பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக எத்தனையோ போராட்டங்கள் நடந்திருந்தாலும் அவர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அடிப்படையான காரணமாக அமைந்தது, 1946 ஆண்டு நடந்த கப்பற்படை எழுச்சி ஆகும்!
பம்பாய் கப்பற்படையில் இருந்த மாலுமிகள் முதன்முதலாக புரட்சியின் முழக்கத்தை இந்தியாவே கேட்கும் அளவுக்கு எழுப்பினார்கள். அது இங்கிலாந்து வரைக்கும் கேட்டது. எச்.எம்.ஐ.எஸ். தல்வார் என்ற போர்க்கப்பலில் பறந்து கொண்டு இருந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியைக் கீழே இறக்கினார்கள்.
அதுவும் உணவுப் பிரச்சினைதான். ராயல் இந்தியக் கப்பற்படையில் இருந்த இந்தியர்களுக்கு மோசமான உணவு வழங்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு நல்ல உணவு தரப்பட்டது. அனைத்துச் சலுகைகளிலும் இந்திய வீரர்களுக்கும், பிரிட்டிஷ் வீரர்களுக்கும் பாகுபாடு காட்டப்பட்டது.
பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்திய வீரர்களை மிகக் கேவலமாக நடத்தினார்கள். தல்வாரில் தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் பம்பாயில் முகாமிட்டு இருந்த அறுபதுக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களிலும், பயிற்சி நிலையங்களிலும் இருந்த மாலுமிகளின் போராட்டமாக மாறியது. கப்பல்களில் இருந்து, வீதிக்கு வந்தார்கள் வீரர்கள். பம்பாயின் தெருக்களில் இறங்கி, ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டுச் சென்றார்கள். அவர்களது ஊர்வலப் பாதைகள் மொத்தமும் கடைகளை அடைத்து இந்தியர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுதலை செய் என்ற அரசியல் வடிவத்தை அந்தப் போராட்டம் எடுத்தது. பம்பாயைப் பின்பற்றி பஞ்சாப் மாலுமிகள் போர்க்கொடி தூக்கினார்கள். அடுத்து கொழும்புத் துறைமுக மாலுமிகளும் போர்க்கொடி தூக்கினார்கள். அனைத்துக் கப்பல்களிலும் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு மூவர்ணக் கொடியும், பச்சைக் கொடியும், செங்கொடியும் ஏற்றப்பட்டது. “யாரும் சாலையில் நிற்கக் கூடாது; செல்ல வேண்டும்” என்று ஆட்சியாளர்கள் உத்தரவிட்டார்கள். அதனை யாரும் கேட்கவில்லை. வீதியில் நின்றவர்களைச் சுடுவதற்கு உத்தரவு போட்ட போது சுட மறுத்தார்கள் ராணுவ வீரர்கள். பிரிட்டிஷ் உத்தரவுக்கு நம்முடைய ராணுவ வீரர்கள் கட்டுப்படமறுத்தார்கள். கூர்கா வீரர்களும், மராட்டிய வீரர்களும் சுட மறுத்தார்கள்.
போராடிய வீரர்களுக்கு அப்போது உணவுகளைத் தயாரித்து வந்து மக்கள் கொடுத்தார்கள். சப்பாத்தியும் ரொட்டியும் பழங்களும் கூடைகளில் கொண்டு வந்து கொடுத்தார்கள். ‘சரணடையுங்கள், அல்லது அழிந்து போங்கள்' என்று கமாண்டர் கட்டளையிட்டார். சரணடையத் தயாராக இல்லை வீரர்கள். பம்பாய் போர்க்களமாக, 500 வீரர்கள் இறுதியாக சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது இந்திய ராணுவ வீரர்களையும் எழுச்சி பெற வைத்தது. இந்தியா முழுமைக்குமான தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டமாக மாறியது.
