இந்திய அளவில் தகவல் தொழில் நுட்பவியல் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என கனெக்ட்-2021 தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கை வாழ்த்திப் பேசுகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார்.
சென்னையில் CII CONNECT 2021 மாநாடு நடைபெறவுள்ளதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-
அனைவருக்கும் வணக்கம்!
இந்தியத் தொழில் முதலீட்டின் முதல் முகவரியாக தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்!
அதற்கு ஒத்துழைத்து வரும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசும் - இந்தியத் தொழில் கூட்டமைப்பும் இணைந்து கடந்த 2000-ஆம் ஆண்டுமுதல் ‘கனெக்ட்’ என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இம்மாநாட்டுடன் இணைந்து பொருட்காட்சியையும் ஒருங்கிணைத்து வருகிறது. இதன்மூலமாக தகவல்தொடர்பு தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக மாறி வருகிறது.
* ‘Tech Corridors’ எனப்படும் தொழில்நுட்ப மண்டலங்களை அமைத்தது இதன் மிக முக்கியமான சாதனை ஆகும்.
* ICT Academy எனப்படும் தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், விண்வெளி தொழில் பூங்கா ஆகியவையும் உருவாக்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகின்றன. இதற்குக் காரணமான அனைவரையும் பாராட்டுகிறேன்.
இதன் தொடர்ச்சியாக இந்த கனெக்ட் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.
* இதன்மூலமாக தகவல் தொழில்நுட்பவியல் துறையில் புதிய முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
* இந்திய அளவில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
* அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
2030-ஆம் ஆண்டுக்குள் நமது தமிழ்நாடு 1 ட்ரில்லியன் டாலர் அளவில் பொருளாதார உற்பத்தியை அடையவேண்டும் என்று நான் சொல்லி இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு இந்த மாநாடும் உதவி செய்வதாக அமைய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு நிரந்தரமான, முழுமையான தொழில்நுட்பச் சூழலை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அனைவரும் வழங்க வேண்டும். அதனைச் செயல்படுத்தித் தருவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்தும் வந்து கலந்து கொண்டுள்ள ஆளுமைகள் அனைவரையும் வரவேற்கிறேன்.
CONNECT-2021 தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு வெற்றி பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்!” எனத் தேரிவித்துள்ளார்.