பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் எவிடன்ஸ் கதிர் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான வின்சென்ட்ராஜ் ஆரோக்கியசாமிக்கு ‘ரவுல் வாலன்பெர்க் பரிசு’ என்ற அங்கீகாரத்தை ஐரோப்பிய கவுன்சில் சார்பில் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி தனது உயிரைப் பணயம் வைத்து இந்திய மக்கள் தொகையில் மிகவும் பின்தங்கிய பகுதியினருக்கு உதவியுள்ளார். வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி 3,000 மனித உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 25,000 பேரை மீட்டுள்ளார்.
தலித்துகளின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவரது உறுதியையும் விடாமுயற்சியையும் இந்த விருது அங்கீகரிக்கிறது என ஐரோப்பிய கவுன்சிலின் பொதுச் செயலாளர் மரிஜா பெஜினோவிக் புரிக் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது வழங்கும் விழா 19ம் தேதி ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பல்லாயிரக்கணக்கான யூதர்களை ஹோலோகாஸ்டிலிருந்து ரவுல் வாலன்பெர்க் என்ற ஸ்வீடிஷ் ராஜதந்திரி காப்பாற்றியதற்காக 1945இல் அவர் கைது செய்யப்பட்டார். 2014 இல் தொடங்கி, ஸ்வீடிஷ் அரசாங்கம் மற்றும் ஹங்கேரிய பாராளுமன்றத்தின் முன்முயற்சியாக, ஐரோப்பா கவுன்சில் அவரது சாதனைகளின் நினைவாக ரவுல் வாலன்பெர்க் பரிசை உருவாக்கியது.
10,000 பவுண்ட் மதிப்புள்ள இந்த பரிசு, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு தனி நபர், தனிநபர்கள் குழு அல்லது ஒரு அமைப்பு மூலம் அசாதாரண மனிதாபிமான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.