மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்து, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார்.
மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த 4 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாகச் செயல்படும் வகையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கரவண்டிகள், காதொலிக் கருவிகள், பார்வையற்றோருக்கான கருப்புக் கண்ணாடி, ஒளிரும் மடக்குச் குச்சிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான மாற்றுவழியில் தொடர்புகொள்ளும் சாதனங்கள் உட்பட 24 வகையான உதவி உபகரணங்கள் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து, காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைவருக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு 2021- 22ஆம் ஆண்டிற்கு ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று 1.9.2021 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின் மீதான பதிலுரையின்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2020-2021ஆம் ஆண்டில், உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த 10,107 மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ரூ.21.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அக்காத்திருப்போர் பட்டியலில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்த 1,228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிடும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 5 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான சாவிகளை வழங்கினார்.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயினால் பாதிப்படைந்தோர், தண்டுவட மரப்பு நோயினால் பாதிப்படைந்தோர், பர்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1500, அப்பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
பராமரிப்பு உதவித் தொகை கோரி விண்ணப்பித்து, காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நடப்பாண்டு முதல் மாதாந்திர உதவித்தொகையை வழங்கும் விதமாக நிதி ஒதுக்கீடு ரூ.404.64 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று 1.9.2021 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின் மீதான பதிலுரையின்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 2020 பிப்ரவரி முதல் இதுநாள் வரை பராமரிப்பு உதவித்தொகை வேண்டி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த 9,173 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கிட சிறப்பு நிதியாக ரூ.29.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதல்வர், இன்று 5 பயனாளிகளுக்கு ரூ.1500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கித் தொடங்கி வைத்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்த 4 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் 3 இளநிலை உதவியாளர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.