சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், ஏஐடியுசி சார்பில் தமிழ்நாடு கட்டட கட்டுமான தொழிலாளர்களின் மாநிலக் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லகண்ணு, ஏஐடியுசி மாநில தலைவர் பெரியசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் கட்டட தொழிலாளர்கள் நலனை காக்கும் வகையில் 21 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்தனர். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கை அடங்கிய மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, அமைச்சர் சி.வெ.கணேசனிடம் வழங்கினார்.
தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மேடைப்பேச்சு
முதலமைச்சர் பொறுப்புக்கு உதாரணமாக உள்ளார் மு.க.ஸ்டாலின். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து தொடர்ந்து மக்களை சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார். தனது சாதுர்யத்தால், அயராத உழைப்பால், தமிழக அரசை சிறப்பாக இயக்கி, இந்தியாவிலேயே கொரோனாவை கட்டுப்படுத்திய மாநிலமாக தமிழகத்தை உயர்த்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் உள்ள 18 அமைப்புசாரா நலவாரியத்தில் 16 நல வாரியத்தை உருவாக்கியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். கட்டுமான தொழிலாளர்கள் அளித்த கோரிக்கைகளை நன்கு படித்து மனதில் வைத்துள்ளேன். கடந்த ஆட்சியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 75 ஆயிரம் நபருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படாமல் இருந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின் அது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம்.
அது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று முதற்கட்டமாக 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இதே மைதானத்தில்தான் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல், 200 நாட்களில் 1 லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நல திட்டங்கள் வழங்கினோம். தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருந்த தொகையை 90 சதவீதம் கொடுத்துள்ளோம். அவர்களது பிரச்னைகளை பெரும்பாலும் சரி செய்துள்ளோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கட்டுமான தொழிலாளர்கள் சங்க கோரிக்கை மாநாட்டில் 21 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். அண்மையில் முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் 16 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். புதிதாக கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் அமர கட்டாய இருக்கை வசதியை ஏற்படுத்தி சட்ட திருத்தத்தை கொண்டு வந்து விடியலுக்கான முதலமைச்சராக உள்ளார் நம் முதல்வர். இந்த சட்டம் அண்மையில் தான் அரசாணையாக வந்துள்ளது. இது குறித்து நிறுவனங்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. விரைவில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் ஊழியர்களுக்கு இருக்கை வழங்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என கூறினார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு தனியாக 4000 கோடி நிதி உள்ளது. அதிலிருந்து இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் முடிவெடுப்பார். குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது தான் முதலமைச்சரின் எண்ணம். எங்கெல்லாம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரோ, அங்கெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.