சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 45-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உரையாற்றினார்.
“கடந்த 45 ஆண்டுகளாகச் சென்னைக்கு மட்டுமல்லாமல் - தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் - இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ்ப் புத்தக அறிவுலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சியாக இந்த சென்னைப் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி, கடந்த சனவரி மாதம் 6-ஆம் நாள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அன்றைக்கு இருந்த சூழ்நிலை, கொரோனா தொற்றுப் பரவல் என்கிற நிலையில் நாம் இருந்த காரணத்தால், பல்வேறு நிபந்தனைகளை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டது. அந்த வகையில் புத்தகக் கண்காட்சியையும் சிறிது தள்ளி வைக்கக்கூடிய ஒரு நிலையை நாங்கள் குறிப்பிட்டுச் சொன்னோம், எடுத்துச் சொன்னோம். பபாசி சார்பில் அதன் நிர்வாகிகளும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு, பல்வேறு பதிப்பாளர்கள் இந்த கண்காட்சியை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், - ஏன், இதற்கான அரங்கமும் அமைத்த நிலையில் - பல்வேறு செலவுகள் செய்யப்பட்ட நிலையில் - கண்காட்சி நடக்கக்கூடிய அந்தத் தேதியைத் தள்ளி வைப்பது மிகவும் சிரமம் தரக்கூடிய சூழ்நிலை அமைந்திருந்தாலும் - கொரோனா பரவலை அலட்சியம் செய்யக் கூடாது என்கிற அடிப்படையில் இந்த அரசு எடுத்த அந்த முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அந்த நிகழ்ச்சியை ஒத்தி வைத்தார்கள். அதற்காக இந்த பபாசி நிறுவனத்திற்கு, இந்த அமைப்பிற்கு நான் என்னுடைய நன்றியை அரசின் சார்பில் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
சென்னையில் நடப்பதைப் போலவே, மதுரையில் 14 ஆண்டுகளாகவும், கோவையில் 4 ஆண்டுகளாகவும் இந்த புத்தகக் கண்காட்சியை பபாசி நடத்தி வருகிறது. இதேபோல மற்ற மாவட்டங்களிலும் நடத்த, அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய நிர்வாகம் உதவி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க நம்முடைய அரசு நிச்சயமாக அறிவுரை வழங்கும் என்பதை நான் முதலிலேயே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
2007-ஆம் ஆண்டு இந்தப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த நம்முடைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சென்னையில் மிகப் பிரம்மாண்டமான நூலகம் அமையப் போகிறது என்ற அறிவிப்பை அப்போதுதான் வெளியிட்டார்.
அதுதான் இன்று எல்லோரும் வியக்கக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகம் என்பதை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல் மதுரையில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய தமிழ்நாடு அரசு பணிகளைத் தொடங்கி இருக்கிறது. அந்த நூலகம் மிகப் பிரமாண்டமாக விரைவில் மதுரையில் எழ இருக்கிறது.
இது போன்ற அறிவுக்கோவில்களை கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசு தான் இந்த அரசு. இந்த அரசு என்று சொல்வதை விட நமது அரசு. திராவிட இயக்கம் என்பதே அறிவியக்கம் தான். நூற்றாண்டுகளாய் அடிமைப்படுத்தப்பட்டிருந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு சுயமரியாதையையும் பகுத்தறிவையும் ஊட்டியது திராவிட இயக்கம் தான்!
நீங்கள் ஒன்றை நன்றாக கவனித்துப் பார்க்கலாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக அலுவலகத்தின் பெயரே அண்ணா அறிவாலயம். அந்த அறிவாலயம் தொடங்கப்படுவதற்கு முன்பு திமுக-வின் முதல் தலைமையகம் எது என்று கேட்டீர்கள் என்றால், ராயபுரத்தில் இருக்கக்கூடிய அறிவகம்.
ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு புத்தகம் அச்சடித்து சுயமரியாதைப் பரப்புரையில் ஈடுபட்டு அறிவுப் புரட்சியை ஏற்படுத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம்.
'என்னுடைய வாரிசுகள் என்பது என்னுடைய புத்தகங்கள்தான்' என்று சொன்னார் தந்தைப் பெரியார் அவர்கள்.
'வீட்டுக்கொரு நூலகம் அமையுங்கள்' என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
புத்தகத்தின் மூலமாக உலகைப் படியுங்கள் என்று கட்டளையிட்டார் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அந்த வழித்தடத்தில்தான் இந்த ஸ்டாலின் அரசும், ஏன் நமது அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசுத் துறைப் பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு முகமைகளால் அரசுப் பணிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும்; நியமன அலுவலர்களால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளிலும், தமிழ் மொழித்தாளினைத் தகுதித் தேர்வாக ஆக்கி உள்ளது நம்முடைய அரசு.
ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்துத் தேர்வு வாரியங்களைப் பொறுத்தவரையில் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு நிச்சயமாக நடத்தப்படும்.
ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற திட்டத்துக்கான குறிக்கோள் சின்னத்தையும், ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்துவதற்கான நூல்களையும் நான் வெளியிட்டுள்ளேன்.
மாவட்டங்களில் உள்ள அரசு அலுவகங்களில் ஊழியர்கள் தமிழ் மொழியில் கையெழுத்து இடுவது, கோப்புகளை முழுவதும் தமிழிலேயே தயாரித்து நிறைவேற்றுவது ஆகிய செயல்பாடுகளை அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் செந்தமிழ் அந்தணர் மதுரை இரா.இளங்குமரனார் ஆகியோர் மறைவுக்கு அரசு மரியாதை தரப்பட்டுள்ளது.
கடந்த 37 ஆண்டுகளில் 165 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இதில் 148 பேரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். இந்த எட்டு மாத காலத்தில் ஏழு தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது, அவர்களது குடும்பத்துக்கு 80 லட்சம் ரூபாய் பிரித்துத் தரப்பட்டுள்ளது.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்தம் நூல்களை இரண்டு பெரும் தொகுதிகளாகத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ளோம்.
தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்தநாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சங்க இலக்கிய நூல்களை குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
திராவிட இயக்கத்தின் வரலாறு, கொள்கைகள், கோட்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் கொண்ட திராவிடக் களஞ்சியம் வெளியாக இருக்கிறது.
மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதழியல் துறையில் மிகச்சிறந்து விளங்குவோருக்குக் கலைஞர் எழுதுகோல் விருது - ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.
மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அவரைச் சிறப்பிக்கும் 13 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளேன்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலை “செம்மொழிச் சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தெற்காசிய நாடுகளில் உள்ள
5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது நூலகங்களுக்கு கலை, இலக்கியம், கணித்தமிழ், சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு சிற்றிதழ்கள் வாங்குவதற்காகத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, பல்வேறு நூலகங்களுக்கு 60-க்கும் மேற்பட்ட ஆங்கிலப் பருவ இதழ்கள் - குறிப்பாக, அரசியல், சமூக ஆர்வலர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் மற்றும் குழந்தைகளுக்குப் பயன்படும் இதழ்கள் வாங்குவதற்கு,
2 கோடியே 35 ஆயிரத்து 181 ரூபாய் தமிழ்நாடு பாடநூல் கழக நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது வழங்குவதைப் போல, தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்பட இருக்கிறது. விருதாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 98-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு அறிவிப்பை நான் செய்துள்ளேன். உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் கனவு இல்லத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய்ப் பிரிவு இல்லம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 5 செண்ட் மனையில் 1500 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும்.
- இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பள்ளிக்கல்வித் துறை
உயர்கல்வித் துறை
தமிழ் வளர்ச்சித் துறை
பொதுத்துறை
என்று நான் தனித் தனியாகச் சொல்லத் தொடங்கினால் நீண்ட நேரம் ஆகும்.
முக்கியமானவற்றைச் சொல்ல வேண்டும் என்றால், திராவிட மொழிகளில் மூத்த மொழியாக விளங்கும் தமிழ் மொழியில் இருந்து தமிழின் அடையாளமாக விளங்கும் பல்வேறு புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் பிற திராவிட மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். “திசைதோறும் திராவிடம்” என்ற திட்டத்தின்கீழ் தற்போது ஆறு புத்தகங்களை நான் வெளியிட்டுள்ளேன். மக்கள் காப்பியமாக விளங்கும் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம், தமிழின் தலைசிறந்த தலித் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு, தோப்பில் முகமது மீரான் சிறுகதைகள், 50 தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘கதாவிலாசம்’, தமிழ்ப் புதின எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளரான எப்சிபா ஜேசுதாசன் அவர்களின் ‘புத்தம் வீடு’ ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
‘முத்தமிழறிஞர் மொழிப்பெயர்ப்புத் திட்டம்’ என்ற திட்டத்தின்கீழ் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள பா.ரா.சுப்பிரமணியம் அவர்கள் மொழிப்பெயர்த்த, ராபர்ட் கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகள்’ அல்லது தென்னிந்திய மொழிகளின் ‘ஒப்பிலக்கணம் நூல்’ -தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு வெளியீடாக இன்று வெளியிடப்படுகிறது. இந்த நூல்களை வெளியிட்டதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த ஆட்சியின் சாதனை என்று சொன்னால், அது தமிழாட்சி! தமிழ்நாட்டுக்கான ஆட்சி!
தமிழ்நாட்டு மக்களுக்கான ஆட்சி!
ஒரே வரியில் சொன்னால், திராவிட ஆட்சி!
நான் 2017-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற நேரத்தில் ஒரு அறிவிப்பை நான் வெளியிட்டேன். பொது நிகழ்ச்சிகளில் பொன்னாடைகள் மற்றும் பூங்கொத்துகளுக்குப் பதிலாக எனக்கு புத்தகங்களைக் கொடுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். என்னைச் சந்திக்க வருபவர்கள் மட்டுமல்ல, பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் நான் செல்கிறபோது அங்கேயும் புத்தகம் கொடுக்கும் பழக்கம் பரவி வருவதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதுவரை எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இலங்கை யாழ்ப்பாண நூலகம் தொடங்கி - பல மேலை நாடுகளுக்கும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறிய நூலகங்களுக்கும் நான் வழங்கி இருக்கிறேன்.
பல்வேறு ஊர்களில் இருந்து, நூலகங்களின் சார்பில் எனக்குக் கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் அறிவுத்திறன் மேம்பாடு எந்த அளவுக்கு பெரிதாக வளர்ந்திருக்கிறது என்பதை இந்த புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்கின்ற அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நான் உணருகிறேன்.
அதற்கு நானும் ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கிறேன் என்பது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அந்த மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் உங்களுக்கு நான் ஒரு செய்தியை, அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். அது என்னவென்று கேட்டீர்களானால், நான் எழுதியிருக்கும் ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் செய்திருக்கிறேன்.
என்னுடைய 23 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை அதில் நான் பதிவு செய்துள்ளேன். இளமைக் காலம் - பள்ளிப் படிப்பு - கல்லூரிக் காலம் - அரசியல் ஆர்வம் - முதலில் நடத்திய கூட்டம் - அதில் முதலில் பேசிய என்னுடைய பேச்சு - திரையுலகம் - திருமணம் - மிசா காலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் இடம் பெற்றிருக்கிறது.
1976 வரையில் முதல் பாகமாக அதை எழுதி இருக்கிறேன். விரைவில் புத்தகக் கண்காட்சிக்கும் அது விற்பனைக்கு வரும். ஆகவே, நூலாசிரியன் என்ற அடிப்படையிலும் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்!
45-ஆவது புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கக்கூடிய இதே நாளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் அமைந்த பொற்கிழி விருதை -
பத்திரிகையாளர் சமஸ் -
பிரசன்னா ராமசாமி -
ஆசைத்தம்பி -
வெண்ணிலா-
பால் சக்கரியா -
மீனா கந்தசாமி ஆகியோருக்கு வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல பபாசி விருதுகளைப் பெற்றுள்ள
மீனாட்சி சோமசுந்தரம்
ரவி தமிழ்வாணன்
பொன்னழகு
திருவை பாபு
முனைவர் தேவிரா
அன்பிற்குரிய பேச்சாளர் பாரதி பாஸ்கர் - ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
2007-ஆம் ஆண்டு இந்தப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வருகை தந்த நேரத்தில், அப்போது நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள், 'முதலமைச்சர் வந்தால் அறிவிப்பு இல்லாமல் இருக்காது' என்று சொன்னார்.
'ஒரு எழுத்தாளன் சொன்னது வீண் போக விட்டுவிடக் கூடாது' என்று அதைக் குறிப்பிட்டுப் பேசிய நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை பபாசி அமைப்புக்கு வழங்கி இந்த விழாவில் பொற்கிழி வழங்கக்கூடிய நிலைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில், முதலமைச்சராக வந்துள்ள நானும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தான் ஆசையோடு வந்தேன். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அதனுடைய விதிமுறைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். எனவே, அந்த அடிப்படையில் இப்போது அறிவிக்க முடியாது. இவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள், இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். விரைவில் நல்ல செய்தியை நான் அறிவிப்பேன்.
இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடக்கட்டும்.
வாசிப்புப் பழக்கம் விரிவடையட்டும்!
நானிலமெங்கும் அறிவுத்தீ பரவட்டும்!
கொரோனா காலம் என்பதால் அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்புடன் இயங்கட்டும் என்று மனதார, நெஞ்சார தமிழக அரசின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.