தமிழ்நாடு

“கனவு மெல்ல மெல்ல நிறைவேறுது” : தி.மு.க அரசுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் வசந்தபாலன்!

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு இயக்குனர் வசந்தபாலன் மனமார நன்றி தெரிவித்துள்ளார்.

“கனவு மெல்ல மெல்ல நிறைவேறுது” : தி.மு.க அரசுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் வசந்தபாலன்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் எனும் தமிழக அரசின் சட்ட மசோதாவை ‘அங்காடித்தெரு’ இயக்குனர் வசந்தபாலன் வரவேற்றுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று 2021ஆம் ஆண்டு தொழிலாளர் நலநிதிய திருத்தச் சட்ட முன்வடிவு, 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் & நிறுவனங்கள் திருத்தச் சட்ட முன் வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிமுகம் செய்தார்.

இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்துள்ள விளக்கத்தில், “மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர். தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கருதுகிறது.

செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட்கூறானது முன்வைக்கப்பட்டது. அது குழுவின் உறுப்பினர்களால் ஒத்தக் கருத்துடன் ஏற்கப்பட்டது. எனவே அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்தச் சட்ட முன்வடிமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது'' எனத் தெரிவித்தார்.

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் எனும் இந்த சட்ட மசோதா வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு ‘அங்காடித்தெரு’, ‘வெயில்’ உள்ளிட்ட படங்களின் இயக்குனர் வசந்தபாலன் மனமார நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “தமிழக அரசுக்கு நன்றி. என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன் உங்களுக்கு நினைவிருக்கலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

'அங்காடித் தெரு' திரைப்படத்தின் மூலம் பெரு அங்காடிகளில் பணி செய்யும் ஊழியர்களின் வாழ்க்கைமுறையையும், அவர்கள் படும் அல்லல்களையும் காட்சிப்படுத்தி இயக்குநர் வசந்தபாலன் வெகுசன கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories