நெல்லை மாவட்டம் முக்கூடலில் சிங்கம்பாறையை சேர்ந்த ஜான் கென்னடி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் சிங்கம்பாறையை சேர்ந்த தங்கராஜ் மகன் சகாய பிரவீன்(வயது 24) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று அந்த ஓட்டலுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மதிய உணவு பார்சல் வாங்க வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பார்சல் வழங்க சிறிது தாமதமானதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சுமார் அரைமணி நேரம் கழித்து அரிவாளுடன் ஓட்டலில் புகுந்து ஊழியர் சகாய பிரவீனை கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி சென்று ஓடியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சகாய பிரவீன் முக்கூடல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முக்கூடல் - ஆலங்குளம் பிரதான சாலையில் அமர்ந்து சுமார் 4 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முக்கூடல் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளர் பார்ப்புகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். துரித விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.