இது ஒரு சிறுகதை; இந்தக் கதையின் கருவை வைத்து முத்தமிழறிஞர் கலைஞர், பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குறு நாவலே உருவாக்கியிருந்தார்! அந்தச் சிறுகதையின் சுருக்கம் இதுதான்.
அது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. ஒரு தளத்தில் ஒரு விதவைத் தாய், தன் ஆறு அல்லது ஏழு வயதை எட்டக் கூடிய தன் பெண் குழந்தையோடு வாழ்ந்து வந்தாள். மற்றொரு தளத்தில் ஒரு ஓவியன் முகச்சவரம் கூட செய்யாது தாடி மீசையுடன் வாழ்ந்து வந்தான். அவன் ஓவியக் கலையில் ஆர்வம் கொண்டு பல அற்புதச் சித்திரங்களைப் படைப்பவன். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பவர்களெல்லாம் அவன் உருவத்தை அவனை ஏளனமாய்ப் பார்த்து வந்தனர். அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே, வளர்ந்த மரங்கள் இருந்தன. குடியிருப்பின் ஜன்னல் வழியே பார்த்தால் அந்த மரங்கள் பூத்துக்குலுங்கும் அழகே கண்ணுக்கு விருந்தாகத் தோன்றும்.
ஒருநாள் அந்த விதவைத் தாயின் மகள் கடுமையான காய்ச்சலால் படுத்துவிட்டாள். கடும் பனி வீசும் இலையுதிர் காலமது. மருத்துவர்களிடம் காட்டி தேவையான மருந்தளித்தும் அந்தச் சிறுமியின் காய்ச்சல் குறைந்தபாடில்லை. சிறுமிக்குத் தேவையான மருந்துகளைத் தந்துவிட்டு அவளை ஓய்வெடுக்கக் கூறிவிட்டு தாய் தனது அன்றாட வேலைக்குச் சென்றுவிட்டாள். சிறுமி படுக்கையில் படுத்தவாறு ஜன்னல் வழியே வெளியே தெரியும் மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது இலையுதிர் காலமானதால் மரத்திலிருந்து இலைகள், பூக்கள் எல்லாம் உதிர்ந்த வண்ணம் இருந்தன. சிறுமியின் பார்வை ஒரு கிளையை மட்டும் உற்று நோக்கியவாறு இருந்தது. அதிலிருந்து பூக்கள் உதிர உதிர அவள் ஜூரத்தின் வேகம் அதிகரித்தது. காய்ச்சல் அதிகமாக அதிகமாக அவள் முனகத் தொடங்கினாள். வீட்டிலே யாருமில்லை. அப்போது சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு அவ்வழியே வந்த ஓவியன் சிறுமியின் வீட்டுக்குள் சென்று "என்னம்மா...செய்யுது?’’ என விசாரித்தவாறு அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்கிறான்.
உடல் அனலாய்க் கொதிக்கிறது. வெளியே குளிர்காற்று அடித்ததால் ஓவியன் சென்று அந்த அறையின் ஜன்னலை மூடச் சென்றான்... "அதை மூடாதீங்க அங்கிள்...’’ என்று திணறியவாறு சொன்னாள் சிறுமி. "ஏனம்மா... வெளியே குளிர்காற்று அடிக்கிறது... அது உன் உடம்பில் பட்டால் மேலும் பாதிப்பு ஏற்படும்’’ என்கிறான் ஓவியன். "இல்லை அங்கிள்... இரண்டு மூன்று நாட்களுக்கு முன், நான் கனவு ஒன்று கண்டேன். அதோ அந்த மரத்தின் கிளையில் இருந்து உதிர்ந்து விழும் பூக்கள் மொத்தமாக உதிரும் வரைதான் நான் உயிரோடு இருப்பேன்... கடைசி பூ உதிரும் போது நானும் இந்த உலகத்தை விட்டுப் போய் விடுவேன்’’ என்கிறாள் அந்தச் சிறுமி. "அதெல்லாம் மூடநம்பிக்கையம்மா; அப்படி எல்லாம் நடக்காது... நீ நம்பிக்கையோடு இருக்க வேண்டும்....’’ என எவ்வளவோ ஓவியன் எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. "இல்லை... அங்கிள்... நான் தினமும் விடிந்ததும் பார்க்கிறேன்... அந்தக் கிளையில் பூக்கள், குறையக் குறைய எனது காய்ச்சலின் வேகமும் அதிகரிக்கிறது. இன்னும் ஒரு பூதான் அந்தக் கிளையில் இருக்கிறது... அது விழுந்துவிட்டால் என் வாழ்க்கையும் முடிந்துவிடும்’’ - என ``அந்தச் சிறுமி கண்களில் நீர்வழிய கூறுகிறாள்.
