பகுதி - 1
ஊட்டி, கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் வாங்குவதாக இருந்தால், அதைப் பார்த்த மாத்திரத்தில் அல்லது ஆவணங்களை வாங்கிப் பார்த்து விசாரித்துவிட்டு அதன் மதிப்பைச் சொல்லிவிடலாம். ஆனால் யாராலும் எளிதில் மதிப்பிட முடியாத ஒரு எஸ்டேட் இருக்கிறது. அதன் பெயர் கொடநாடு!
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நீலகிரியின் கடைக்கோடியில் இருக்கிறது கொடநாடு காட்சி முனை. அங்கிருந்து பார்த்தால், சமவெளியில் வளைந்து நெளிந்து செல்லும் மாயாறு மனதை மயக்கும்; தெங்குமரஹடா கிராமத்தின் பேரெழில் பிரமிக்க வைக்கும். இதமான குளிர், அழகான சூழல் அங்கு செல்லும் யாரையும் அத்தனை எளிதில் நகரவிடாது.
அந்தக் காட்சி முனைக்குச் சற்று முன்பு இருபுறமும் பச்சைப் பசேலென்று பரந்து விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டம்தான் கொடநாடு எஸ்டேட். ஆங்கிலேயர்களால் அழகுற வடிவமைக்கப்பட்ட அந்த எஸ்டேட், பல கரங்கள் மாறி, கிரேக் ஜோன்ஸ் வசமிருந்தபோதுதான் சசிகலாவின் கண்களில் பட்டது. அவரின் அன்புச் சகோதரி, அப்போதுதான் முதன்முறையாக தமிழக முதல்வராகியிருந்த ஆட்சிக்காலம்.
‘அக்கா! எனக்கு இது வேணும்!’ என்று அடம்பிடித்த உடன் பிறவாச் சகோதரிக்கு, ஜெயலலிதா வாங்கித் தந்த அன்புப் பரிசு கொடநாடு எஸ்டேட். சில பல வித்தைகளுக்குப் பின், கை மாறிய கொடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக இருந்தவர்கள், ஜெயலலிதாவும் சசிகலாவும் மட்டுமில்லை; சசியின் உறவினர்கள் இளவரசியும், அப்போது வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனும்தான்.
மொத்தம் 900 ஏக்கராக வாங்கப்பட்ட எஸ்டேட், இருபது ஆண்டுகளில் இரண்டு மடங்கு பெரிதானது. அருகிலுள்ள எஸ்டேட்கள் வாங்கப்பட்டன. கொஞ்சம் வன நிலங்களும் சேர்க்கப்பட்டன. முப்பதாயிரம் சதுர அடி பரப்பில் பிரமாண்டமான படாடோப பங்களா எழுப்பப்பட்டது. மணம் பரப்பும் மனதை ஈர்க்கும் இரண்டு ஏக்கர் மலர்த் தோட்டம், பரவசப்படுத்தும் பத்து ஏக்கர் பரப்புள்ள எழில்மிகு ஏரியின் படகுக்குழாம், 30 கி.மீ நீளத்துக்கு சிறப்பான சிமென்ட் சாலை, அசரடிக்கும் அதிநவீன டீ பேக்டரி, எஸ்டேட் அதிகாரிகளுக்கான தனித்தனி குடியிருப்புகள் இதெல்லாம் அடுத்தடுத்து அமைக்கப்பட்டன.
வெளியிலே இப்படி என்றால், பங்களாவின் கட்டமைப்பை விவரிக்கவே முடியாது. ஜெயலலிதா பயன்படுத்திய படுக்கை அறை மட்டுமே 2,500 சதுர அடி பரப்புடையது. எக்கச்சக்கமான விருந்தினர் அறைகள், மெகா டைனிங் ஹால், இரண்டு மூன்று அடுக்கு காத்திருப்பு அறைகள், இத்தாலியன் மார்பிளில் ‘இன் லே’ தொழில்நுட்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தரை தளம், ரோஸ்வுட் உள்ளிட்ட உயர்தர மரங்களால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட கதவுகள், ஜன்னல்கள், பர்னிச்சர்கள் என பங்களாவைச் சுற்றி வருவதற்குள் தலைசுற்றிப் போகும்.
