நாட்டின் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பம் மிக முக்கியமானது, எதிர்கால வளர்ச்சி தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு தான் என்று சொன்னால் அது மிகையாகாது என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை, தமிழ்நாட்டு அரசின் எல்காட் நிறுவனம், இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து, 2021 ஆண்டுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கு மாநாடு இன்றும், நாளையும் நடத்துகின்றன.
இக்கருத்தரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மக்களை தேடி மருத்துவம், கலைஞரின் கனவு திட்டமான வரும் முன் காக்கும் திட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்துரைத்தார். இதில் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச் சுகாதாரம் பணி இயக்குனர் டெரிஷ் அகமது, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
தமிழ்நாடு மேற்கொண்ட மெகா தடுப்பூசி முகாம், வீடு தேடி தடுப்பூசி போன்ற திட்டங்களால் முதல் தவணை தடுப்பூசியை 77.02 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 41.60 சதவீத மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் அளவிலான தடுப்பூசிகள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் பொது மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை இராஜீவ் காந்தி சாலையில் இந்தியாவை சேர்ந்த வேற்று மாநிலத்தவர்கள் பயணிக்கும் போது, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, வானுயர கட்டிங்கள் காணும் போது, இது இந்திய தானா?, இல்லை மேலை நாடா என்று வியப்புக்குள்ளாவர்கள் ஆதற்கு வித்திட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
தமிழ்நாட்டை தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அடித்தளம் ஈட்டவர் கலைஞர். உலகில் எந்த நாட்டில் இல்லாத வகையிலும், மருத்துவத்துறையில் முற்றிலும் வளர்ந்த கியூபா போன்ற நாடுகளில் இல்லாத வகையிலும் ஒரு திட்டமான மக்கள் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவங்கி வைத்தார்.
நம்மை காக்கும் 48 திட்டங்கள் இன்னும் சிறிது நாட்களில் முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்டும். மேற்கண்ட திட்டத்திற்கு அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் பகுதிகளில் 204 அரசு மருத்துவமனைகள , 405 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விபத்துகள் ஏற்பட்ட சில நிமிடங்களில் எந்தவித விதிமுறைகள் இல்லாமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இனி தமிழ்நாட்டில் எந்த ஒரு சாலையிலாவது, தமிழ்நாட்டை சேர்ந்தவர், வேற்று மாநிலத்தவர், வெளி நாட்டவர் என யாராக இருந்தாலும் விபத்துக்குள்ளாகி சில நிமிடங்களில் அவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எந்தவித விதிமுறை இல்லாமல் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். முதல்கட்டமாக தலா ஒருவரின் சிகிச்சைக்காக 1 லட்சமென, தமிழ்நாடு அரசு 50 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் மூலமாகத்தான், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கொண்டுவந்துள்ள திட்டங்களின் மூலம் பயன் பெற்றவர்களின் தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பம் மிக முக்கியமானது, எதிர்கால வளர்ச்சி தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு தான் என்று சொன்னால் அது மிகையாகாது என தெரிவித்தார்.