உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி, தற்போதுதான் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் புதிதாக ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடையச் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் உருமாறிய பி.1.1.529 என்ற கொரோனா தொற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த வைரஸுக்கு ஒமிக்ரான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் 32 வகையில் உருமாறும் தன்மை கொண்டது என்பதையும், இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அவர்களையும் தாக்கும் வீரியம் கொண்டது எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் தடைவிதித்துள்ளன. மேலும் உலக நாடுகள் முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவையாவன:
“1. ஒமிக்ரான் வகை வைரஸ் ஏற்கனவே கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் எளிதில் தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்தது.
2. டெல்ஃபா திரிபுடன் இவற்றை ஒப்பிடுகையில் ஒமிக்ரான் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபர்களுக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டதா என்பது இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லை. இப்போதைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பர்சோதனைகள் மூலம் ஒமிக்ரான் பரவலின் தன்மையைக் கண்காணிக்க முடியும்.
3. ஒமிக்ரான் தடுப்பூசி எதிர்பாற்றல் கொண்டதா என்பதா என்பது குறித்து தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4. தற்போதைக்கு ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு மற்ற திரிபுகளை விட வித்தியாசமானது, மோசமானது என்பதை நிரூப்பிக்க போதிய ஆதாரம் இல்லை.
5. தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இதனை நாம் நேரடியாக ஒமிக்ரானின் வீரியம் என்று கூறிவிட முடியாது.
அங்கு சமீபகாலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிகரித்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.