தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பியதை அடுத்து மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூடியது.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:-
"ஜனநாயகம் காக்க, மக்களாட்சியின் மாண்பைக் காப்பாற்றுவதற்காக, கூட்டாட்சித் தத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக, கல்வி உரிமையை வென்றெடுப்பதற்காக நாம் இன்று கூடியிருக்கிறோம்.
ஏதோ நீட் தேர்வுக்கு எதிராக விவாதிப்பதற்காக மட்டும் நாம் கூடவில்லை. நம்முடைய தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக, பல்வேறு இனம்,மொழி, கலாச்சாரப் பண்பாடுகள் கொண்ட இந்தியப் பெருநாட்டை உண்மையில் காக்கும் உன்னதமான தத்துவம் என்பது கூட்டாட்சித் தத்துவம்தான் அந்தக் கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நாம் கூடியிருக்கிறோம்.
பதினாறு வயதில் அரசியல் களத்தில் நான் நுழைந்தேன். எனது வாழ்க்கை வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அந்த உணர்வோடு தான் நான் இந்த மாமன்றத்தின் முன்னால் நிற்கிறேன்.
நூற்றாண்டுகளுக்கு முன்பே சமூக நீதிக்கு அடித்தளம் போட்டது இந்த சட்டமன்றம். நமது அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வர உந்து சக்தியாக இருந்தது இந்த சட்டமன்றம்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டினை வழங்க, பட்டியலின- பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டினை வழங்க, சிறுபான்மையின மக்களுக்கு உள் ஒதுக்கீடு, அருந்ததியின சமுதாயத்திற்கு உள் இட ஒதுக்கீடு அனைத்தையும் அளித்தது இந்த சட்டமன்றம்.
அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு- ஒன்றிய அரசுப் பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வைத்தது இந்த சட்டமன்றம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு- மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது இந்த சட்டமன்றம். அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது இந்த சட்டமன்றம்.
அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்பட வேண்டிய- 27 சதவீத இட ஒதுக்கீட்டை- தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல- இந்தியாவிற்கே பெற்றுத் தர முன்னோடியாக இருந்தது இந்த சட்டமன்றம்.
இன்றைக்கு இருக்கின்ற 69 சதவீத இட ஒதுக்கீட்டை- நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு அளித்தது இந்த சட்டமன்றம்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு இருந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து இதே சட்டமன்றத்தில்தான் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது இந்தியக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்தார்.
அந்த நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம் செல்லும் என்று கூறி- சென்னை உயர்நீதிமன்றமும், நம் நாட்டின் உச்சநீதிமன்றமும் துணை நின்றதும் இந்த சட்டமன்றத்திற்குத்தான்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று- எட்டு மாதத்திற்குள் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறோம்.
1967 ஆம் ஆண்டு திமுகழகம் முதன்முதலாக ஆட்சிக்கு வந்ததும் இதே போன்றுதான் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட்டினார்கள். 1968 சனவரி 23 ஆம் நாள் கூட்டினார் முதல்வர் அண்ணா அவர்கள். வரலாற்றுப் பிரகடனமாக மொழிக் கொள்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வகுத்தளித்தார் பேரறிஞர் பெருந்தகை அவர்கள்.
இந்தியா முழுமைக்குமான மொழிக் கொள்கையை முன்மொழியை அண்ணா அவர்கள் அன்றைய தினம் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டினார்கள்.
அண்ணா அவர்களால் அரசியல் களத்தில் பயிற்றுவிக்கப்பட்ட நாங்கள், இந்தியா முழுமைக்குமான சமூகநீதிக் கல்விக் கொள்கையை முன்மொழிவதற்காக இந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறோம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து- ஒற்றுமையுடன் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்டிட இந்த சிறப்புக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.
நூற்றாண்டு கண்ட வரலாற்றுப் புகழ் மிக்க கொள்கை முடிவுகளை மேற்கொண்ட உன்னதமான இந்த அவையின் இறையாண்மையைக் காப்பாற்றிட 8 கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்த சட்டமன்றத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள சட்டமியற்றும் அதிகாரத்தைப் பாதுகாத்திட நாம் இன்று கூடியிருக்கிறோம்." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.