சென்னையைச் சேர்ந்தவர் கவின் தமிழ். இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “பெண்ணாக பிறந்த எனக்கு பெற்றோர் லாவண்யா என பெயர் சூட்டினர். நாளடைவில், நான் ஆணாக உணர்ந்தேன். டாக்டர்கள் அறிவுரைப்படி, ஹார்மோன் தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆணாக மாறினேன். இதன்பிறகு எனது பெயரை கவின்தமிழ் என கெஜட்டில் பதிவு செய்தேன். கடந்த 2018ல் கடலாடியைச் சேர்ந்த ரேவதியை காதலித்தேன். தற்போது நான் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். கடந்த ஏப்.27ல் ரேவதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதன்பிறகு ரேவதி, பல்லாவரத்தை அடுத்த கீழ்கட்டளையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த மே 8ல் போலீலிஸாருடன் வந்த பெற்றோர் வலுக்கட்டாயமாக ரேவதியை அழைத்துச் சென்றனர். தற்போது அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு போலிஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் வீ.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு ஆகியோர் விசாரித்தனர். ஆக.11 அன்று போலிஸார், ரேவதியை ஆஜர்படுத்தினர். அப்போது தான் சுயமாக முடிவெடுத்தே வீட்டை விட்டு சென்றதாகவும், மனுதாரருடன் செல்லவே விரும்புவதாகவும் கூறினார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
வழக்கின் விசாரணை மீண்டும் வந்தபோது, மனுதாரர், ரேவதி மற்றும் இவரது தந்தை ஆகியோர் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், மனுதாரர் மற்றும் ரேவதியிடம் விசாரித்தனர். அப்போது கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்வதாகவும், மனுதாரர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் என்பது தெரிந்தே பழகுவதாகவும், அவருடனே வாழ விரும்புவதாகவும் ரேவதி கூறியுள்ளார். இதற்கு ரேவதியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், மேஜரான ரேவதி, மனுதாரருடனே செல்ல விரும்புகிறார். அவரது விருப்பப்படி செல்ல இந்த நீதிமன்றம் அனுமதிக்கிறது” என உத்தரவிட்டனர். நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.