இதெல்லாம் போதாதென்று, ஜெயலலிதா இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு 3,000 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம் அமைத்தார்; அவர்கள் சாப்பிடுவதற்கு ‘மெகா’ டைனிங் ஹால், நீளம் 100 மீட்டர், அகலம் 100 மீட்டர் அளவில் கோல்ப் கிரவுண்ட் போன்று அமைக்கப்பட்ட பிரமாண்ட ஹெலிபேடு என்று ஜெயலலிதா பார்த்துப் பார்த்துச் செதுக்கியது கொடநாடு எஸ்டேட்.
ஜெயலலிதாவின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான இடம் அது. 1996இல் அந்த எஸ்டேட்டை வாங்கிய பின், அங்கிருந்துதான் பல நாட்கள், இன்னும் சொல்லப் போனால் பல மாதங்கள் அவர் கட்சியையும், ஆட்சியையும் நடத்தினார். மொத்தம் 11 நுழைவாயில்கள் கொண்ட அந்த இரும்புக் கோட்டைக்குள், ஜெயலலிதாவின் அனுமதியின்றி எவராலும் நுழையவே முடியாது. அங்கே ஒரு கொலை நடக்கும்; அதற்குள் தன்னால் வைக்கப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்படும் என்று ஜெயலலிதா கற்பனை கூட செய்திருக்க மாட்டார். அது நடந்த நாளில் ஜெயலலிதாவின் ஆன்மா அழுதிருக்கும்.
கொடநாட்டில் நடந்த கொலை, ஒரு த்ரில் படத்துக்கான டைட்டில் கார்டு மட்டுமே. அதற்குப் பின் நடந்த பல மரணங்கள், மர்மதேசத்தின் பல பாகங்கள். ஜெயலலிதா இறந்தது 2016 டிசம்பர் 5 அன்று. அதற்குப் பின், சசிகலாவும்கூட, அங்கு போய்ப் பார்ப்பதற்கு கால அவகாசம் இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில், நீதியரசர் மைக்கேல் குன்ஹா தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததன் அடிப்படையில், 2017 பிப்ரவரி 15 அன்று பரப்பன அக்ரஹார சிறையில் அவர் அடைக்கப்பட்டார். வெளியே வந்தது, இந்த ஆண்டு பிப்ரவரியில். அதற்குப் பின்னும் கூட, அவர் அங்கு சென்றதாகத் தகவல் எதுவும் வெளிவரவில்லை.
ஆனால், அவர் சிறைக்குச் சென்ற சில நாட்களில், அதாவது ஏப்ரல் 24 அன்று, கொடநாடு எஸ்டேட்டில் புகுந்தது கூலிப்படை. எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணா பகதூரின் கை கால்களைக் கட்டி விட்டு, உள்ளே புகுந்த கும்பல், பங்களாவுக்குள் அறை அறையாகத் தேடி, பல பொருட்களையும், ஆவணங்களையும் கொள்ளையடித்துச் சென்றது. அம்மாவின் ஆட்சி நடத்துவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் இந்த கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
கோத்தகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் 11 பேர் என்று தெரிவித்தனர். மொத்தம் 10 பேரை கைது செய்தனர். வழக்கில் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் கனகராஜ்; இவர் ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணியாற்றியவர். அடுத்த வாரத்திலேயே சேலம் அருகே ஒரு விபத்தில் இவர் பலியானார். அடுத்த நாளே, வழக்கின் மற்றொரு குற்றவாளியான சயான் குடும்பத்துடன் சென்ற கார், கேரளாவில் விபத்துக்குள்ளானது. சயானின் மனைவியும், மகளும் உயிரிழந்தனர். பெரும் காயத்துடன் தப்பினார் சயான். அடுத்த சில நாட்களில், கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவியைக் கண்காணித்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞர், நீலகிரி மாவட்டம் நடுஹட்டி கிராமத்தில் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
