பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே தனியார் மயம் செய்வதை ஒன்றிய அரசு கைவிடவேண்டும் என ‘தினகரன்’ நாளிதழ் தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
21.11.2021 தேதிய ‘தினகரன்’ தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம், எல்.ஐ.சி துவங்கி ரயில்வே வரை எல்லாவற்றையும் தனியாருக்கு கைமாற்றி விடுவதில் மோடி அரசு தீவிரமாக உள்ளது. தொழில்கள் நடத்துவது அரசு வேலை அல்ல. நாட்டை நிர்வகிப்பது மட்டுமே அரசின் வேலை என்றெல்லாம் புதுப்புது வியாக்கியானங்களை பா.ஜ.க ஆதரவாளர்கள் வெளியிட்டு வந்தனர். பொதுவாகவே தனியார்மயத்துக்கு எதிர்ப்பு கிளம்பும். ஆனால், ரயில்வே தனியார்மயம் என்பதை ரயில்வே ஊழியர்களால் மட்டுமல்ல, பொதுமக்களாலும், பா.ஜ.க ஆதரவாளர்களாலும் கூட ஜீரணிக்க முடியவில்லை. ரயில்வே என்பது இந்தியாவில் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்து. நாட்டின் பல்வேறு பகுதிகளை எளிதாக, குறைந்த கட்டணத்தில் சென்றடைய ஒரே வழி ரயில்கள்தான். இந்தியாவில் தினந்தோறும் சுமார் 2.5 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கிறார்கள்.
உலகின் 4-வது மிகப்பெரிய அரசுத்துறையாக விளங்கிவரும் இந்திய ரயில்வேயில், சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதை லாபம், நஷ்டம் என வணிக கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. சேவை என்ற நிலையிலேயே அதைப்பார்க்க வேண்டும். ஆனால், இதெல்லாம் மோடி அரசுக்கு எப்படி தெரியும்? ரயில்வேயைத் தனியார்மயம் ஆக்குவதற்காக, 100 நாள் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது. பயணிகள் ரயில்களைத் தனியாரிடம் கொடுப்பது என்பது 100 நாள் செயல்திட்டத்தில் முக்கிய அம்சம். 2023-ம் ஆண்டு முதல் தனியார் ரயில்கள் இயங்கத் தொடங்கும் என்று கடந்த ஆண்டு ஜூலையில் ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது. தனியார் ரயில்கள் என்றால், கட்டணம் பல மடங்கு உயரும், ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அபாய சங்கொலியை வழக்கம் போல் புறந்தள்ளியது ஒன்றிய அரசு.
மொத்தம் 109 வழித்தடங்களில் 151 தனியார் ரயில்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான டெண்டர் கோரப்பட்டது. ஆரம்பத்தில், அதானி உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால், இப்போது, 95 சதவீத வழித்தடங்களுக்கு யாருமே டெண்டர் கோரவில்லை என்ற நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதிலும், தமிழகத்தை பொறுத்தவரை 13 ரயில்களுக்கும் யாரும் டெண்டர் போடவில்லை. இதன்மூலம் தொடர்வண்டி சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கும் முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. தனியார் திடீரென பின்வாங்கியதற்கான காரணத்தில் முக்கியமானது, வருவாய் பகிர்வு நிபந்தனை. ரயிலை தனியார் இயக்கும்போது அதன் வருவாயில் ஒரு பங்கை ரயில்வேக்கு தர வேண்டும். ஆனால், அதற்கு எந்த தனியார் நிறுவனமும் தயாராக இல்லை.
இதனால், டெண்டரில் மேலும் சில சலுகைகளை புகுத்தி மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில்கள் தனியாரிடம் சென்றுவிடக் கூடாது என்பதுதான் பெரும்பான்மை மக்களின் ஆசை. முதல் முயற்சியே தோல்வியடைந்ததால், ரயில்கள் தனியார்மயம் திட்டத்தை இத்தோடு கைவிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.