விமானங்களில் செல்லப்பிராணிகளை அழைத்துவர பிரத்யேக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 5 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட வளர்ப்புப் பிராணிகளை கொண்டுவருவதற்கு அதற்கான விசேஷ காற்றோட்ட வசதி உள்ள பை உண்டு. அதில், அடைத்துக்கொண்டு வரலாம்.
அதேபோல், அதிக எடை கொண்ட வளர்ப்புப் பிராணிகளை இதற்காக தனி டிக்கெட் கட்டணம் செலுத்தி, சரக்கு கேபின் மூலமாகவும் கொண்டு வரலாம். அப்படி இருக்கையில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது செல்ல நாயைக் கொண்டுவர ரூ.2.40 லட்சம் செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்த பெண் ஒருவர், தனது செல்ல நாயை விமானத்தில் அழைத்து வர முடிவு செய்தார். அதிக முடிகள் கொண்ட ‘மால்டீஸ்’ என்ற வகை நாயை, தன்னுடைய இருக்கையிலேயே அமர்த்துக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக, விமானத்தின் சொகுசு இருக்கை முழுவதையும் பதிவு செய்துள்ளார்.
அதாவது, விமானத்தின் சொகுசு இருக்கை கேபினில் மொத்தம் 12 இருக்கைகள் இருந்துள்ளன. ஒரு இருக்கைக்கான கட்டணம் ரூ.20,000 ஆகும். அதனால் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கட்டணம் செலுத்தி அந்த 12 இருக்கைகளையும் பதிவு செய்துள்ளார். காலை 9 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் 11.55 மணிக்கு சென்னையில் தரை இறங்கிவிட்டது.
வளர்ப்பு நாய்க்காக இவ்வளவு செலவு செய்த சம்பவம் விமான ஊழியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அந்தப்பெண் பற்றிய எந்த தகவலையும் விமான நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.