ஃபேஸ்புக்கில் ‘கிங் ஸ்டார் பிரைவேட்” என்ற நிறுவனம் மூலமாக அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்ற விளம்பரம் பதிவிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தைப் பார்த்த தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேர்முகத் தேர்வுக்கு சென்றுள்ளார்.
நேர்முகத் தேர்வில் அந்தப் பெண்ணிடம் முதலில் ரூபாய் 8,000 கட்டினால் அரசு அங்கீகாரம் பெற்ற வேலைக்கான உத்தரவு கிடைக்கும் என்றும், வாரம் தோறும் ரூபாய் 2500 மற்றும் போனஸ் தொகையும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அதனை நம்பி அந்தப் பெண் மறுநாள் மேற்படி நிறுவனத்தில் ரூபாய் 8,000 செலுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து மேற்படி நிறுவனத்தார் அந்தப்பெண்ணிடம் 20 ரூபாய் பத்திரத்தில் ‘ஜாயினிங் லீகல் அக்ரீமெண்ட்” (Joining Legal Agreement) என்ற பெயரில் கையெழுத்துகளை வாங்கிவிட்டு, அவரது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அந்தப் பெண்ணின் செல்போனுக்கு ஒரு ‘எம்ப்ளயீ ஐடி” அனுப்பி, பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பணியில் சேர்த்த அந்தப் பெண்ணை, அவரைப் போல வேலை தேடி வரும் நபர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று மேற்படி நிறுவனத்தார் கூறியுள்ளனர். அதன்படி வேலைக்கு வரும் நபர்களுக்கு அந்தப் பெண் பயிற்சியளித்துள்ளார். மேற்படி நிறுவனத்தில் 2 வாரமாக வேலை பார்த்துவிட்டு அந்தப் பெண் சம்பளம் கேட்டபோது, நீ எவ்வளவு பேரை நிறுவனத்தில் சேர்த்துவிடுகிறாயோ அதற்கு ஏற்றார்போல் கமிஷன் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
மேலும் 10 பேருக்கும் மேல் சேர்த்துவிட்டால் உதவி மேலாளராகி விடலாம் என்றும், அவருக்கு கீழ் ஒரு உதவி மேலாளர் இருந்தால் மேலாளராகிவிடலாம் என்றும், 3 மாதம் கழித்து மாதம் தோறும் ரூபாய் 25,000 சம்பளம் கிடைக்கும் என்று அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி அந்தப் பெண்ணும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் மேற்படி நிறுவனம் சார்பாக அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தைப் பார்த்து 9 பேர் அந்தப் பெண்ணைப் போலவே ரூபாய் 8,000 செலுத்தி வேலைக்குச் சேர்ந்துள்ளனர். மேற்படி 9 பேருக்கும் அந்தப் பெண்ணைப் போலவே 2 வாரமாக சம்பளம் கொடுக்கவில்லை. இதுபோன்று 30 பேர் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பெண்ணும் மற்றவர்களும் ஒன்று சேர்ந்து புதுக்கிராமத்தில் உள்ள மேற்படி நிறுவனத்திற்குச் சென்று அங்கிருந்த நிறுவனத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மணிகண்டன், கிறிஸ்டியன் சுதாகர், சகுந்தலா, ஜெபசீலா எஸ்தர், பிரகாஷ் ஆகியோரிடம் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டபோது, உங்களைப் போலவே இன்னும் நிறைய நபர்களை சேர்த்துவிட்டால்தான் சம்பளம் தரமுடியும் என்றும், இல்லையென்றால் எங்களிடம் உள்ள உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், உங்களது புகைப்படத்தையும் தவறாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டு அசிங்கப்படுத்தி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போலி நிறுவனத்தைச் சேர்ந்த விருதுநகர் மாவட்டம், வி.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (23), மதுரை மாவட்டம், சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24) திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டியன் சுதாகர் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் எவ்வளவு பேரிடம் இவர்கள் ஏமாற்றி உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.