தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று போர்க்கால நடவடிக்கையால் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
மேலும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி, 14 மளிகைப் பொருட்கள், பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைப்பு, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம் என முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிற்கே முன்மாதிரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த சிறப்பான செயல்பாட்டைத் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் கூட கேரள தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பி.சி.விணுராம் என்பவர், "ஆ முக்கிய மந்திரி இண்ட பெயர் பினராயி விஜயன் அல்ல, எம்.கே.ஸ்டாலின்" என்று கூறி, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டுப் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பவன் கல்யாண் தனது ட்விட்டர் பதிவில், "அன்புக்குரிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.
உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.