தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., “கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்த அ.தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தவே இல்லை. அவர்களுக்கு அதற்கு தைரியம் இல்லை. ஆனால் தி.மு.க ஆட்சி அமைத்த 9 மாதங்களிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்தி காட்டியுள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதோடு மட்டுமில்லாமல் இதில் பெண்களுக்கு என்று 50 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய அரசு தி.மு.க அரசுதான்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதும் நான் தி.மு.கவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லாமல், வாக்காளிக்காதவர்களும் தங்களுக்கு வாக்களித்திருக்கலாமே என்று சொல்லும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன் என கூறினார். அதன்படி தமிழக மக்கள் அனைவருக்கும் அவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.
குறிப்பாக கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் தந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஆட்சி அமைத்த 9 மாதங்களில் 3 முறை கோவைக்கு நேரில் வந்து நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார்.
தி.மு.க ஆட்சி அமைத்தபோது கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. அதனை தி.மு.க அரசு திறம்பட கையாண்டு மக்களை காத்தது. ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சி முதல் அலையின் போது ஊரடங்கு போட்டு மக்களை மிகவும் கஷ்டப்படுத்தியது.
அ.தி.மு.க ஆட்சியில் தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு எந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. அவர்கள் ஆட்சி செய்தபோது 1 வருடத்தில் வெறும் 1 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தது.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதுமே முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மக்களிடம் சென்று, கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேராக கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டுக்கு சென்று, கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சை குறித்து கேட்டறிந்து, மக்களுக்கும், நோயாளிகளுக்கும் தைரியமூட்டினார். இதன் காரணமாக ஆட்சிப் பொறுப்பேற்ற 9 மாதங்களிலேயே 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். இது தி.மு.க அரசு படைத்த சாதனை.
இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், அனைத்து மாநில முதலமைச்சர்களையும் தாண்டி நம்முடைய முதலமைச்சர் நம்பர் ஒன் முதல்வராக உள்ளார்.
முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க அரசு கஜானாவில் 6 லட்சம் கோடி கடனை மட்டுமே வைத்திருந்தது. கொரோனாவிலும் கொள்ளையடித்த ஆட்சி என்றால் அது அ.தி.மு.க தான். குறிப்பாக உள்ளாட்சித் துறையில் பினாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளது.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தோம். அதன்படி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சிறைக்குத் தள்ளுவோம்.
எடப்பாடி பழனிசாமி தேர்தல் கூட்டத்தில் சட்டசபையை முடக்குவோம் என்று கூறி வருகிறார். அவர் எப்படி முதலமைச்சராக பதவியேற்றார் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். கூவத்தூர் சென்று சசிகலா அம்மையார் காலில் விழுந்து ஆட்சி அமைத்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி.
இப்படிப்பட்டவர் சட்டசபையை முடக்குவோம் என்று கூறுகிறார். அவர் முடக்குவதற்கு இது ஒன்றும் அடிமை அ.தி.மு.க. ஆட்சி கிடையாது. தற்போது தமிழகத்தில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க ஆட்சி.
தி.மு.க தேர்தலின்போது தெரிவித்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. கொரோனா நிவாரண உதவி 4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 குறைப்பு, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.
தொடர்ந்து அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட உரிமைத்தொகையான ரூ.1000 வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.