ஓம்பகதூர் கொலையைத் தவிர, மூவரின் இறப்பு தற்செயலான விபத்துகள் என்றும், தினேஷ் உடல்நலக் குறைவால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கில் குற்றப்பத்திரிகையும் ஐந்தே மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டது. சாதாரண கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததாக குற்றப்பத்திரிகையில் காவல்துறை தெரிவித்திருந்தது. ஆனால் வழக்கை முடிக்க முடியாமல் ஒரு சிக்கல் ஏற்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியான காவலாளி கிருஷ்ணா பகதூர், நேபாளம் செல்வதாகக் கூறிச் சென்றவர் திரும்ப வரவேயில்லை. அவருடைய நிலை இன்னும் தெரியவில்லை. இதன் காரணமாக, இப்போது வரையிலும் உதகை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடக்கிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும், இப்போது பிணையில் வெளியேதான் இருக்கின்றனர். இதற்கிடையில், 2019 ஜனவரியில் தெஹல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், விபத்தில் தப்பிய சயானும், அவனுடைய கூட்டாளி மனோஜூம் சேர்ந்து ஒரு பேட்டி கொடுத்திருந்தனர். கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் பங்கு இருக்கிறது என்பதுதான் அவர்கள் தந்த பேட்டி. அரசியல் அரங்கையே அதிர வைத்தது அந்த வீடியோ பேட்டி. இப்படி பேட்டி கொடுத்ததற்காக, இவர்கள் இருவர் மீதும் சைபர் க்ரைம் போலீசார் ஒரு வழக்குத் தொடுத்து மீண்டும் கைது செய்தனர். மேத்யூ மீதும் வழக்கு பாய்ந்தது.
அந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த வீடியோவைப் பற்றி அடிக்கடி பேசினார். அதற்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அன்றைய தமிழக அரசு. அதைப் பற்றிப் பேசக் கூடாது என்று மு.க.ஸ்டாலினுக்குக் கடிவாளம் போட்டது உயர் நீதிமன்றம். அவ்வளவுதான், அந்த வழக்கு மொத்தமாக ஊத்தி மூடப்பட்டு விட்டது என்று எல்லோரும் நினைத்திருந்த நிலையில்தான், ஆட்சி மாறியது. இப்போது காட்சியும் மாறிக்கொண்டிருக்கிறது.
கொடநாடு வழக்கை தூசு தட்டி எடுத்திருக்கிறது தமிழக அரசு. எந்தக் காவல் துறை அதை மூடுவதற்கு வேக வேகமாக வேலை பார்த்ததோ, அதே துறையில் புதிய அதிகாரிகள் பொறுப்பெடுத்து, இரட்டிப்பு வேகத்தோடு வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்கியிருக்கின்றனர். இந்த வழக்கில் என்ன நடக்கிறது, என்ன நடக்கும் என்று அறிவதற்கு, தமிழக காவல் துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் சொல்லும் தகவல்கள், நம்மை மட்டுமல்ல; கூடிய விரைவில் தமிழக அரசியல் களத்தையே தகிக்க வைக்கப் போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
அப்படி என்னதான் சொல்கிறார்கள் அவர்கள்...
‘‘ஜெயலலிதா இருக்கும்போது, கொடநாடு எஸ்டேட் எவ்வளவு பெரிய அதிகாரப்பீடமாக இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இடத்தில், அ.தி.மு.க ஆட்சி நடக்கும்போதே, கொள்ளை முயற்சி நடந்திருக்கிறது என்றால் அது வெறும் சாதாரண கொள்ளை முயற்சி இல்லை என்பது, சாதாரண போலீஸ்காரருக்கே தெரியும். அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை. அதில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் என்ன, ஆவணங்கள் என்ன என்பதுதான் மர்மமாக இருக்கிறது.