``நம்பிக்கையோடு இரும்மா... ஒன்றும் ஆகாது... நாளை காலை வருகிறேன்...’’ என அவளுக்குப் போர்வை எடுத்து போர்த்திவிட்டுச் செல்கிறான்... சிறுமிக்கு எதிரே இருந்த ஜன்னலை மூடிவிட்டுச் செல்கிறான்.! மறுநாள் விடியற்காலை... சிறுமியின் ஜூரம் குறைந்தபாடில்லை. முடியாத நிலையிலும் மெதுவாகக் கண்திறந்த சிறுமி, """"மரத்தின் கடைசி பூ இன்று நிச்சயம் உதிர்ந்து போயிருக்கும். இன்றோடு தனது வாழ்வும் முடிந்து போய் விடும்’’ - என்ற எண்ணத்தில் தட்டுத் தடுமாறி எழுந்து சென்று ஜன்னலைத் திறக்கிறாள்... அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன... அவள் பார்த்தபோது அந்தக் கடைசி பூ உதிராமல் மரத்திலே இருந்தது. ஏதோ ஒரு நம்பிக்கையோடு மீண்டும் வந்து படுக்கையில் படுத்தவாறு அந்தப் பூவையே நோக்கிக் கொண்டிருந்தாள். பூ காற்றில் ஆடியதே தவிர விழவில்லை. நேரம் ஆக ஆக அவள் ஜூரம் தணியத் தொடங்குகிறது... என்ன ஆச்சர்யம்.. அந்தப் பூ மட்டும் விழவில்லை... என்று நோக்கிய சிறுமிக்கு சிறிது சிறிதாக நம்பிக்கை வெளிப்படத் தொடங்கியது. தெம்பு வந்தது, முகம் மலர்ந்தது.
அந்தக் கடைசி பூ உதிராது எனத் தனக்கு நம்பிக்கையூட்டிய ஓவியருக்கு நன்றி சொல்ல அந்தச் சிறுமி அவரது இருப்பிடம் சென்றாள்! அங்கோ அவர் கடும் காய்ச்சலில் படுத்திருந்தார்... உடலெல்லாம் வெட வெடவென நடுங்கிக் கொண்டிருந்தது. "என்ன ஆயிற்று அங்கிள்’’.... என சிறுமிவினவ ``ஒன்றுமில்லையம்மா... உனக்கு உடம்பு பரவாயில்லையா?’’ - என ஓவியர் விசாரித்து, ``எனக்கு ஒன்றும் ஆகாது நீ போம்மா...’’ என சிறுமியை அனுப்பி வைத்துவிட்டு படுக்கைக்குச் சென்றபோது அவரது கால்பட்டு அங்கிருந்த பெயிண்ட் டப்பா உருண்டோடியது. ஆம்; இரவெல்லாம் கஷ்டப்பட்டு தத்ரூபமாக அந்தப் பூவை வரைந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறுமியின் குடியிருப்புக்கு வெளியே இருந்த மரத்தில் ஏறி, அந்த மரத்தில் எந்தக் காற்றும் அசைத்து விட முடியாதபடி அந்தப் பூவைப் பொருத்தி விட்டு வந்ததால் தனக்கு ஏற்பட்ட கடும் காய்ச்சல் அது என்றாலும், அந்த ஓவியர் மனதில் ஒரு பெரும் மனநிறைவு இருந்தது. அந்தச் சிறுமியின் மனதில் நம்பிக்கையை விதைத்த அந்தத் திருப்தியோடு படுக்கையில் படுத்தார் ஓவியர்.
இந்தக் கதை ஏன் இப்போது? பலருக்கும் இப்படித் தோன்றலாம். "நம்பிக்கை எனும் அச்சாணியில்தான் இந்த உலகமே சுழலுகிறது’’- என கலைஞர் எழுதிய வசனம் ஒரு படத்தில் வரும். இப்போது நடப்புக்கு வருவோம். தமிழகத்தின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு சிறுமியின் ‘வீடியோ’ பதிவைப் பார்த்தார். சேலத்தைச் சேர்ந்த ஜனனி என்ற சிறுமி கண்ணீர் மல்க அதிலே கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். இரண்டு சிறுநீரகமும் (கிட்னி) செயலிழந்த நிலையில் உள்ள அவர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு வீடியோ பதிவு மூலம் விடுத்திருந்த வேண்டுகோளில், ‘நான் செத்திடுவேன்னு சொல்றாங்க... நீங்கதான் உதவி செய்து காப்பாத்தணும்’ என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார். இந்த வீடியோ பதிவைப் பார்த்ததும் - உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் அந்தச் சிறுமியை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசுகிறார்... ``நீ எதற்கும் கவலைப்படாதேம்மா... நான் பார்த்துக்கிறேன்.’’- என ஆறுதல் கூறி அந்த அரும்பின் மனதில் நம்பிக்கையை உருவாக்குகிறார். அத்துடன் இருந்துவிடவில்லை. உடனடியாக அந்தச் சிறுமிக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்திடுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியனை அழைத்துப் பணிக்கிறார். உடனடிக் கவனம் செலுத்தப்பட்டு அந்தச் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அந்தத் துறை அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகிறார். அத்துடன் நிற்கவில்லை முதல்வர். மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று அந்தச் சிறுமியிடம் நலம் விசாரிக்கிறார்.
