நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126வது பிறந்த நாளையொட்டி, சென்னை, மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த, அவரது திருவுருவ படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்திய மக்களால் போற்றப்பட்ட மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரது படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு, மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள். சென்னையில் கொரோனா தொற்று குறைவது ஆறுதலாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களேகொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று நிலையைப் பொறுத்து வரும் வாரங்களில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். மேலும், கொரோனா தொற்று குறைந்தால் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது" என தெரிவித்துள்ளார்.