உத்தர பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்ட காவல்நிலையத்தில் 11aaம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கொடுத்த புகார் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்ட காவல்நிலையத்தில் 11aaம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதவும், அதுவும் தனது தந்தையே தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “நான் 6ஆம் வகுப்பு படிக்கும்போது எனது தந்தை என்னிடம் ஆபாச படங்களை காண்பித்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாது, எனது தந்தையைப் பார்க்க வரும் அரசியல் கட்சியினர் மற்றும் தொழில் விஷயமாக வரும் பலரிடம் என்னை தள்ளிவிட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
சில நேரங்களில் என்னை மிரட்டி நகரில் உள்ள முக்கிய ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று அங்கும் பலர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமியின் இந்த புகாரால் மிரண்டுபோன காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை உள்ளிட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், சிறப்பு நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று பெண் நீதிபதி முன்பும் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தையை உள்ளிட்ட 8 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்குப்பதிவு செய்ய மற்ற சிலரையும் தனிப்படை போலிஸார் வலைவீசி தேடி வருவதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் மற்றும் அவரின் மூன்று சகோதரர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக தந்தை உள்ளிட்ட 28 பேர் 17 வயதான சிறுமியை வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.