‘நான் செத்துப்போயிடுவேன்னு சொல்றாங்க....’ என நம்பிக்கை இழந்து பயம் கலந்து கண்ணீர் சிந்திய சிறுமியின் மனதில் நம்பிக்கையை ஊட்டுகிறார்! வீடியோ பதிவில் கவலை சூழ்ந்த முகத்துடன் கண்ணீர் மல்கப் பேசிய அந்தச் சிறுமியின் கண்களிலே இப்போது புத்தொளி பளிச்சிடுகிறது. மலர்ந்த முகத்துடன் நன்றி கூறும் காட்சி, காண்போரை நெகிழ வைக்கிறது. ‘கடவுளே நேரில் வந்தது போல’ இருக்கிறது என, முதல்வரிடம் கை கூப்பியவாறு கூறி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் அந்தச் சிறுமியின் தாய்! இங்கே, கவிஞர் கண்ணதாசனின் "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’’, எனும் வரிகளின் உயிரோட்டமாக நமது முதல்வர் காட்சியளிக்கிறார். ஆம்; ‘மனிதாபிமானம்’ மனித உருகொண்டு முதல்வராக உலா வந்துகொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டு காலமாக ஆணவம், அகம்பாவம், அறியாமை இவையே ஆட்சி செய்த தமிழகத்தில், இப்போது மக்கள் மனம் குளிரும் வகையில் மனிதாபிமானம் ஆட்சிபுரியத் தொடங்கிவிட்டது! ஆம்; முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஒவ்வொரு பணியும், செயலும் முன்னுதாரணமாய், முத்தாய்ப்பாய் விளங்குகிறது. அவர் பதவி ஏற்ற நேரம் முதல் அவரது உயர்ந்த பண்பின் உச்சங்கள் வெளித்தெரியத் தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டின் எல்லை கடந்து மற்ற மாநிலங்களில் மட்டுமின்றி, நாடு கடந்தும் அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. "ஸ்டாலின் அல்டிமேட் சி.எம்., சூஸ்தாரா’’- என, ஆந்திராவிலிருந்து வெளிவரும் தெலுங்கு சேனல்கள் நமது முதல்வர் புகழ்பாடுகின்றன. "ஸ்டாலினான நம்பர் 1 சி.எம்.-ன்னு பரையனானு காரணங்கள் நோக்க...’’ என நமது முதல்வரின் சாதனைகளை அடுக்குகின்றன மலையாளச் சேனல்கள். பிரபல அரசியல் விமர்சகர் சேகர் குப்தா, நமது முதலமைச்சர் கடைப்பிடிக்கும் கண்ணியம், நாகரிகத்தைப் புகழ்ந்துரைக்கிறார். ‘இந்தியா டுடே’ நடத்திய சர்வேயில் நம்பர் 1 முதல்வராக மிளிர்கிறார் நமது முதல்வர். உலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதைகளை ஆலோசகர்களாக தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு ஜெர்மனியைச் சேர்ந்த `பிராங்க் பர்டர் அலெஜ் மெயின்’ (FrankFurter Allege Maine) ஏடு பாராட்டுகிறது. ‘தி எக்னாமிஸ்ட்’ எனும் உலகப் பிரசித்தி பெற்ற ஏடு, ‘திராவிட ஸ்டாலினைச் சந்தியுங்கள்’ (Meet the Dravidian Stalin) எனக் கட்டுரை தீட்டுகிறது. இப்படி, தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும், வரலாற்றில் தடம் பதிக்கும் அடிகளாகப் பதிவு செய்து அசுர சாதனை புரிந்து வருகிறார் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின்.
"சமுதாய ஊழியராகச் செயல்படும் பெரியமனிதர், சிறந்த மனிதர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறார்". (A great man is different from eminent one in that he is ready to be the servant of the society)- எனும் அம்பேத்கர் வாக்கின் வடிவமாகத் திகழ்கிறார் நமது முதல்வர்! தொய்வின்றித் தொடரட்டும் அந்த அரும்பணிகள். புதியதோர் தமிழகம் ஒளிவிடட்டும்!
- சிலந்தி
நன்றி - முரசொலி நாளேடு