அமலாக்கத் துறை, சி.பி.ஐ இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிப்பதற்கு அவசரச் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்திருப்பது ஏன் என்பதே இந்தியாவில் இன்று ஜனநாயக சக்திகள் எழுப்பும் கேள்வியாக அமைந்துள்ளது. வழக்கம் போல் அதற்கு அமைதி காக்கிறது பா.ஜ.க அமலாக்கத்துறை, சி.பி.ஐ. இயக்குநர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும். இது முடிவடைந்த நிலையில் அதன் பதவிக்காலத்தை 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து நீட்டிக்க ஏதுவாக ஒன்றிய அரசு இரண்டு அவசரச் சட்டங்களை கடந்த 14 ஆம் தேதியன்று பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 29ஆம் தேதி தொடங்க இருக்கிறது. டிசம்பர் 23 வரையில் நடக்கலாம். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அவசர அவசரமாக இத்தகைய அவசரச் சட்டங்களை ஏன் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் கேள்வி.
அவசரச் சட்டம் என்றாலே நாட்டில் தலைபோகிற பிரச்சினையாக இருந்தால் நிறைவேற்றலாம். இன்றைக்கு இந்த இரண்டு பதவிகளுக்கும் நீட்டிப்புத்தருகிற அளவுக்கு தலைபோகிற ரகசியம் அதில் என்ன இருக்கிறது? இப்படி அவசரச் சட்டம் நிறைவேற்றிக் கொள்வது, ஆளும் பா.ஜ.க. கட்சியின் உரிமையாகக் கூட இருக்கலாம். ஆனால் அது நாடாளுமன்றத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல் அல்லவா?
“அவசரச் சட்டங்களின் மூலமாக ஆட்சி புரியும் பாதையை பா.ஜ.க தேர்ந்தெடுத்துள்ளது” என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்துக் கூறியது மிகச்சரியான விமர்சனமே. “எதிர்க்கட்சிகளைக் குறிவைக்கும் அதேவேளையில் தன்னையும், தன்நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்ள சி.பி.ஐ., அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதோடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் ஒன்றிய அரசு மீறி வருகிறது” என்று, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி சொல்லி இருக்கிறார்.
ஒன்றிய அரசின் இந்த இரண்டு சட்டங்களுக்கும் எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
“பொதுநலனைக் கருத்தில் கொண்டு பதவிக் காலத்தை நீட்டிக்கலாம் என்று இதில் சொல்லி இருக்கிறார்கள். இது விசாரணை அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவசரச் சட்டங்கள் மூலமான நடவடிக்கைகள்; விசாரணை அமைப்புகளை அரசு நிர்வாகம் கட்டுப்படுத்த முயல்வதை வெளிப்படுத்துகின்றன. இதுபோன்ற செயல்பாடுகள் சி.பி.ஐ., அமலாக்கத் துறை அதிகாரிகள் அரசுக்குச் சாதகமாக நடந்து கொள்வதை அதிகரிக்கும். அரிதிலும் அரிதான விசாரணை அமைப்புகளின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதை மதிக்காமல் ஒன்றிய அரசு இத்தகைய அவசரச் சட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே இத்தகைய விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டன. இதுபோன்ற அவசரச் சட்டங்கள் விசாரணை அமைப்புகளை அரசுக்காகவே செயல்படத் தூண்டும்” - என்று சொல்லி, இந்தச் சட்டங்களை ரத்து செய்ய அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த அதிகாரிகளுக்கு பணி ஓய்வுக்குப் பிந்தைய கால கட்டத்தில் பதவிக் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பான விதியிலும் ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. அப்பட்டியலில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குநர்களும் இணைக்கப்பட்டுள்ளார்கள். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சனவரி 2 ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. ‘கிருஷ்ணகுமார் சிங் - எதிர் - பிஹார் மாநில அரசு’ என்பது அந்த வழக்கு ஆகும். ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் ஏழு நீதிபதிகளின் அமர்வு தீர்ப்பை வழங்கியது.
5 நீதிபதிகள் சார்பில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அந்தத் தீர்ப்பை எழுதி உள்ளார். “அவசரச் சட்டம் இயற்றும் அதிகாரமானது, எந்த வரம்பும், கட்டுப்பாடுகளும் அல்லாத முற்று முழுதான உரிமை கிடையாது” என்று தீர்ப்பில் குறிப்பிடுகிறார் நீதிபதி சந்திரசூட்.
“அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது - அதே வேளையில், நடைமுறைகளின்படி சட்டமியற்றி அதன் பிறகு செயல்படுவதற்கான அவகாசம் போதாமல் இருக்கிறது என்ற சூழலில்தான் அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று சுட்டிக் காட்டுகிறார் நீதிபதி.
“அசாதாரணமான சூழல்களில், அவசரத் தேவைகளுக்காக மட்டுமே அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. அரசியல் சட்டத்தின் 123-வது பிரிவு, இந்த அதிகாரத்தை விளக்குகிறது. ‘ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கூடாத நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திருப்திப்படும் நிலைமை இருந்தால் மட்டுமே, தேவைப்படும் விதத்தில் அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பார்’ என்கிறது.
நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் வழக்கமான சட்டங்களுக்கு உள்ள வேகமும், பலனும் அவசரச் சட்டங்களுக்கும் உண்டு. அவசரச் சட்டம், பிறகு முறைப்படி வழக்கமான சட்டமாக உரிய வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் நாடாளுமன்றக் கூட்டம் கூடியும், அவசரச் சட்டத்துக்குப் பதில் புதிய சட்டம் இயற்றப்படாவிட்டால், நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குப் பிறகு தானாகவே அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும்.
இதற்கிடையில், அந்த அவசரச் சட்டம் செல்லாது என்று நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினாலும் செல்லாததாகிவிடும்.” என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. “அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் மட்டுமல்ல; எந்தவொரு அவசரச் சட்டமும் முதல் முறையாகப் பிறப்பிக்கப்படும்போதும் நீதித் துறையின் பரிசீலனைக்கு உட்பட்டதே!” என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. “சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ மசோதாவாகக் கொண்டு வந்து விவாதிப்பதும் விளக்குவதும் அரசுக்குக் கடினமான காரியங்களாக இருக்கலாம். ஆனால், நம்முடைய ஜனநாயகத்தின் முக்கிய அங்கம்; சட்டமியற்றும் அதிகாரம் படைத்தது மக்கள் மன்றங்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!” என்றும் அந்தத் தீர்ப்பு சொல்கிறது. அவசரச் சட்டக்காரர்கள் இதனை உணர வேண்டும்!