பண்டைய காலம் தொட்டே தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடந்த அகழாய்வு தெளிவுப்படுத்துகின்றன. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்டஅகழாய்வுப் பணிகள் தொல்லியல்துறை மூலம் நடைபெற்று வருகிறது. கொரோனா 2-வது அலை பரவலால் சில வாரங்கள் நிறுத்தப்பட்ட அகழாய்வு, கடந்த மாதம் 8-ந் தேதி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.
கீழடி பகுதியில், பத்து அடியில் குழிகள் பறித்து தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது. முன்னதாக நடைபெற்ற இந்த அகழாய்வில், பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் விதமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, 6 கட்ட அகழ்வாராய்ச்சியில் 2,600 ஆண்டுகள் பழமையான பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், மனித எலும்புக்கூடுகள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கீழடியில் தற்போது நடைபெறும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்கத்தினாலான அரியவகை தண்டட்டி, குறுவாள் மற்றும் 13 வகை எழுத்துகள் அடங்கிய மண்பானையிலான சுவடிகள், புதிய கற்காலகருவிகள் என பல்வேறு வகையான பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 700-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
இதுபோல் கீழடியை சுற்றி கொந்தகை, அகரம், மணலூர் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறையின் மூலம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பழமைவாய்ந்த சங்ககால பொருட்கள் கிடைத்துள்ளன. இதுபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவா சரகத்தில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றம் செய்து ஒன்றிய அரசின் தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக 2014-2016 வரை சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியாற்றியிருந்தார். இவரின் ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க ஒன்றிய அரசு, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுத்தது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கீழடியை உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் தமிழ்நாடு திரும்புகிறார். அமர்நாத் ராமகிருஷ்ணன் இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டிற்கு வந்து தனது பெறுப்பை ஏற்றுகொள்ளவார் என்று கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரும் அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழ்நாடு வருவதற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.