ஈழத்தமிழர்களுக்கு சகோதர வாஞ்சையோடு தேவையான பல்வேறு உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்துலக தமிழர் செயலகம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அனைத்துலக தமிழர் செயலகம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கோபி சிவந்தன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
"இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல, நாம் இருக்கிறோம் அவர்களுக்கு துணையாக..." எனக் கூறி நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு சகோதர வாஞ்சையோடு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை கடமை உணர்ச்சியோடு நிறைவேற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்துலக தமிழர் செயலகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டு முகாம்களில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்கள் நலனுக்கு ரூ. 317.42 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு உலகத் தமிழர்கள் தமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சிங்களப் பேரினவாத அரசால் அரங்கேற்றப்பட்ட 1983 ஜூலை இனக்கலவரத்திற்குப் பின் ஈழத்தில் இருந்து (2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை காலக்கட்டத்திற்கு பிறகு இன்று வரை ) நாடு, வீடு, கழனி காடு, உறவுகள் என அனைத்தையும் இழந்து ஏதிலிகளாய் தாய்த் தமிழ்நாட்டின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 3,04,269 ஈழத்தமிழர்கள் தங்களது வாழ்வை கடத்திக்கொண்டு இருக்கின்ற உறவுகளுக்கு வாழ்விடம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற ஏற்பாடுகளை ஏதொரும் இடரும் இன்றி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என உலகத் தமிழர்களின் சார்பாக அனைத்துலக தமிழர் செயலகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இது தொடர்பாக தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசுக்கு முன்பாக கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தது.
தற்போது, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் நேற்று (27/8/2021) தனது உரையில், சட்டப் பேரவை விதி 110 இன் கீழ் முகாம் வாழ் ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ 317.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவித்திருப்பது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் 18 ஆயிரத்து 944 ஈழத் தமிழ் உறவுகள் குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 822 பேர் வாழ்ந்துவருகின்றனர். முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்கு மாற்றாக மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளுடன் புதிதாக 7 ஆயிரத்து 469 வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போதெல்லாம் பழுதடைந்த வீடுகளுக்குள் சிறுகுழந்தைகள், பெண்கள் என பெரும் இன்னல்களை சந்தித்துவந்த தமிழீழ உறவுகளுக்கு அரசின் இந்த நலத்திட்ட வீடுகள் நிச்சயமாக உதவும் என அனைத்துலக தமிழர் செயலகம் நம்புகிறது.
அதுமட்டுமல்லாது, அவர்களது பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பொறியியல் படிப்பு (மதிப்பெண்களின் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு), வேளாண் பொறியியல் படிப்பு (மதிப்பெண்களின் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கு), முதுநிலை பட்டப்படிப்பு (அனைத்து மாணவர்களுக்கும்), பாலிடெக்னிக் படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் சேர்வோருக்கும் அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என்று அதிகாரப்பூர்வமாக கூறியிருப்பது மகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், ஈழத் தமிழ் மாணவர்களிடையே ஏற்பட்டுவரும் தொடர்ந்துவரும் கல்வி இடைநிற்றல் எனும் நிலைமாறும் சூழல் நிச்சயம் ஏற்படும்.
பாலிடெக்னிக் படிப்பு, இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பு, 3,000 ரூபாய், இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை 20,000 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி இருப்பது மாணவர்களிடையே கற்றலின் ஆர்வத்தை அதிகரிக்கும் மனநிலையை ஏற்படும் என்பது உறுதி.
முகாம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அங்கு இயங்கிவரும் 300 சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் ஈழத் தமிழ் பெண்களின் சுய முன்னேற்றம் உறுதி செய்யப்படும் என உலகத் தமிழினம் வரவேற்கிறது.
இத்துடன், முகாம்களில் வசிக்கக்கூடிய ஏதிலிகளுக்கும், வெளி பதிவில் உள்ள ஏதிலிகளுக்கும் உதவிகளை வழங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்கவும் அவர்களில் இலங்கை திரும்பும் ஏதிலிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், முகாம் வாழ் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உள்ளடங்கிய ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்பட்டு, இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்குத் தேவையான உடனடி நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது தி.மு.க அரசின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி உள்ளது.
"இன்று முதல் இலங்கைத் தமிழ் அகதிகள் என்று கூறாமல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும்; அவர்கள் அனாதைகள் அல்ல, நாம் இருக்கிறோம் அவர்களுக்கு துணையாக..." என கூறி தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு சகோதர வாஞ்சையோடு தேவையான பல்வேறு உதவிகளை கடமை உணர்ச்சியோடு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்துலக தமிழர் செயலகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.