் திட்டத்தால் இன்று பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தால் நாளொன்றுக்கும் 35 லட்சம் சகோதரிகள் பயணம் செய்கிறார்கள். இதுவரை பயணம் செய்த சகோதரிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

76 கோடியே 64 லட்சம் பேர்! இதனால், 1,226 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அது இழப்பு இல்லை! பெண்கள் முன்னேற்றத்திற்கான இன்னொரு படி! இந்தப் பயணத்தின்போது என்னுடைய சகோதரிகளின் முகத்தில் ஏற்படுகிற மலர்ச்சியை பார்க்கும்போது, அதைவிட மகிழ்ச்சியை கொடுக்கின்ற வேறு எதுவும் இல்லை என்று எனக்குத் தோன்றும்! இலவச மின்சாரம் பெற்ற உழவர்களின் மகிழ்ச்சிக்கு இணையானது என் சகோதரிகளின் மகிழ்ச்சி!

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே, தன் வாழ்நாளெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவே சிந்தித்தாரே முத்தமிழறிஞர் கலைஞர் - அவர்களையும் மனதில் நினைத்து, என் சகோதரிகளின் மகிழ்ச்சியை என்னுடைய மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு செயல்படுகிறேன்.

இன்றைக்கு ஒரு செய்தியை பார்த்தேன். கோவையில் ஸ்டெஃபன் என்ற ருமேனியா நாட்டைச் சேர்ந்த பயணி, பேருந்தில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்வதைப் பார்த்து இந்தத் திட்டத்தை பற்றியும், தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களைப் பற்றி தன்னுடைய நண்பரான மருத்துவர் கோகுல் என்பவரிடம் கேட்டு தெரிந்துகொண்டு, கழகத்துக்காக உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு ஆதரவாக வாக்கு கேட்டிருக்கிறார்.

இவ்வாறுதான் இந்த அரசினுடைய திட்டங்கள் அமைந்திருக்கின்றன. என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த ஸ்டாலின் ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டுக் கோட்டையில் உட்கார்ந்து இருப்பவன் அல்ல, மக்களோடு மக்களாக நாள்தோறும் இருந்து, அந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்றும் ஆய்வு செய்கிறேன். நான் காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கிறேன். மக்களோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கின்ற காவல்துறை, பொதுமக்களோடு நண்பனாக செயல்பட வேண்டும் என்று நினைப்பன் நான்!

அதனால்தான், தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்திற்குச் சென்று, காவல்நிலையப் பணிகளை ஆய்வு செய்தேன். பொங்கல் பரிசை அறிவித்ததோடு மட்டுமில்லாமல், பல ரேஷன் கடைகளுக்கும் நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். தரமான சாலைகளைப் போடவேண்டும், மில்லிங் பண்ணித்தான் சாலை போடவேண்டும் என்று நள்ளிரவில் கூட நேரில் பார்வையிட்டு அறிவுறுத்தினேன்.

ஆதிதிராவிட மாணவர்களின் நலன் காக்க, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அக்கறையோடு ஆய்வு செய்தேன்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்ட, ‘P.P.E Kit’ போட்டுக்கொண்டு, நானே கொரோனா வார்டிற்குள் சென்று ஆய்வு செய்தேன்.

மாணவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி என அறிவித்த உடனே, ‘ஒரு பெற்றோருக்கே உள்ள அக்கறையோடு’ பள்ளிக்குச் சென்று பார்வையிட்டேன்.

சகோதரி அஸ்வினியின் சுயமரியாதையைக் காக்க, பூஞ்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று அவருக்கு மட்டுமல்ல, அங்கிருந்த ஒட்டுமொத்த என்னுடைய சகோதர - சகோதரிகளின் குடும்பங்களுக்கு உறுதுணையாக நின்று, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்தேன்.

தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் சொன்னதை, நித்தமும் நெஞ்சில் ஏந்திக் கொள்கை உணர்வோடு இந்தத் தமிழினத்துக்காக மக்களோடு மக்களாக நின்று பணியாற்றுபவன்தான் இந்த ஸ்டாலின்!

