சினிமா

புலி வேட்டை : விருதுகளைக் குவித்த ‘Tiger An Old Hunter's Tale’ திரைப்படம் சொல்லும் செய்தி என்ன?

ஏகாதிபத்தியத்தின் சுரண்டலில் இயற்கையும் உயிர்களும் தேசிய இனங்களும் என்னவாகின்றன என்பதை உள்ளீடாக வெளிப்படுத்தும் படமாக Tiger: An Old Hunter's Tale மனதில் பதிகிறது.

புலி வேட்டை : விருதுகளைக் குவித்த ‘Tiger An Old Hunter's Tale’ திரைப்படம் சொல்லும் செய்தி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

காட்டுக்குள் ஒரு புலி. அதைக் கொல்ல அரசு முயற்சி எடுக்கிறது. அரசு அலுவலர்கள் புலி வேட்டைக்காரர்களை தேடுகிறார்கள். ஏற்கனவே புலியால் பாதிக்கப்பட்ட ஒருவன் பழியுணர்ச்சியில் புலியை வேட்டையாட முன்வருகிறான். ஆனால் காட்டின் பாதைகள் அவனுக்குத் தெரியாது. புலியின் இயல்பிலும் பெரிய பரிச்சயம் இல்லை. உள்ளூர் வேட்டைக்காரர்கள் சிலரை துணைக்கு சேர்த்துக் கொள்கிறான். உள்ளூர் வேட்டைக்காரர்களுக்கும் சிறு அச்சம் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் வேட்டையாட இருப்பது ஒற்றைப் புலி. குட்டிகளை பறிகொடுத்துவிட்ட புலி.

எனவே அனுபவம் நிறைந்த ஒரு வேட்டைக்காரன் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள். அப்படி ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர் வேட்டையாடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எதற்கும் இருக்கட்டுமென அவரிடம் சென்று வேட்டைக்கு வருமாறு அழைக்கிறார்கள். ஆனால் அந்த முதிய வேட்டைக்காரர் மறுக்கிறார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு புலி வேட்டையில் ஆர்வம் இருக்கிறது. எனவே அப்பாவுக்கு தெரியாமல் வேட்டைக் குழுவுக்கு சென்று அவன் சேர்ந்து விடுகிறான். மகனைத் தேடியேனும் முதிய வேட்டைக்காரன் வருவான் என்பதில் சந்தோஷம் புதிய வேட்டைக்காரனுக்கு.

புலியை வேட்டையாட விரும்பும் அரசு ஒரு பக்கம், காட்டுக்குள் புலியைத் தேடும் வேட்டைக் கும்பல் மறுபக்கம், மகனை தேடும் முதிய வேட்டைக்காரன் இன்னொரு பக்கம், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் புலி ஒரு பக்கம் என படத்தின் கதைக்களம் இயங்குகிறது. புலி சிக்கியதா, முதிய வேட்டைக்காரன் என்னவானான் ஆகியவையே படத்தின் மிச்சப்பகுதி.

சாதாரண புலி வேட்டை சாகசப்படம் போல தென்படும் ஒருவரிக் கதைதான். ஆனால் அதன் எடை கூடும் இடங்கள் பல திரைக்கதையில் இருக்கின்றன. புலி இருக்கும் காடு இருப்பது கொரிய நாட்டில். புலியைத் தேடும் அரசாக இருப்பது ஜப்பானிய ஏகாதிபத்திய அரசு. முதிய வேட்டைக்காரனும் புலியும் இயற்கைச்சூழலை பாதுகாக்க விரும்பும் பாத்திரங்களாக படிமங்கள் பெறுகின்றனர்.

ஏகாதிபத்தியத்தின் சுரண்டலில் இயற்கையும் உயிர்களும் தேசிய இனங்களும் என்னவாகின்றன என்பதை உள்ளீடாக வெளிப்படுத்தும் படமாக Tiger: An Old Hunter's Tale திரைப்படம் மனதில் பதிகிறது. உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்ற படம். புலி வரும் காட்சிகளில் அற்புதமாக புலி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. புலிக்கும் முதிய வேட்டைக்காரனுக்கும் முடிவு ஒன்றுதான் என்கிற இடத்தை கதை அடையும்போது அதே முடிவுதான் நமக்கும் என்கிற உண்மை நெஞ்சில் ஆழமாய் இறங்குவது படத்தின் பலம். அமேசான் ப்ரைமில் இப்படத்தைப் பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories