உலகளவில் இந்தியாவின் பெருமையை இன்னும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்றிருக்கிறார். ஏற்கனவே கடந்த ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இரண்டு அடுத்தடுத்த பாராலிம்பிக்ஸ்களில் தொடர்ச்சியாக பதக்கம் வெல்வது அடிக்கடி நடக்கும் விஷயமல்ல. இந்தியா சார்பில் இதற்கு முன்பு ஈட்டி எறிதல் வீரரான தேவேந்திர ஜஜாரியா மட்டுமே மூன்று பாராலிம்பிஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக பதக்கம் வென்றிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலே அப்படியான சாதனையை செய்திருக்கிறார்.
இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றிருந்த 9 பேரில் 3 பேர் இந்தியர்கள். போட்டி நடைபெறும் மைதானத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மழைக்கு இடையேதான் போட்டி நடைபெற்றதால் வீரர்களுக்கு தாண்டுதலில் கூடுதல் சவால் உண்டாகியிருந்தது. ரியோ பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றிருந்த இந்திய வீரர் வருண் சிங் பாட்டி மழைக்கு நடுவே உயரம் தாண்ட ரொம்பவே தடுமாறியிருந்தார். சீக்கிரமாக அவுட் ஆகி வெளியேவும் சென்றார்.
மாரியப்பன் தங்கவேலுக்கும் இன்னொரு இந்திய வீரரான சரத் குமாருக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவியது. இருவரும் 1.73 மீ தொடங்கி 1.77, 1.80, 1.83 மீ வரை அத்தனை உயரத்தையும் ஒரே வாய்ப்பில் அட்டகாசமாக தாண்டி சமநிலையிலேயே இருந்தனர். அமெரிக்க வீரரான சாமும் இவர்களுக்கு இணையாகத் தாண்டிக் கொண்டிருந்தார்.
1.83 மீட்டரை தாண்டியபோதே மூவருக்கும் பதக்கம் உறுதியாகிவிட்டது. யாருக்கு எந்தப் பதக்கம் என்பது மட்டுமே தெரிய வேண்டியிருந்தது. இப்போது உயரம் 1.86 மீட்டராக உயர்த்தப்படுகிறது. சரத் குமார் அவருக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் அந்த உயரத்தை தாண்ட முடியாமல் வெளியேறுகிறார். அவருக்கு வெண்கலம் உறுதியானது. மீதமிருப்பது மாரியப்பனும் சாமும். இருவரும் 1.86 மீட்டர் உயரத்தை தங்களின் மூன்றாவது வாய்ப்பில் தாண்டி சமநிலையில் இருந்தனர்.
இந்நிலையில் உயரம் 1.88 மீட்டருக்கு உயர்த்தப்பட்டது. யாருக்கு தங்கம் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியாக இது அமைந்தது. இதில் அமெரிக்க வீரர் சாம் மூன்றாவது வாய்ப்பில் 1.88 மீட்டரை வெற்றிகரமாக தாண்டிவிட்டார். ஆனால், மாரியப்பனால் தாண்ட முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் மூன்று வாய்ப்புகளிலும் கம்பியில் இடறி விழுந்தார். இதனால் சாமுக்கு தங்கப்பதக்கமும் மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கமும் உறுதியானது.
ஒலிம்பிக்-பாராலிம்பிக்ஸ் அரங்கில் தமிழக வீரர்/வீராங்கனைகள் கணிசமாக பங்கேற்றாலும் பெரிதாக பதக்கம் வென்றதில்லை. அந்த குறையை மாரியப்பன் தொடர்ச்சியாக தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார். மாரியப்பனின் வெற்றி மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இரட்டை இலக்கத்தில் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் கனவு. மாரியப்பனின் பதக்கம் மூலம் அந்த இலக்கு எட்டப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கூடுதல் பெருமையை கொடுத்துள்ளது.
- உ.ஸ்ரீ