தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரால் டெல்லியில்தான் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சொன்னோம். ஆனால், ஒன்றிய அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பை- நீர்வளத்துறையோடு சேர்ந்த ஒரு அமைப்பை- ‘காவிரி மேலாண்மை ஆணையம்’-என்று தொடங்கியது. அதற்கும் ‘ஜால்ரா’ போட்டு, ஆட்சியில் இருந்த பழனிசாமி ஒன்றிய பா.ஜ.க. அரசை தட்டிக் கேட்கவில்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கான தண்ணீர் வரத்து குறைந்துவிடும். கர்நாடக அரசியல் கட்சிகளை அழைத்து சென்று, பிரதமரை அப்போது கர்நாடக அரசு பார்த்தது. ஆனால் தமிழ்நாட்டுக் கட்சிகளை அழைத்து சென்று, பிரதமரை பழனிசாமி சந்திக்கவில்லை. இவ்வாறு தஞ்சை மாவட்ட உழவர்களுக்கு மட்டுமல்ல-
டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்ல-
தமிழ்நாட்டு உழவர்களுக்கு மட்டுமல்ல-
மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிச்சு வாக்களித்ததன் மூலமாக - ஒட்டுமொத்த இந்திய வேளாண் பெருங்குடி மக்களுக்கே, துரோகியாக விளங்கியவர்தான் ‘பாதம் தாங்கி’ பழனிசாமி!
அவரை ‘பா.ஜ.க’ பழனிசாமி என்றே அழைக்கலாம்! அந்தளவிற்கு பா.ஜ.க. வாய்ஸில் ‘மிமிக்ரி’ செய்துகொண்டு இருக்கிறார்! வயிற்றுக்குச் சோறுபோடும் வேளாண் உழவர்கள், தங்களுடைய உரிமைகளை பாதுகாக்கப் போராடினால், அவர்களை பார்த்து ‘தரகர்கள்’-என்று ஒருத்தர் சொல்கிறார் என்றால், அவருக்கு எப்படிப்பட்ட கல் நெஞ்சம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.‘நானும் ஒரு விவசாயிதான்’என்று பச்சைத் துண்டு போட்டு வேஷம் போட்டார். பச்சைத் துண்டை தோளில் போட்டுக்கொண்டு நாடகமாடி, உழவர்களுடைய தலையில் துண்டு போட திட்டம் போட்டவர்தான் பழனிசாமி! அப்படிப்பட்ட துரோகம் செய்த பழனிசாமியைத்தான் இந்தத் தேர்தலில் நீங்கள் தோற்கடிக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் தோற்கடித்தீர்கள்.
அப்போதும் அவர் பாடம் கற்றுக்கொள்ளாமல் பாதம் தாங்வதிலேயே குறியாக இருக்கிறார்!‘பாதம் தாங்கி’ பழனிசாமி, உழவர்களுக்கு செய்த துரோகம் ஒன்றா இரண்டா?,
* காவிரியில் 14.75 டி.எம்.சி. நீரைக் கோட்டை விட்டார்.
* நெல், அரிசி பதுக்கும் சட்டத்தை ஆதரித்தார்.
* பேராசிரியர் ஜெயராமனை சிறையில் அடைத்தார்.
* எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்த உழவர்கள் மீது ஈவு இரக்கமின்றித் தடியடி நடத்தினார்.
* குடிமராமத்து திட்டத்தில் ஊழல் செய்தார்.
* கால்வாய் தூர்வாரும் பணியிலும் கரன்சியைத் தூர்வாரினார்.
* கிசான் திட்டத்தில், உழவர்கள் பெயரில் 6 லட்சம் போலிகளை உருவாக்கி, மோசடி செய்தார்.
* கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றியதில் கூட ஊழல் செய்தார்.
* உழவர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்திலேயே வழக்குப் போட்டார்.
இவ்வாறு உழவர்களுக்கு நாள்தோறும் துரோகத்தை மட்டுமே செய்தவர் பழனிசாமி!
மூன்று வேளாண் சட்டங்களைத் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று வாதிட்டோம். உழவர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று சுட்டிக்காட்டினோம். இது கார்ப்பரேட்களுக்கு கைகொடுக்கின்ற சட்டம் என்று சொன்னோம். ஆனால், இதை உழவர்களுக்கு பயனளிக்கின்ற சட்டம் என்று பழனிசாமி சொன்னார்.
ஆனால், இப்போது என்ன நடந்தது? உழவர்களின் போராட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணிந்தது! மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளது! சட்டத்தைக் கொண்டுவந்து உழவர்களை வஞ்சிக்க நினைத்த பிரதமர் மோடியே பின்வாங்கி, உழவர்களின் நெஞ்சுரத்தின் முன்பு தோல்வியடைந்து நிற்கிறார். இறுதியில் உண்மைதான் வென்றுள்ளது! பழனிசாமி உழவர்களின் தலையில் போட நினைத்த துண்டு, அவரது தலையிலேயே விழுந்துள்ளது! நான் பழனிசாமி அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்! பா.ஜ.க.விற்கு ஒரு ஆபத்து என்றால் ஓடோடி வந்து முட்டுக்கொடுத்து, ‘டப்பிங் பேசும்’ பழனிசாமி அவர்களே! மாண்புமிகு பிரதமர் அவர்களே மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டார். இப்போதாவது போராடிய உழவர்களை ‘தரகர்கள்’ என்று கொச்சைப்படுத்தியதற்கும் - மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்கும் - வேளாண் பெருங்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா? பதவியை பெற கூவத்தூரில் மண்டியிட்டு தவழ்ந்தீர்களே- உழவர்களுக்குச் செய்த துரோகத்திற்கும் மண்டியிட்டு மன்னிப்புக் கேளுங்கள்! பெரிய மனது படைத்தவர்கள் நமது உழவர்கள்! நிச்சயம் உங்களை மன்னிப்பார்கள்!
ஊழல்கள், முறைகேடுகளின் ஆட்சியாக கடந்தகால அ.தி.மு.க ஆட்சி அமைந்திருந்தது!
* உறவினர்கள் மூலம் ஊழல் செய்தவர் பழனிசாமி என்று- அப்போதே அமலாக்கத்துறை ரெய்டுகள் மூலமாகச் செய்திகள் வந்ததே!
* வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த புகார்கள் பன்னீர்செல்வம் மீது இருக்கிறது!
* உள்ளாட்சியை ஊழலாட்சியாக மாற்றி, ஸ்மார்ட் சிட்டி வரை அனைத்திலும் புகார்களுக்கு உள்ளானவர் வேலுமணி!
* தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தில் இருந்து, நிலக்கரி இறக்குமதிவரை முறைகேடு செய்ததாகத் தங்கமணி மீது புகார் இருக்கிறது!
* குட்காவில் புகழ் பெற்றவர் டாக்டர் விஜயபாஸ்கர்!
* பருப்பு கொள்முதலில் காமராஜும்,
* பால் கொள்முதலில் ராஜேந்திரபாலாஜியும்,
* முட்டை கொள்முதலில் சரோஜாவும்,
* பத்திரப்பதிவில் வீரமணியும் - சிக்கினார்கள்.
இவ்வாறு- ஊழல் மயம்! லஞ்ச மயம்! கொள்ளை மயம்! என ஆட்சி நடத்திய கூட்டம்தான்- பழனிசாமி காமெடி நாடகக் கம்பெனி!” எனப் பேசினார்.