ஒமிக்ரான் எனப்படும் உருமாறிய கொரோனோ அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸ் தொற்றிற்கு உலக சுகாதார நிறுவனம் ஒமிக்ரான் என பெயரிட்டுள்ளது. நேற்று இரவு வரை 11 ஹை ரிஷ்க் நாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் 477 பேருடைய மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் ஒமிக்ரான் வைரஸ் இல்லை.
ஒமைக்ரான் பரவல் தொடர்பாக பரிசோதனை பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் தற்போது துபாய் விமானத்திலிருந்து வந்த பயணிகளிடம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களுக்கான முடிவு வரும் வரை தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்கு ரூ. 600 வரை கட்டணம் பெறப்படுகிறது. எனவே முதலமைச்சரின் உத்தரவுப்படி வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்கள், உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இலவசமாக இன்று முதல் விமானநிலையங்களில் பரிசோதனை செய்யப்படும். இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை.
தமிழ்நாடு முழுவதும் முதல் தடுப்பூசி செலுத்தியோர் 78% கடந்துள்ளது . இரண்டாவது தடுப்பூசி 44% நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில். பொது இடங்களில் கூடுபவர்கள் இரண்டு தடுப்பூசி போட வேண்டும் என்பது அவசியமாகும். தமிழ்நாட்டில் டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது. டெங்கு பரவாமல் தடுக்க எல்லா முயற்சிகளும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு வர வாய்ப்பு இல்லை” என தெரிவித்துள்ளார்.