அந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரும் அடுத்தடுத்து இறந்து போனதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி வேலை நடந்திருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவின்றி, இத்தனை சம்பவங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பேயில்லை. அந்த வழக்கை சீக்கிரமாக முடிப்பதற்கு, அ.தி.மு.க ஆட்சியில் காட்டப்பட்ட ஆர்வமும் வேகமும்தான் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. நிச்சயமாக இந்த வழக்கை எப்போதோ முடித்திருப்பார்கள். அதில் முக்கியமான ஐ விட்னஸ் காவலாளி கிருஷ்ண பகதூர், லீவ் போட்டு சொந்த ஊரான நேபாளத்துக்குச் சென்றிருக்கிறார். திரும்பி வரவேயில்லை. எங்கே போனாரென்றே தெரியவில்லை. அவரைத் தேடி நேபாளத்துக்கு, தமிழக போலீஸிலிருந்து ஒரு சிறப்புப்படை அனுப்பப்பட்டது. அவர்கள் அங்கு போய் சல்லடை போட்டுத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கை முடிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு முக்கிய காரணம். சசிகலா தரப்புதான், அவரைத் தப்பிக்க வைத்து, தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பதாக அமமுகவினர் பேசிக்கொள்கிறார்கள்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே, காவல் துறைக்கு மு.க.ஸ்டாலின் போட்ட ரகசிய அசைன்மென்ட்களில் இது முக்கியமானது என்று துறை உயரதிகாரிகளுக்குள்ளேயே பேச்சு இருக்கிறது. புலனாய்வில் கைதேர்ந்த சில அதிகாரிகள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், நீதிமன்றத்தில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முறைப்படி மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. மறுபுறத்தில் போலீஸ் ஸ்பெஷல் டீம், களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்கிவிட்டது. கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், வழக்கை விசாரித்த கோத்தகிரி காவல் துறை அதிகாரிகள் என சிலரிடம் ஏற்கெனவே ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு விட்டது.
இந்த வழக்கில் முக்கியமான துருப்புச்சீட்டு என்று ஒருவரைக் கையைக் காட்டுகிறார்கள். அவர்தான் சஜீவன். கேரளாவிலிருந்து பிழைப்புத் தேடி வந்த சஜீவன், ஒரு காலத்தில் நீலகிரி கூடலூரில் சின்னதாக ஒரு மரக்கடை நடத்தி வந்தார். எப்படியோ யாரையோ பிடித்து, கொடநாடு எஸ்டேட்டில் சின்னச் சின்ன மர வேலைகளை வாங்கிச் செய்திருக்கிறார். அந்த வேலைப்பாடுகள், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் பிடித்துப் போனதும், அவரைக் கூப்பிட்டுப் பாராட்டி, பங்களாவுக்குள் அனைத்து மர வேலைகளையும் செய்யுமாறு ஒப்படைத்திருக்கிறார்கள் இருவரும். அதற்குப்பின், கூடலூர் வனப்பகுதியிலிருந்து லாரி லாரியாக ரோஸ்வுட் மரங்கள், கொடநாடு எஸ்டேட்டுக்குப் போயின. அங்கே போனதைவிட அதிகமாக சஜீவனின் மரக்கடைக்கு மரங்கள் போயின. சஜீவன் பெரும் கோடீஸ்வரர் ஆனார். இப்போது அவருடைய பர்னிச்சர் கடைகளின் கிளைகளும், மொத்தமிருக்கும் மரங்களின் மதிப்புமே பல நூறு கோடி தேறும்.
