முந்தைய அ.தி.மு.க அரசின் மோசமான ஆட்சியால் மின்சாரத்துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து மின்சாரத்துறைக்கு தனிக் கவனம் செலுத்தி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மேலும், மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கும் விதமாக 'மின்னகம் மின்நுகர்வோர் சேவை' மையத்தை கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த மையம் திறந்து இன்றோடு 100 நாட்கள் நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களில் 99% தீர்வுகாணப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது முதல் நேற்று வரை 3.56 லட்சம் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதில் இதுவரை 3.50 லட்சம் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் உத்தரவு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 3.16 கோடி மின்நுகர்வோருக்கு சிறப்பான சேவையைச் செய்ய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு மின்னகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வழங்கியுள்ளார்.
தமிழக அரசின் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின்இணைப்புகள் வழங்கும் சிறப்பு வாய்ந்த திட்டத்தினையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இப்பணிகள் மார்ச் மாதத்திற்குள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு, சிறப்பாகச் செயல்படும். கடந்த ஆட்சியில் 9 மாதங்களாகப் பராமரிப்பு பணிகள் செய்யப்படாத நிலையில், 10 நாட்களில் 2.72 லட்சம் பணிகள் முடிக்கப்பட்டன" எனத் தெரிவித்துள்ளார்.