கள்ளக்குறிச்சி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பிரபு மற்றும் அவரது பெற்றோர் மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த புகாரில் 6 வாரங்களில் விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த 10 ரூபாய் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளரான ஓம்பிரகாஷ் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், தியாகதுருகம் அ.தி.மு.க ஒன்றிய செயலாளரான அய்யப்பா, ஊராட்சி ஒன்றியக் குழு தலைரான அவரது மனைவி தையல் அம்மாள், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் 2001லிருந்து தற்போது வரை 55 வீடுகள், இரண்டு பங்களாக்கள், நூறு ஏக்கர் நிலம் என அதிகார துஷ்பிரயோகம் மூலம் சொத்து சேர்ந்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றவர்களிடமிருந்தும், அங்கன்வாடி பணிகளுக்கும் லஞ்சம் வாங்கியதன் மூலமும் சொத்து சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி வருமானத்திற்கு அதிகமாக 35 கோடியே 65 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு 70 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்றும், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த அக்டோபர் 1ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ள்ளார்.
அரசு சிமெண்ட், அம்மா சிமெண்ட், கம்பிகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்கள் மூலமாக முறைகேடாக பெற்றுள்ளதாகவும், புகாரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, புகார் தற்போதுதான் கிடைத்துள்ளது என்றும், 6 வாரங்களில் விசாரணை நடத்தப்படும் என்றும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அவ்வாறு விசாரணை தொடங்கினால் விரைவில் முடிக்க வேண்டுமெனவும், விசாரணையின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ பிரபுவும், அவரது பெற்றோரும் பதிலளிக்குபடி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.