100 நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் இந்த திட்டத்தில் இருப்பவர்களைக் கொண்டு ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு நீராதாரங்களை உயர்த்தவும் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கிராமப் புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத் திட்டம் என்பது வெட்டி வேலை. அதை ஒழிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் பேசியது பேரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சீமானின் இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் "மன்னிப்பு கேள் சீமான்" என்ற ஹேஷ்டேக்கையும் நெட்டிசன்கள் இணையத்தில் டிரெண்ட் செய்தனர்.
இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சீமான் கருத்தில் நியாயம் இருப்பதாக அவருக்கு முட்டுக் கொடுத்துப் பேசியுள்ளார். சென்னிமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "100 நாள் வேலைத் திட்டம் குறித்து சீமான் பேசிய கருத்தில் நியாயம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 100 நாள் வேலைத் திட்டம் குறித்து பா.ஜ.கவும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறதா? என்றும் ஏன் சீமானுக்கு அண்ணாமலை முட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.