இவ்வாறு மக்கள் நலனுக்காகச் செயல்படும் இந்த அரசு, கடந்த சில மாதங்களில் செய்த சாதனைகளில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

* கொரோனா கால நிவாரணமாக 4,000 ரூபாய்;

* ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு;

* பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு;

* முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ரூபாய் 317 கோடி ரூபாயிலான பல்வேறு திட்டங்கள்;

* மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு உதவித் தொகை 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்வு;

* மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்;

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்;

* ஒரு காலப்பூஜைத் திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்;

* 7.5 விழுக்காடு சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு சேர்க்கை ஆணை;

* கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகளைத் திரும்பப்பெற்றது;

* "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்";

* திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்கும் திட்டம்;

* வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க "புலம்பெயர் தமிழர் நலவாரியம்" என்ற புதிய வாரியம் தோற்றுவிப்பு;

* சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான 1,597 கோடியே 18 லட்சம் ரூபாயைச் சுமார் 6 இலட்சம் உழவர்களுக்கு வழங்கும் பணி;

* "இல்லம் தேடிக் கல்வி" திட்டம்;

* தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலைக்குறைப்பு;

* மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவி;

* 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்;

* "இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்";

* "மீண்டும் மஞ்சப்பை" விழிப்புணர்வு இயக்கம்;

* இந்த நிதியாண்டில், 4 இலட்சத்து 2 ஆயிரத்து 829 பேர் கொண்ட 29 ஆயிரத்து 425 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது;

* சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் நினைவு மண்டபம்;

* நெசவாளர் கோரிக்கையை ஏற்று பஞ்சிற்கு நுழைவு வரி ரத்து;

* அரசுப் பணியாளர்களுக்கு 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு;

* தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம்;

* கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்களும், தமிழக வரலாற்றில் முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களும் ரத்து;

- இவ்வாறு பல சாதனைகளை நாம் செய்துகொண்டு வருகிறோம்.

நாம் இன்று செய்யும் சாதனைகள்- நாளை இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கும்! முப்பது ஆண்டுக்கும் முன்னால், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று சொன்னோம். அது இந்திய அளவில் சட்டமானது! இலவச கேஸ் அடுப்பு வழங்கினோம். அதுவும் பின்னால் இந்திய அளவில் திட்டமானது! உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம். அதைத்தான் இன்றைக்கு உத்தரப் பிரதேச அரசியலில் வாக்குறுதியாக கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் வெற்றிபெற்று நிறைவேற்றுவார்களா இல்லையா என்று நமக்குத் தெரியாது! ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் தி.மு.க. ஒன்று சொன்னால்- அதை நிச்சயம் செய்யும்!

என்னதான்- ‘பச்சைப் பொய்’ பழனிசாமியும் - ‘பக்கவாத்தியம்’ ஓ. பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! ஏன் என்றால், இந்த அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பயனை அனுபவிப்பவர்கள் அனைத்து இல்லங்களிலும் இருக்கிறார்கள்! ஏன், அ.தி.மு.க. தொண்டர்களும் பயன்பெறுகிறார்கள்! இதையெல்லாம் அ.தி.மு.க. அரசு நிதிநிலையைச் சீரழித்து நிலையிலும் சாதித்திருக்கிறோம்! சீரழிக்கிறது மட்டும்தான் ‘பழனிசாமி - பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனிக்குத்’ தெரியும். அவர்கள் நிதிநிலைமையை எவ்வாறு சீரழித்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டு அரசிற்கு இப்போது ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடன்.

இதுதான் அ.தி.மு.க. விட்விடுட்டுச் சென்ற நிதிநிலைமை. 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, தமிழ்நாட்டினுடைய கடன் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்தான் இருந்தது. அதிலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த கடனினுடைய தொடர்ச்சிதான். ஆனால், கடந்த பத்தாண்டுகாலத்தில் மட்டும் ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக கடனை உயர்த்தி, தமிழ்நாட்டைக் கடனாளி மாநிலம் ஆக்கியது அ.தி.மு.க.தான்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 60 ஆண்டுகளாக 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடனை, பத்தே ஆண்டுகளில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி, நிதிப் பற்றாக்குறை- வருவாய்ப் பற்றாக்குறை- மலையளவு கடனை வைத்துவிட்டு, தமிழ்நாட்டு நிதிநிலைமை வரலாற்றில் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்திப் போய்விட்டார்கள். இப்போது நாம் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டின் நிதிநிலைமையையும் தலைநிமிர வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான் நான் சொன்ன மக்கள் நலத் திட்டங்களை, உதவிகளைத் தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கிறோம் என்றால்-

அதற்கு ஒரே காரணம், தி.மு.க. அரசு என்பது மக்கள்நலன் காக்கும் அரசு! உங்கள் நலன் காக்கும் அரசு! அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகளைக் களைந்து மக்களுக்கு நகைக்கடனைத் தள்ளுபடி செய்தோம்! அ.தி.மு.க. ஆட்சியில் எப்படியெல்லாம் நகைக்கடன் முறைகேடுகள் நடந்தது என்று கேட்டீர்கள் என்றால்

* போலி நகைகளை வைத்துக் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

* நகைகளே இல்லாமல், நகைகளை வைத்தது மாதிரியும் பொய்க் கணக்கு காட்டியிருக்கிறார்கள்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வங்கியில் 500 நகைப் பொட்டலங்களில் 261 பொட்டலங்களில் நகைகளே இல்லை! வெறும் பொட்டலம்தான் இருக்கிறது. அதை வைத்து மட்டும் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

* நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர் 11 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய்க்குக் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்துள்ளார்.

* ஒரே நபர் 5 சவரன் அடிப்படையில் 625 நகைக் கடன்கள் மூலம், ஒன்றேகால் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.

* இன்னொருவர் 647 நகைக்கடன்கள் மூலம், 1 கோடியே 47 லட்சம் ரூபாய் நகைக் கடன் பெற்றுள்ளார்.

* ஒரே ஒரு ஆள் 7 கோடி ரூபாய் வரைக்கும் கடன் வாங்கியிருக்கிறார்.

இப்படி என்னால் வரிசையாகப் பட்டியல் போட முடியும்!

எந்தத் திட்டமாக இருந்தாலும் அதற்கான பயனாளிகள், உண்மையாக இருக்க வேண்டும்! அதுதான் அரசின் திட்டங்களில் மிகமிக அடிப்படையானது. மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றும் திட்டங்களைப் பொறுப்பாகச் செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை மோசடியாகப் பயன்படுத்தி இதுபோலக் கடன் பெற்றவர்களைப் பிரித்தெடுத்துவிட்டோம். அ.தி.மு.க.காரர்களை வைத்துச் செய்த நகை மோசடிக்கு வெறும் பொட்டலத்துக்கு "ஏன் நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை" என்று பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கேட்கிறார்கள். உண்மையான பயனாளிகள் எல்லாருக்கும் நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி. கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாகப் பணம் கொடுக்கச் சொல்லி அதிமுக ஆட்சிக்காலத்தில் நான் கோரிக்கை வைத்தேன். 'பணம் எங்கே இருக்கிறது?' என்று கூட கேட்டார். ஆனால் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவர்க்கும் கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீள 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம்னு அறிவித்து 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினோம்.

ஏழை, எளிய மக்கள்- அன்றாடங்காய்ச்சிகள்- தினக்கூலி பெறுபவர்கள்- பூக்கடை வைத்திருப்பவர்கள்- ஆட்டோ டிரைவர்கள்- வார வேலைக்குச் செல்பவர்கள்- முதியவர்கள்- நோயாளிகள்- கைம்பெண்கள்- விளிம்பு நிலை மக்கள் இதன் மூலமாக அடைந்த பலனைச் சொற்களால் விவரித்திட முடியாது. கட்டுப்பாடுகளைப் போடவில்லை என்றால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்பாடுகளைப் போட்டால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த இரண்டையுமே ஒரு அரசு சமாளித்தாக வேண்டும். வேறு வழி இல்லை! அதனால்தான் ஆட்சிக்கு வந்ததும் நிதி நிலைமை மிக மோசமாக இருந்தாலும் 4 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தோம். அதுமட்டுமில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 466 ரூபாய் மதிப்பிலான 14 விதமான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு 977 கோடியே 11 லட்ச ரூபாய் செலவில் வழங்கினோம். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 22 விதமான பொருட்களையும் வழங்கினோம். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த எட்டு மாத காலத்தில் இரண்டு முறை மளிகைப் பொருட்களையும், நான்காயிரம் ரூபாயையும் அரசு வழங்கி இருக்கிறது. இதெல்லாம் மக்களுக்குத்தானே போய்ச் சேர்ந்தது? நான் சொல்வது உண்மையா? அல்லது பழனிசாமி சொல்வது உண்மையா என்று இதனால் பயனடைந்த கோடிக்கணக்கான மக்களுக்குத் தெரியும்!

திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கை - கோட்பாடுகளைக் கொண்ட இயக்கம்! அந்தக் கொள்கைகளை வென்றெடுப்பதற்காக தேர்தலில் இறங்கிய இயக்கம். அந்தக் கொள்கைகளைத் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்க விரும்பும் இயக்கம். அ.தி.மு.க. போல கொத்தடிமைகளின் கூடாரம் கிடையாது! அந்தக் கொத்தடிமைகள் கூட்டத்துக்கு எங்களை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.

* நெடுஞ்சாலை டெண்டர்களா? பழனிசாமி!

* வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பா? பன்னீர்செல்வம்!

* உள்ளாட்சியில் ஊழலாட்சியா? வேலுமணி!

* தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் முறைகேடா? தரமற்ற நிலக்கரி இறக்குமதியா? தங்கமணி!

* குட்கா முதல் கொரோனா வரை எல்லாவற்றிலும் கொள்ளையா? டாக்டர் விஜயபாஸ்கர்!

* பருப்பு கொள்முதல் முறைகேடா? காமராஜ்!

* வேலைவாங்கித் தருவதில் மோசடியா? ராஜேந்திரபாலாஜி!

* முட்டை கொள்முதல் ஊழலா? சரோஜா!

* பத்திரப்பதிவா? வீரமணி!

* கனிமவளமா? சி.வி.சண்முகம்!

இதுதான் அதிமுக ஆட்சியாக இருந்தது.

இந்த ஆட்டத்துக்குத்தான் இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு மக்கள் தண்டனை தந்தார்கள்! “ஒன்பது மாதம் ஆகிவிட்டதே! மக்கள் மறந்திருப்பார்கள்” என்று நினைத்துக் கொண்டு, என்னவோ மகா யோக்கியர்களைப் போல அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வலம் வருகிறார்கள். மக்கள் எதையும் மறக்கவில்லை! மறக்கவும் மாட்டார்கள்! மறப்பது மாதிரியான செயலா நீங்கள் செய்தவை எல்லாம்! தமிழக வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவான களங்கமல்லவா அவை! பழனிசாமிக்கு மற்றொன்றையும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கேன். இவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை நடத்துவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டதை அவர் மறந்திருந்தாலும் மக்கள் மறக்கவில்லை. “பொது ஊழியர் என்ற முறையில் பழனிசாமி மீதும் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உயர்நீதிமன்றத்துக்குப் போனோம். மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டாரா இல்லையா? “ஒரு முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு வைக்கும்போது அது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் அரசு தரப்பு நீதிமன்றத்துக்கு ஏன் தரவில்லை?" என்று நீதிபதி கேட்டு இந்தப் புகாரை சிபிஐ-க்கு ஒப்படைக்கச் சொல்லி நீதிபதி சொன்னாரா இல்லையா? இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று பழனிசாமி நினைக்கிறாரா?

அப்போது டெல்லி போன பழனிசாமியிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டபோது என்ன சொன்னார்? “நான் தவறு செய்யவில்லை. உறவினர்களுக்கு டெண்டர் தரவில்லை”என்று சொல்லவில்லை. மாறாக, “யார் மீதுதான் லஞ்சப் புகார் இல்லை”என்று நிருபர்களிடம் சிரித்துக்கொண்டே கேட்டவர்தான் இந்தப் பழனிசாமி!