பங்களா முழுவதும் மர வேலைகள் செய்து கொடுத்ததால், ஜெயலலிதா, சசிகலாவுக்கு அடுத்ததாக அந்த பங்களாவின் அனைத்து உட்கட்டமைப்புகள் சஜீவனுக்கு அத்துப்படி. அதிலிருக்கும் ரகசியப் பெட்டகங்கள் எல்லாமே அவருக்கு மட்டுமே தெரியும். ஜெயலலிதா இருக்கும்வரை, கட்சியில் தலை காட்டாமல் இருந்த சஜீவன், அவர் இறந்த பின்பு, கட்சியிலும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தார். கடைசியில் எடப்பாடி பழனிசாமிக்கும், வேலுமணிக்கும் மிகவும் நெருக்கமானவராகி, நீலகிரிக்கே தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தி.மு.க கோட்டையான கூடலூரில் அ.தி.மு.கவை ஜெயிக்க வைத்தது சஜீவன்தான்.
சஜீவன், கேரளாவைச் சேர்ந்தவர். கொலை, கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளில் கனகராஜ் தவிர மற்ற அனைவரும் கேரளாக்காரர்கள். பங்களாவைப் பற்றி நன்கறிந்த சஜீவன்தான், இவர்களை கூலிப்படையாக நியமித்திருக்க வாய்ப்புள்ளது என்பதுதான் பலருடைய சந்தேகம். அதேபோல டிரைவர் கனகராஜ், எடப்பாடி பழனிசாமியால் ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இதெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போதுதான், சயான், மனோஜ் முன்பு சொன்னது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. சயான் இப்போது கொடுத்துள்ள வாக்குமூலத்திலும் இதைத்தான் சொல்லி இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. கூடிய விரைவில் சஜீவன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் சிலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம். அடுத்தடுத்து நடக்கப்போகும் விசாரணையில், தமிழக அரசியல் அரங்கம் நிச்சயமாக அதிரும்!’’ என்றார்கள் அவர்கள்.
ஆட்சி அதிகாரத்திலும், அரசியலிலும் ஓர் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், எதற்காக இப்படியொரு கூலிப்படையை நியமித்து அங்குள்ள ஆவணங்களை எடுக்க வேண்டும்; அவர்கள் நினைத்தால் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லியே உள்ளே புகுந்து அவற்றை எடுத்திருக்கலாமே என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது. இதே கேள்வியை அமமுகவின் முக்கியப்புள்ளிகள் சிலரிடம் முன் வைத்தபோது, அவர்கள் மிக எளிமையாக ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார்கள்...
‘‘விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் அங்கிருந்து கொள்ளையடிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் 2011–2016 ஆட்சிக்காலத்தில் முக்கியமான அமைச்சர்கள் சிலர், அளவுக்கு அதிகமாகவும், ஜெயலலிதாவுக்குத் தெரியாமலும் நிறைய சொத்து சேர்த்துவிட்டார்கள். அது தெரிந்து, அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்த ஜெயலலிதா, அந்த ஐந்து பேரையும் கூப்பிட்டு, அந்த சொத்துகளை எழுதி வாங்கியிருக்கிறார். அந்த ஆவணங்கள்தான் கொடநாடு பங்களாவில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அதைக் கைப்பற்றும் நோக்கத்துடன்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.’’ என்று விவரித்தனர்.
வழக்கில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரியிடம் சில சந்தேகங்களை வைத்தபோது, அவரும் தன் பங்கிற்கு சில விஷயங்களை விளக்கினார்...