‘நாம் வெளியேற வேண்டிய காலம் நெருங்கிவிட்டது' என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்திய போராட்டம் தான் அந்தக் கப்பல் படை எழுச்சி ஆகும். இதோ வரலாறு மீண்டும் ஒரு முறை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது... அதுதான் தலைநகர் டெல்லியில் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த ஓராண்டு காலமாக நடத்திய போராட்டம்! அது போராட்டம் அல்ல, போர்!
யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தங்களை மட்டுமே நம்பி, விவசாயிகள் நடத்திய வீரப் போர் அது!
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மூன்று சட்டங்கள் ஒன்றிய பா.ஜ.க அரசால் பிறப்பிக்கப்பட்டன. தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இது நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுமைக்குமான விவசாயச் சங்கங்கள் அனைத்தும் இந்தச் சட்டங்களை நிராகரித்தன. செப்டம்பர் 17, 20 ஆகிய நாட்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. 27 ஆம் தேதியே குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிவிட்டார்.
பஞ்சாப்பில் இருந்தும், அரியாணாவில் இருந்தும் வெளியேறி வந்து தலைநகர் டெல்லிக்கு வந்து நவம்பர் 26 முதல் போராட்டம் தொடங்கினார்கள் விவசாயிகள். தண்ணீரைப் பீச்சி அடித்து அவர்களை விரட்டிய காவல்துறை, கலவரத்தை அவர்களாகவே தூண்டினார்கள். ஆனாலும் உறுதியாக உட்கார்ந்தார்கள் விவசாயிகள். பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாடகம் நடத்தப்பட்டது. அதற்கும் அவர்கள் அசரவில்லை. இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையை நோக்கி அவர்கள் நடத்திய டிராக்டர் ஊர்வலம் என்பது படையெடுப்பைப் போலவே இருந்தது. அதிலும் குழப்பம் விளைவித்து கலவரத்தை ஏற்படுத்தினார்கள். நாடு முழுக்க சாலை மறியல், கருப்பு தினமாகக் கொண்டாடுவது,
விவசாயிகளே நாடாளுமன்றம் போல நடத்துவது, சாலைகளை முடக்குவது என்று போராட்டம் வீறு கொண்டே போனது. அடக்குமுறையால் அவர்களை அப்புறப்படுத்த முடியாது என்பதால், கண்டுகொள்ளாமல் விட்டு அவர்களே காலப்போக்கில் கரைந்து போவார்கள் என்று பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். ஆனால் எத்தனை காலம் ஆனாலும் இந்த மூன்று சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் போக மாட்டோம் என்று உறுதியாக இருந்தார்கள் விவசாயிகள்.
விவசாயிகள் தொடங்கிய போராட்டம் மத்திய தர வர்க்கத்தினரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. மாநில எல்லைகளைக் கடந்த வாழ்க்கைப் போராட்டமாக இது அடையாளப்படுத்தப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியின் சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்கள்தான் என்பதை இந்தியா முழுமைக்கும் உணர்த்தியது விவசாயிகளின் இந்த எழுச்சி. இதனை மக்கள் காட்டத் தொடங்கினார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த சரிவு என்பது இந்தப் போராட்டத்தின் விளைவு தான் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அதனால்தான் விலையைக் குறைக்கமாட்டேன் என்று பிடிவாதத்தில் இருந்தவர்கள், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்கள். அடுத்து பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். இந்தப் போராட்டக் களத்தில் இருப்பவர்களில் பெரும்பாலும் பஞ்சாப், உத்தரப் பிரதேச விவசாயிகள்.
இந்த நிலையில்தான் கடந்த ஏழாண்டு காலமாக எதற்கும் இறங்காத பிரதமர் இறங்கி வந்து மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இனி இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது கப்பல் படை எழுச்சி என்றால் - இனி இப்படியே இருந்து விட முடியாது என்பதை பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு உணர்த்தி இருக்கிறது, உழவர்களின் ஓராண்டுப் போர்!