இப்படியெல்லாம் செய்த ஊழலை மறைக்க இப்போது பொய் சொல்கிறவர் தனது பொய்கள் மூலமாகத் தி.மு.க. அரசின் சாதனைகளையும் மறைத்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார். 'நிலம் தருவதாகச் சொன்ன கலைஞர், நிலமே தரவில்லை' என்று சொல்லியிருக்கிறார் இந்த பச்சைப் பொய் பழனிசாமி.

இதற்கு நானும் பல முறை பதில் தந்திருக்கிறேன். இங்கேயும் இப்போது திரும்பவும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கேன். 2006-ஆம் ஆண்டு தேர்தலில் மூன்று முக்கியமான வாக்குறுதிகளைத் தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்தார்.

* கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய 7000 கோடி ரூபாய் கடன் ரத்து என்பது முதலாவது. பதவி ஏற்பு விழா மேடையிலேயே 7000 கோடி ரூபாய் கடனையும் ரத்து செய்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

* நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவேன் என்று சொன்னார். அந்த அடிப்படையில நிலமும் வழங்கப்பட்டது.

1 லட்சத்து 89 ஆயிரத்து, 719 ஏக்கர் நிலத்தை -

1 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சிதான் கலைஞர் ஆட்சி.

17.9.2006 அன்று திருவாரூரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அன்றைய தினம் 24 ஆயிரத்து 358 குடும்பங்களுக்கு நிலம் தரப்பட்டது.

17.12.2006 அன்று விழுப்புரத்தில் 26 ஆயிரத்து 749 பேருக்கும்-

17.3.2007 அன்று திருவண்ணாமலையில் 20 ஆயிரத்து 648 பேருக்கும்-

17.6.2007 அன்று நெல்லையில் 19 ஆயிரத்து 821 பேருக்கும்-

29.12.2007 அன்று ஈரோட்டில் 21 ஆயிரத்து 487 பேருக்கும்-

17.3.2008 அன்று 13 ஆயிரத்து 270 பேருக்கும் நிலம் வழங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

இது மட்டும் இல்லை, கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ அப்போதெல்லாம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்க்கு நிலம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வந்திருக்கிறது.

1967 முதல் 1976 வரையிலான திமுக ஆட்சியிலேயே 3 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு 7 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் நிலம் தரப்பட்டது.

1996- 2001 காலக்கட்டத்தில் 52 ஆயிரத்து 792 பேருக்கு 35 ஆயிரத்து 696 ஏக்கர் நிலம் தரப்பட்டது. இது எதுவுமே தெரியாமல், தெரிந்து கொள்ள முயற்சியும் செய்யாமல் வாய்க்கு வந்ததைப் பிதற்றுகிறார் பழனிசாமி.

2011 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையோ-

2016 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையோ-

நிறைவேற்றாத ஆட்சிதான் இந்த அதிமுக ஆட்சி.

பழனிசாமியை நான் கேட்டுக்கொள்வது எல்லாம் - முதலில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை எடுத்துப் பாருங்கள். எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் பத்தாண்டுக் காலத்தில் மறந்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். அதன்பிறகு அடுத்தவர்கள் மேல் குறை சொல்லலாம். அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கத் தயாரா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். சொல்லிக் கேட்பதற்கு எந்தச் சாதனையும் இல்லாத காரணத்தால் வேதனைகள் மட்டுமே நிரம்பி இருக்குற காரணத்தால் அதை மறைப்பதற்காகத் திமுக ஆட்சியைப் பற்றியும்; என்னைப் பற்றியும் அவதூறான குற்றச்சாட்டுகளை; ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் வாங்கிய மரண அடிதான் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கிடைக்கப் போகிறது என்று அவருக்கே நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான், தொடர் தோல்விகளின் விரக்தியில் உளறிக்கொண்டு இருக்கிறார். இத்தகைய விரக்தியாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.

21 மாநகராட்சிகள் -

138 நகராட்சிகள் -

490 பேரூராட்சிகள் - என

மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது.

