தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பிற்காகச் செல்லும் கான்வாய் வாகனங்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக முதலமைச்சர்கள் வீட்டிலிருந்து தலைமை செயலகத்துக்கும், திட்டங்களை பார்வையிடவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் காரில் செல்வது வழக்கம். அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக முதலமைச்சர் செல்லும் வரை அப்பகுதிகளில் சாலைப் போக்குவரத்து நிறுத்தப்படுவது வழக்கம்.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமங்களைச் சந்திப்பதாக முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதைத் தவிர்க்க கான்வாய்களின் எண்ணிக்கையை குறைக்குமாறும் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயளாலர் இறையன்பு, உள்துறை செயலர், டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோர் ஆ பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், முதலமைச்சரின் பாதுகாப்பிற்காகச் செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை 12லிருந்து 6ஆகக் குறைக்கப்படும் எனவும், முதல்வர் செல்லும்போது பொதுமக்களின் வாகனம் இனி தடுத்து நிறுத்தப்படாது எனவும், முதலமைச்சரின் வாகனம் பொதுமக்களின் வாகனங்களோடு சேர்ந்தே செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.