தமிழ்நாடு

கடைசி இடத்தில் இந்தியா.. ‘100 கோடி தடுப்பூசி செலுத்திய சாதனை’ என்பது கொண்டாடக்கூடியதா? : சிலந்தி கட்டுரை!

இரண்டு முறை தடுப்பூசிகள் ஏற்றவர்களின் சதவீத அடிப்படையில் இந்தியா கடைசி இடத்தில் இருப்பதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக கோவிட் ஆதார மையம் தெரிவித்துள்ளது.

கடைசி இடத்தில் இந்தியா.. ‘100 கோடி தடுப்பூசி செலுத்திய சாதனை’ என்பது கொண்டாடக்கூடியதா? : சிலந்தி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட்ட சிறப்புமிகு பணியில் ஒன்றிய மற்றும் பல மாநில அரசுகளின் முழு முயற்சிகள் இருந்தன!

இந்தப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அதேநேரத்தில் இந்தச் செய்திக்குத் தந்துள்ள முக்கியத்துவமும், பிரதமர் மோடி தனக்குத் தானே முதுகில் தட்டிக்கொண்டு பாராட்டிக் கொள்வது போல முன்னின்று கடந்த இரு தினங்களாக விடுத்த செய்திகளும் ‘கொரோனா’ தொற்று முற்றிலும் இந்தியாவிலிருந்து ஒழிந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்திடும் வகையில் உள்ளதோ என்ற அச்சம் வருகிறது!

வரும் மாதங்கள் தொடர்ந்து தீபாவளி, பொங்கல் போன்று மக்கள் கூடிடும் பண்டிகைகள் வர இருக்கும் காலமாகும்! பிரதமர் 100 கோடி தடுப்பூசி போடப்பட்ட தாகக் கூறினாலும், இந்தியாவில் முழுவதுமாக - அதாவது, இரண்டு முறை தடுப்பூசிகள் ஏற்றவர்களின் சதவீதம் வெறும் 21 சதவீதம்தான் என ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக கோவிட் ஆதார மையம் (Johns Hopkins University Covid Resources Centre) வெளியிட்ட தகவலை ஆதாரமாக்கி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு செய்தி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகள் முற்றிலுமாக 75 சதவீத மக்களுக்கு சீனாவில் போடப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் 21 சதவீத மக்கள் மட்டுமே இரண்டு தடுப்பூசிகள் பெற்றுள்ளனர் என்று அந்தத் தகவல் தெரிவிக்கிறது. அதேநேரத்தில் சதவீத அடிப்படையில், சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், யு.கே., இத்தாலி, ஸ்பெயின் நாடுகளோடு ஒப்பிடு கையில் 21 சதவீத மக்களே இந்தியாவில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். சதவீத அடிப்படையில் இந்தியா கடைசி இடத்தில் இருப்பதாக அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியுள்ள மக்களில் 25 சதவீதம் பேர், முதல் தடுப்பூசியே போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக, இந்தியாவின் கோவிட் 19 பணிக்குழு (Task torce) தலைவர் டாக்டர் வி.கே.பால் கடந்த வியாழனன்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் இன்னும் 70 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலை உள்ளது என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார். பிரதமர் பெருமை கொள்வது போல 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா கொடும் தொற்றின் வீரியம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் மகிழ்ந்து கொண்டாட முடியாத நிலையில், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஏறத்தாழ 5 லட்சம் பேரை இந்தக் கொரோனாவுக்குப் பலி கொடுத்துள்ள இந்திய மக்களின் குடும்பங்களின் குமுறல்களும், அழுகுரல்களும் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன!

100 கோடி தடுப்பூசி செலுத்திய சாதனை, பாராட்டக்கூடியது என்றாலும் மகிழ்ந்து கொண்டாட முடியவில்லை! ஏறத்தாழ 5 லட்சம் குடும்பங்கள் விடுத்திடும் கண்ணீர் நமது நெஞ்சங்களை உலுக்கியவாறு உள்ள நிலையில் கொண்டாடக்கூடியதா? இதுபோன்ற செய்திகள்.

- சிலந்தி

நன்றி - முரசொலி நாளேடு

banner

Related Stories

Related Stories