ஆளுநர் சொன்ன கருத்தால் சர்ச்சைகள் எழுந்தாலும் ஆளுநர் என்ற பதவியே சர்ர்சைக்குரியதுதான் என்பதை அரசியலமைப்புச் சட்டத்தை அறிந்து புரிந்தவர்கள் நன்றாக உணர்வார்கள்!
பிரிட்டிஷ் ஆட்சி மாநிலத்து மக்களை ஆள்வதற்காக தங்களால் நியமிக்கப்பட்ட மனிதர்களாக ஆளுநர்களை வைத்திருந்தது. அதற்கு இரட்டையாட்சி முறை என்று பெயர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களுக்கும், அமைச்சர்களுக்கும் பாதி அதிகாரங்கள் இருக்கும். மீதி பாதி அதிகாரங்கள் ஆளுநர்களுக்கு இருக்கும். முக்கியமான அதிகாரங்கள் அனைத்தையும் ஆளுநர்கள் வைத்திருப்பார்கள். இதைத்தான் சுதந்திர இந்தியாவில் மாற்றி அமைத்தோம். முழுமையாக மாற்றவில்லை என்பதன் அடையாளம்தான் ஆளுநர்கள் ஆவார்கள்.
1935 ஆம் ஆண்டு சட்டத்தின்படி அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்காமல் ஆளுநர்கள் செயல்பட முடியும். சட்டசபையைக் கலக்காமல் செய்யக்கூடிய சிறப்பு அதிகாரங்களும் ஆளுநர்களுக்கு தரப்பட்டு இருந்தது. அதாவது முதலமைச்சர்களுக்கு இணையானவர்களாக மாநில ஆளுநர்களுக்கு அதிகாரங்கள் தரப்பட்டு இருந்தன. இவை, சுதந்திர இந்தியாவுக்கு பின் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் தரப்படவில்லை.
ஆளுநர்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கலாம் என்று முதலில் ஆலோசனை செய்தார்கள். ஆளுநர்கள், இந்திய அரசின் பேச்சைக் கேட்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நியமனப்பதவியாக அதனை மாற்றி அமைத்தார்கள். ஆளுநரின் தனி அதிகாரங்களை மட்டுப்படுத்தி, மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படும் பதவியாக அதனை வடிவமைத்தார்கள். மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக ஆளுநர்களை தேர்வு செய்யலாமா?
ஆளுநர்கள் பட்டியலை அனுப்பி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அவரை தேர்ந்தெடுக்கச் சொல்லலாமா? என்றும் விவாதம் நடந்தது. இதன் பிறகு இதுவும் கைவிடப்பட்டது. இந்த விவாதங்கள் குறித்து மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்கள் தனது ‘மாநில சுயாட்சி' என்ற மகத்தான நூலில் விரிவாக எழுதி இருக்கிறார்.
இந்த விவாதத்தின் போது மகாவீர் தியாகி என்ற உறுப்பினர் சொன்னதை மாறன் அவர்கள் மேற்கோள் காட்டி இருக்கிறார். “நாம் இப்போது சுயாட்சி கொண்ட மாநிலங்களை உருவாக்குவது என்கிற நமது பழைய கருத்தைக் கைவிட்டு, மத்தியிலே அதிகாரங்கள் அனைத்தையும் குவித்து இப்போது நியமனக் கவர்னர்களைப் பெறப் போகிறோம். மத்திய அரசின் கொள்கையை வற்புறுத்தி, அதைப் பாதுகாக்கிற ஏஜெண்டாக அல்லது ஏஜென்சியாக இருக்கிறவர் தான் கவர்னர்” என்று மகாவீர் தியாகி சொல்லி இருக்கிறார்.
“முன்பு இப்படித்தான் பிரிட்டிஷார் வெளியிலிருந்து ஒரு கவர்னர் ஜெனரலைக் கொண்டு வருவார்கள்; பிறகு பிரிட்டிஷாரின் நன்மையைப் பாதுகாப்பதற்காக, அதற்கு ஏற்றவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து மாகாணங்களுக்குக் கவர்னர்களை நியமிப்பார்கள்; இப்போதும் நீங்கள் அந்த முறையைத்தானே கடைப்பிடிக்கிறீர்கள். மாநிலத்து அமைச்சரவை எப்படிச் செயலாற்றுகிறது என்பதைப் பக்கத்திலிருந்து கண்காணித்து, அது மத்திய அரசுக்கு எந்தக் காலத்திலும் எதிராகப் போகாமல் இருப்பதற்குத் தானே உங்கள் ஆள் அங்கு தேவையென விரும்புகிறீர்கள்? அந்தச் சந்தேகத்தால் தானே கவர்னரை நியமனம் செய்யப்போகிறீர்கள்?” என்று ரோகிணி குமார் சௌத்ரி என்னும் உறுப்பினர் கேட்டார்.!
பண்டிட் இருதயநாத் குன்ஸ்ரூ என்ற உறுப்பினர் பேசும் போது, “மிக முக்கியமான கருத்தொன்றினை நாம் மனத்தில் புதிய வைக்க வேண்டும். நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம் ஜனநாயகம் தடைப்படாமல் முழுவதும் வளர்வதற்கு அனுமதி அளிப்பதாகவும், சர்வாதிகாரம் ஏற்படுவதை அந்தச் சூழ்நிலையிலும் தடுப்பதாகவும் இருக்க வேண்டும்.
தற்போது நம்மில் பலர் மாகாண அரசைவிட மத்திய அரசின் அறிவாற்றலில் இந்த நாடு அதிக நம்பிக்கை வைத்திருப்பதுபோல் கருதுவதாகத் தெரிகிறது. இப்போது இருப்பதைப்போலவே நிலைமை எப்போதும் இருக்காது. சில மாகாண அரசுகள் உருவாக்கிவைத்திடும் நம்பிக்கை அளவிற்குக் கூட மத்திய அரசு நம்பிக்கை உருவாக்காத காலமொன்று வரலாம். எல்லா முக்கியமான விவகாரங்களிலும் மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்தால், மத்திய அரசின் கொள்கைக்கே பணிந்துபோகுமாறு மாகாணங்கள் வற்புறுத்தப்பட்டால் இந்த நாடு சர்வாதிகாரத்தால் விழுந்து விடக்கூடிய கொடுமையான ஆபத்து ஏற்படும்.'' என்று எச்சரித்தார்.
“பிரதம மந்திரி என்கிற தனி மனிதருக்கு, அவர் எவ்வளவு தான் நல்லவராக இருந்த போதிலும், இந்த அதிகாரங்களைக் கொடுத்தால், இப்போதைய பிரதமர் (நேரு) போல எல்லோரும் மனவளம் படைத்தவர்களாக இருக்க மாட்டார்கள்; சில பிரதமர்கள் இந்த அதிகாரத்தைத் தவறாகவும் பயன்படுத்தக் கூடும். அது ஆபத்தாக முடியும். குடியரசுத் தலைவருக்குப் பிரதமர் ஆலோசனையின் பேரில் கவர்னர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தருவது நியாயமானதன்று” என்று பேராசிரியர் சிபன்லால் சாக்சேனா கூறினார். பி.தாஸ் என்பவர் சொன்னதுதான் இன்று நடக்கிறது.
‘கவர்னர் ஜெனரல் (தற்போது குடியரசுத் தலைவர்) அல்லது இந்தியாவின் பிரதமர் ஆகியோரின் இல்லத்துத் தாழ்வாரங்களைச் (கவர்னர் பதவிக்காக) சுற்றிச் சுற்றி வரக்கூடிய ஒரு புதுவிதமான மனிதர்களை நாம் இப்போது படைக்கிறோம்” என்கிறோம். இந்த மேற்கோள்களை சுட்டிக் காட்டிய முரசொலி மாறன் அவர்கள் இறுதியாக, “மத்திய அரசு சாசுவதமாகத் தங்கள் கைக்குள் இருக்கும் என்கிற நினைப்பில், அவர்கள் அந்த மத்தியப் பேரரசை ஆளப்போகிற கட்சியின் கருவியாக மாநிலங்களில் நியமன கவர்னர் பதவியை உற்பத்தி செய்தார்கள்” என்று எழுதினார்கள்.
இப்படி ஆளுநர்களால் மட்டுமல்ல, ஆளுநர் பதவியே சர்ச்சைக்குரியது தான். இதனைத் தான் பேரறிஞர் பெருந்தகை ஒற்றை வரியில் சொன்னார்: ‘ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?’ என்று!