சென்னை தியாகராய நகரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் 'ஜெயித்துக் காட்டுவோம் வா' எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். இதனால் எனது பெற்றோர்கள் 10ஆம் வகுப்பு வரைதான் படிக்க வைத்தனர். ஆனால் எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
இதையடுத்து திருமணமாகி, எனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்தபோது, நானும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.ஏ சேர்ந்து படித்து பட்டம் பெற்றேன். பின்னர் பெங்களூருவில் எல்.எல்.பி படித்து முடித்தேன்.
பத்தாம் வகுப்போடு எனது கல்வி முடிந்துவிட்டது என நினைத்திருந்தால் எனது பெயருக்குப் பின்னால் எல்.எல்.பி வந்திருக்காது. இதனால் மாணவர்கள் எப்போதும் மனம் தளர்ந்துவிடாமல் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவல் இருக்க வேண்டும்.
2004ஆம் ஆண்டு எனது கார் விபத்தில் சிக்கியது. இதில் என்னோடு பயணித்த ஜம்புலிங்கம் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் எனது கால் உடைந்த நிலையில் நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.
இதனை அறிந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே மருத்துவமனைக்கு வந்து, "அவரை எப்படியாவது உயிர் பிழைக்க வைக்க வேண்டும். இதற்கு மருத்துவர்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அன்புதான் இன்று என்னை உயிரோடு வைத்திருக்கிறது.
அறுவை சிகிச்சை முடிந்தபிறகு மருத்துவர்கள் நீங்கள் இனிமேல் நடக்க முடியாது, சம்மணமிட்டு உட்கார முடியாது எனக் கூறினர். ஆனால் இதைக் கண்டு பதட்டமடையாமல் படிப்படியாகப் பயிற்சிகளைச் செய்து மருத்துவர்கள் முன்பே சம்மணமிட்டு உட்கார்ந்து காண்பித்தேன்.
இந்த விபத்தைத் தொடர்ந்து நேற்றோடு 131 மாரத்தான் ஓடி முடித்துள்ளேன். மாரத்தானில் இந்திய, ஆசிய சாதனைகளைப் புரிந்துள்ளேன். என்னால் முடியாது என்று நினைத்திருந்தால் படித்திருக்கவும் முடியாது. மாரத்தானில் சாதனை படைத்திருக்கவும் முடியாது. எனவே தேர்வுகளுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று மாணவர்கள் நினைத்துவிடக் கூடாது. தேர்வுகளுக்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறது. ”
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.