1374 மாநகராட்சி உறுப்பினர்கள் -

8288 பேரூராட்சி உறுப்பினர்கள் -

3468 நகராட்சி உறுப்பினர்கள் ஒரே கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

இவை அனைத்திலுமே கழக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். ஸ்டாலின் ஏதோ பேராசைப்படுகிறான் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. நான் நினைப்பது பேராசை அல்ல. என்னுடைய இந்த எண்ணம் என்பது சுயநலமான எண்ணம் அல்ல. பொதுநலத்தோடுதான் இப்படி ஆசைப்படுகிறேன். எல்லா இடங்களிலும் முழுமையான வெற்றியை நாம் அடைந்தால்தான் கோட்டையில் இருந்து நாம் அறிவிக்கிற நலத்திட்டங்கள் எல்லாம் கடைக்கோடி மனிதரையும் முறையாக, சரியாகப் போய்ச் சேரும்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றுகிற திட்டங்களை - அரசாங்கம் வழங்கும் உதவிகளை – மக்கள் கையில் சேர்க்கும் கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கையில்தான் இருக்கிறது. அதனால்தான் அனைத்து நன்மைகளும் அனைவரையும் சென்றடைய நமது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறவேண்டும் என்று நான் சொல்கிறேனே தவிர, வேறல்ல!

நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுக்க உள்ள 12 ஆயிரத்து 825 பதவிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களும்தான் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான் அது முழுமையான வெற்றியாக மகத்தான வெற்றியாக இருக்கும். சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றுகிற நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம்முடைய கையில் இருக்க வேண்டும்.

"உங்கள் சகோதரனான இந்த ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள்!": முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை!

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நம் மாநிலம் என்ன நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே தெரியும். நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை!

உள்ளாட்சித் தேர்தலையே நடத்த மனமில்லாமல் நாட்களைக் கடத்திக் கொண்டு போன ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி. உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் - தி.மு.க.வினர் வெற்றி பெற்று விடுவார்கள். வெற்றி பெற்று வந்தால் அ.தி.மு.க.வினரோடு ஊழல்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவார்கள் என்று அஞ்சி நடுங்கி, உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் வைத்திருந்த ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி. அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி, சுண்ணாம்பு பவுடர் வாங்குவதில் இருந்து பினாயில் வாங்குவதுவரை ஊழல் செய்த‘கறை படிந்த கைகளுக்குச் சொந்தக்காரர்’! உள்ளாட்சி அமைப்புகளில் நடந்திருக்கும் ஊழல்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் டானியல் ஜேசுதாஸ் என்பவர் பல தகவல்கள வாங்கி அப்போதே வெளிப்படுத்தினார். 25 கிலோ கொண்ட சுண்ணாம்பு பவுடர் தனியார் கடைகளில் 170 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆனால் 842 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்! பினாயில் ஒரு பாட்டில் 20 ரூபாய்க்குக் கடையில் கிடைக்கிறது. அதை 130 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்! சாக்கடை அடைப்பைச் சரி செய்யும் டிச்சு கொத்து - அதனுடைய விலை 130 ரூபாய். ஆனால் அதை 1,010 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்!

1500 ரூபாய் மதிப்புள்ள மோட்டாரை 29 ஆயிரத்து 465 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். 1,712 ரூபாய் மதிப்பிலான காப்பர் வயரை 8,429 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். 870 ரூபாய் மதிப்பிலான லைட் ஃபிட்டிங்கை 2,080 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.

இப்படி பொருட்கள் வாங்கியதில் மட்டும் ஒரு ஊராட்சிக்கு 1 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 12 ஆயிரம் ஊராட்சிகளில் மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தைச் சுருட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக டேனியல் ஜேசுதாஸ் அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு அன்று அமைச்சராக இருந்த வேலுமணி பதில் சொல்லவில்லை. சொல்லக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை!

ஆனால், வெற்றி பெற்று உள்ளாட்சிப் பதவியில் உட்கார உள்ள தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மக்கள் பிரதிநிதிகள் உங்களுக்காக உண்மையாக உழைப்பார்கள். தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை உங்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். மக்கள் கூப்பிட்ட குரலுக்கு வருவார்கள். உங்களைத் தாங்கும் நிலமாக இருப்பார்கள். உங்களைக் காக்கும் அரணாக இருப்பார்கள். தாயைப் போல உங்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகளை நான் இங்கிருந்து தொடர்ந்து கண்காணிப்பேன். உங்களுக்குப் பணியாற்றக் கட்டளையிடுவேன். நம் அரசு தீட்டும் திட்டங்கள் உங்களை வந்து சேர்ந்துவிட்டதா என்று நானே சரிபார்ப்பேன். என்னை நம்பி வாக்களியுங்கள்.

ஆட்சிக்கு வந்தவுடனே அ.தி.மு.க. ஆட்சியில்- கொரோனா பிடியில் சிக்கி வாழ்வாதாரச் சிக்கலில் இருந்தவர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாயை எந்தவிதமான புகாருக்கும் இடமில்லாமல் வழங்கியது தி.மு.க. ஆட்சி! கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கொடுத்தது தி.மு.க. அரசு! தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக 3 லட்ச ரூபாய் வழங்கியது தி.மு.க. அரசு! கொரோனாவில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் இந்தியாவிலேயே முதன்முதலில் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கியது நமது அரசுதான்! இலங்கைக் கடற்படையால் சேதாரப்படுத்தப்பட்ட மீனவர்களின் 108 படகுகளுக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்கியது இந்த திமுக அரசுதான். 17 நாட்டுப் படகுகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கியதும் திமுக அரசுதான். மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது திமுக அரசு! மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை 1,500 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கியது திமுக அரசு. இப்படி பல நிதி உதவிகளை வழங்கியது திமுக அரசு விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம். இந்த ஸ்டாலின் ஒன்றைச் சொன்னால் அதை நிச்சயம் நிறைவேத்துவான்!

திமுக ஆட்சி என்பது உதயசூரியனின் ஆட்சி. எல்லோருக்கும் விடியல் தரும் ஆட்சி! பள்ளிப் பருவக் காலத்திலேயே கழகத்தில் என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவன் நான். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் ஊட்டி வளர்த்த கொள்கையில் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அன்று வளர்ந்து வந்தார்கள். இன்றைக்கு இலட்சோப லட்சம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளால் தலைவராகவும் கோடிக்கணக்கான மக்களால் முதலமைச்சராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறேன் என்றால் அதற்கு அவர்கள் ஊட்டிய உரமும் கொள்கைத் திறமும்தான் காரணம்.

இந்த நிகழ்வுகளை எனது வாழ்க்கைக் குறிப்புகளாக நான் எழுதி இருக்கிறேன். 'உங்களில் ஒருவன்' நூல் முதல் பாகமாக வருகிற 28-ஆம் தேதி சென்னையில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது. அன்புக்குரிய ராகுல்காந்தி அவர்களும், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களும், பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வீ அவர்களும் வருகை தர இருக்கிறார்கள். நம்முடைய பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், இனமான நடிகர் சத்யராஜ் அவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.

எனது முதல் 23 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை இந்த முதல் பாகத்தில் பதிவு செய்துள்ளேன். 1976-ஆம் ஆண்டு வரையிலான நினைவுகள் இவை. இந்த நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கும்போது எத்தகைய மகத்தான தலைவர்கள் நம்முடைய இயக்கத்துக்குக் கிடைத்துள்ளார்கள் என்ற பெருமிதத்தையும்; எத்தகைய கொள்கைக்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற கம்பீரமும்; எத்தகைய போராட்டங்களின் மூலமாக நம்முடைய இயக்கம் இந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்ற உணர்ச்சியும் நான் அடைகிறேன்.

கருப்பும் சிவப்பும் நம் ரத்தத்தில் ஊறியவை. கழகமும் தமிழகமும் நம் இரு கண்கள். இந்த இரண்டுக்கும் நாம் உண்மையாக இருக்கிறோம். அதனால் மக்கள் நம் மீது நம்பிக்கையாக இருக்கிறார்கள். முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள். ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு வாக்களியுங்கள். உங்களுக்கு உழைப்பதற்கு உத்தரவிடுங்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களியுங்கள். இந்தச் சின்னங்கள்தான் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும். எனது கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றித் தாருங்கள். உங்கள் அனைவரது கோரிக்கையையும் நான் நிறைவேற்றித் தருகிறேன். வெற்றிவிழாவில் தமிழ்நாடு முழுவதும் வந்து உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories