73வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அதன் ஒருபகுதியாகசென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசால் மாநில பாடல் என அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள்.
இதனை செய்தியாளர்கள் ஏன் எழுந்து நிற்கவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது” என ஆர்.பி.ஐ. ஊழியர்கள் வாதிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், ““தாய், தந்தை, ஆசானுக்கு
எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா?
அது சட்டமன்று; அறம்.
தமிழ்த்தாய் வாழ்த்தும்
அப்படியே
சட்டப்படியும்
எழுந்து நிற்கலாம்;
அறத்தின்படியும்
எழுந்து நிற்கலாம்.
இரண்டையும்
மறுத்தால் எப்படி?
தமிழ்த்தாய் மன்னிப்பாள்;
சட்டம்...?” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என ஆர்பிஐ ஊழியர்கள் வாதிட்டத்தற்கு கனிமொழி எம்.பி கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.