டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீரர் சரத் குமார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
2015-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தின் தங்கவேலு இந்த முறை வெள்ளி வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் தங்கவேலு வெல்லும் இரண்டாவது பதக்கம் இது.
இந்நிலையில் பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா தொடர் வெற்றிகளைக் குவித்துவருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக உயரம் தாண்டுதலில் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றுள்ள சரத்குமார் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகிய மூவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பனின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்!” என வாழ்த்தியுள்ளார்.