திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ புதிய RTPCR பரிசோதனைக் கருவிகள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட முதியோர்களுக்கு புற்று நோய் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் கருவிகள், உடல்புண் "Bed Sores" சிகிச்சைக்காக அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 10 பிரத்யேக நீர்ப் படுக்கை வசதிகளுடன் கூடிய தனி சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கி தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து குடல், மார்பக, ஆண் சுரப்பி, வாய் மற்றும் தொண்டை, நுரையீரல், கருப்பைவாய் ஆகிய புற்றுநோய்களுக்கான பரிசோதனை பகுதி, கோவிட் நுரையீரல் மறுவாழ்வு பகுதி, படுக்கைப்புண் நோயாளிகளுக்கான சிகிச்சைப் பகுதி ஆகியவற்றை திறந்துவைத்து அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நைஜிரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கும் அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் ஜீன் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அவர்களின் மாதிரிகள் பெங்களூருக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களின் பரிசோனை முடிவுகள் இன்று மாலையோ அல்லது நாளையோ தெரியவரும் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் 50 வயது மேற்பட்டோருக்கு புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் அதற்கான வசதிகள் அனைத்தும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அதனை ஏற்படுத்தியுள்ளோம் எனக் கூறியுள்ளார்.
இந்த திட்டம் இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டமாக அமைந்துள்ளதாக மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.