உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி, தற்போதுதான் படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில், மீண்டும் புதிதாக உருமாறிய கொரோனா ஒமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடைய வைத்துள்ளது.
முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் 50 வகையில் உருமாற்றம் தன்மை கொண்டதால் இதன் தாக்கும் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறியதை அடுத்து உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் 23 நாடுகளில் பரவியுள்ளது என்றும் 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தொற்று நோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆண்டனி பாசி, “ஒமிக்ரான்வைரஸ் டெல்டா தொற்றைப் போன்று பிற வகை தொற்றிலிருந்து வித்தியாசமான உருமாற்றங்களைக் கொண்டுள்ளது. இந்த உருமாறிய தொற்று வேகமாகப் பரவக் கூடியதா என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒமிக்ரான்வைரஸ் 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை. மேலும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.