73வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா அனைத்து ஒன்றிய மாநில அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசால் மாநில பாடல் என அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள்.
இதனை செய்தியாளர்கள் ஏன் எழுந்து நிற்கவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது என ஆர்.பி.ஐ. ஊழியர்கள் வாதிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பான காணொளி செய்தி தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதனைக் கண்ட பலரும் ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் மாநில பாடலாக அறிவிக்கப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணையை பகிர்ந்து அதில் எவருக்கெல்லாம் விலக்களிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? எனவும் காட்டமாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.