‘‘பங்களாவைப் பற்றி நன்கறிந்த கனகராஜ், சஜீவன் இருவரும், அந்தக் கொள்ளையில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். இதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர், அப்போது ஆட்சிப்பீடத்தில் இருந்த மிக முக்கியப் புள்ளிகளுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு போலீஸ் அதிகாரிதான். சம்பவம் நடந்த அன்று இரவு பத்தரை மணிக்கு, சஜீவனின் சேன்ட்ரோ காரும் வந்துள்ளது. அதை தூரத்தில் நிறுத்திவிட்டு, பொலீரோ, இன்னோவா என இரண்டு கார்களில் உள்ளே புகுந்திருக்கிறது அந்த கூலிப்படை. ஓம்பகதூரை கொலைவெறித்தனமாகத் தாக்கிவிட்டு, கிருஷ்ணாவைக் கட்டிப் போட்டுவிட்டு, பங்களாவுக்குள் புகுந்துள்ளனர். ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று, ஆவணங்களை எடுத்துள்ளனர். வைரம் பதித்த வாட்ச், இன்னும் சில காஸ்ட்லி கைக்கடிகாரங்கள், மேலும் சில பொருட்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
ஆவணங்களை இன்னோவா காரில் எடுத்துக்கொண்டு கனகராஜ், கோவைக்குச் சென்றிருக்கிறார். மற்ற பொருட்களை எடுத்துச் சென்ற பொலிரோ ஜீப், கேரளா நோக்கிப் போயிருக்கிறது. அங்கே செக்போஸ்ட்டில் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது சஜீவனின் சகோதரரும் பிரபல மர வியாபாரியுமான ஒருவர்தான், செக்போஸ்ட்டில் இருந்தவர்களுக்கு போன் செய்து விடச்சொல்லியிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த செக்போஸ்ட்டைக் கடந்ததும், அந்தப் பொருட்களை ஒரு ஓடையில் வீசியிருக்கிறார்கள். அப்போது நீலகிரி எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவின் விசாரணையில் கனகராஜ் பற்றித் தெரியவந்திருக்கிறது. அவரைப் பிடிப்பதற்குள் அவர் ஆக்சிடெண்ட்டில் இறக்கிறார். சயான் குடும்பமும் விபத்துக்குள்ளாகிறது.
விபத்தில் தன் மனைவியையும், மகளையும் இழந்துவிட்ட சயான், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற எண்ணத்தில்தான், உயிரை வெறுத்து, உண்மையை உடைத்துப் பேசத் தயாராயிருக்கிறார். தன் குடும்பத்துக்கும், கனகராஜூவுக்கும் நடந்தது தற்செயலான விபத்தில்லை; திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்பதுதான் அவருடைய ஸ்டேட்மென்ட் ஆக இருக்கிறது. தன்னை வெகுதூரமாக காரில் சிலர் துரத்தி வந்ததாகவும், விபரீதத்தை உணர்ந்து வண்டியை வேகமாக ஓட்டுவதற்குள் விபத்தை அரங்கேற்றி விட்டதாகச் சொல்கிறார் அவர். இந்த விவகாரம் இப்போது தோண்டப்படுவதில், தமிழகத்தின் மிக முக்கியமான போலீஸ் அதிகாரிகள் சிலரும், தமிழக அரசியலின் அதிமுக்கியப் புள்ளிகள் சிலரும் கூட சிக்குவது உறுதியிலும் உறுதி!’’ என்றார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடக்கப்போகும் விளைவுகளை உணர்ந்து, டெல்லியின் பாதுகாப்பைக் கேட்டு, தூது சென்றதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. ஆனால் ஏற்கெனவே சில அமைச்சர்களின் ஊழல், சொத்துக்குவிப்புக்கு பாரதிய ஜனதா தலைவர்கள்தான் உதவியாக இருந்தனர் என்ற எண்ணம், தமிழக மக்களிடம் இருப்பதால், இந்த விவகாரத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் யாரும் உதவ வேண்டாமென்று மோடி கைவிட்டு விட்டதாகச் சொல்கிறார்கள் பாரதிய ஜனதா தமிழகப்புள்ளிகள். இதனால், இந்த வழக்கால் அ.தி.மு.கவுக்கு களங்கம் ஏற்படுமோ என்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீரும், இன்னும் சில அமைச்சர்களும் கலக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.
ஆக... தமிழ்நாட்டில் பரபரப்பை பற்ற வைக்கப்போகிறது கொடநாடு கொலை.. தொடர்ச்சி விரைவில்..
நன்றி : மின்னம்பலம்.
– பாலசிங்கம்.