தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்துக் குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க எஸ்.டி., எஸ்.சி., மாணவர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் அசோக்குமார் அளித்த புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ.17.36 கோடியை சில அரசு அதிகாரிகளும், 52 கல்லூரி நிர்வாகத்தினரும் இணைந்து முறைகேடு நடந்ததுள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலிஸ் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் நேற்று முன்தினம் லஞ்சஒழிப்பு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள சென்னையைச் சேர்ந்த 3 கல்லூரிகள் உட்பட 52 கல்லூரிகளின் பெயர் விவரங்கள் உள்ளது. இதனையடுத்து இந்த 52 கல்லூரிகளின் முதல்வர்களிடமும், புகாரில் சிக்கி உள்ள அரசு அதிகாரிகளிடமும் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி விசாரணை நடத்த உள்ளனர்.
விசாரணை முடிவில் கைது நடவடிக்கை இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மாணவ-மாணவிகளுக்கு சேரவேண்டிய உதவித்தொகையை முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.