தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். 2டி நிறுவனத்தின் சார்பில் தற்போது போலிஸில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், “2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரையும் லோகோவையும் பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்.
2டி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆடிஷன் நடத்துவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் நிறுவனம் சார்பாக இதுபோன்ற ஆடிஷன் நடத்துவதில்லை. மேலும் ஆடிஷன்களுக்கு நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை.
எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
எனவே இத்தகைய போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களுடைய ரகசிய தகவல்களை பகிர வேண்டாம் என்றும் மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்குமாறும் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் நிறுவன பெயரில் உள்ள மோசடி கும்பலால் இதுவரை பணத்தை இழந்தவர்கள் குறித்து தெரியவரவில்லை. இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.