தமிழக பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. மே 7-இல் ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றைய தினமே தலைமைச் செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.2000 நிவாரணம், 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பு 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் ரூ.4,000 நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 ரூபாய் குறைக்கப்பட்டது.
இட ஒதுக்கீடு
அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அங்கீகாரம், தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு என பல தனித்துவம் வாய்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மதுரையில் நவீன நூலகம்
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
விருதுகள்
எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி, விருது, தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் விருது, பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியன வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், பெற்றவர்களுக்கு மாநில அரசுத் தரப்பில் வீடு என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
மிகச்சிறந்த கௌரவம்!
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்திற்கும் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவார்களை பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டது. அந்த முதல் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நூற்றாண்டைக் கொண்டாடியவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார். அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இல்லத்திற்கே சென்று வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது மிகச்சிறந்த கௌரவமாகும். கல்வி, இலக்கியம் மட்டுமின்றி விளையாட்டிலும் ஊக்கம் அளிக்கும் வகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது.
பேரவை மணி மகுடத்தில் வைரக்கல்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை காகிதம் வழியே அல்லாது, கணினி வழியாக தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே காகிதமில்லாத முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். கலைவாணர் அரங்கில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மேஜைக் கணினி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை மிச்சமாகும் என்பதுடன், பல ஆயிரக்கணக்கான மரங்களும் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது, உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் இருக்கை முன் உள்ள மேஜையில் கணினி பொருத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் மட்டுமின்றி பேரவைத் தலைவர், அதிகாரிகள் இருக்கைகள் என அனைத்திலும் இந்தக் கணினி பொருத்தப்பட்டுள்ளது. இம்முயற்சி பேரவை மணிமகுடத்தில் ஒரு வைரக்கல்லாக ஜொலிக்கும்.
பெண்களுக்கு இலவசப் பயணம்
சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்னும் திட்டத்தை அறிவித்ததோடு நில்லாமல், அடுத்தடுத்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் அவரது உதவியாளர்கள் எனத் திட்டத்தை விரிவுபடுத்தியதோடு, அத்தகைய பேருந்து சேவையையும் படிப்படியாக அதிகரித்திருப்பது சாமானியர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு மிகப்பெரிய மதிப்பை உருவாக்கித் தந்துள்ளது.
முதல் கையெழுத்து
தமிழகம் முழுவதும் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களின் கட்டுப்பாட்டில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணித்து வரும் நிலையில், பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற திட்டத்தை தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது.இதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்று முதல்வராகப் பதவி ஏற்றமு.க.ஸ்டாலின் 5 திட்டங்கள் அடங்கியகோப்பில் முதல் கையெழுத்திட்டார்.அதில் முக்கிய இடம் பிடித்திருந்ததுசாதாரண கட்டண நகரப் பேருந்துகளில்பெண்களுக்கு இலவச பயணத் திட்டம். அடுத்த நாளே திட்டம் அமலானது.அரசு சார்பில் புதிதாக ஒரு திட்டம்அறிமுகப் படுத்தப்பட்டதற்கான சிறுஆர்ப்பாட்டமுமின்றி, மே 8-ஆம்தேதிகாலை முதலே சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாகபயணிக்கத் தொடங்கினர். திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.குறிப்பாக கரோனா பொது முடக்கம்அனைவரது பொருளாதாரத்தையும்புரட்டிப் போட்டிருந்த நேரத்தில், அறிமுகமானதால் சாமானிய பெண்களுக்குப்பேருதவியாக இருந்ததாக அவர்கள்மகிழ்ச்சி தெரிவித்தனர்.
10 கோடி பெண்கள் பயன்
தற்போதைய நிலவரப்படி, நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் பெண்கள்கட்டணமில்லாமல் பயணிக்கின்றனர்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்
பொதுமக்களின் விட்டுக்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல்,தேவைப்படும் மருந்துகளை வழங்குதல்,இயன் முறை சிகிச்சை, இயலாநோயாளிகளுக்கு வலி நிவாரணம்,ஆதரவு சிகிச்சை ஆகியவற்றைஉள்ளடக்கிய ‘மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், பொதுமக்களின் விட்டுக்கேநேரடியாகச் சென்று மருந்துகளைவழங்கிய தமிழக முதல்வர், ‘மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தை கடந்தஆக. 6-இல் தொடங்கி வைத்துள்ளார்.இத்திட்டத்தின் கீழ், தொற்றாநோயாளிகளின் இல்லங்களுக்கேசென்று சில அத்தியா வசியமானசுகாதாரச் சேவைகள் வழங்கப்படும்.இத்திட்டத்தின் மூலம் பரிசோதனைசெய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்,இயலாமையில் உள்ளவர் களுக்கு உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கானமருந்துகளை களப்பணியாளர்கள்இல்லங்களுக்கே சென்று வழங்குவர்.
தவிர, நோய் ஆதரவு சேவைகள்,இயன் முறை (பிசியோதெரபி) மருத்துவசேவைகள், சிறுநீரக நோயாளிகளைப்பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவசேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக்கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒருகுடும்பத்துக்குத் தேவையானஅனைத்து சுகாதாரத் தேவைகளையும்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் சமுதாய நலப் பதிவேட்டில்ஒவ்வொரு நோயாளியையும் பதிவுசெய்து தொடர்ந்து கண்காணித்துவகைப் படுத்தப்படுகிறார்கள்.இத்திட்டத்தின் முதல்கட்ட இலக்காக, 30 லட்சம் குடும்பங்களைச்சோந்த சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு கூறியுள்ளது.
தொழில் வளர்ச்சியை நோக்கி தமிழகம்
சீரான வளர்ச்சி, நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடைய வேண்டும். அதுதான் குறிக்கோள் என்று மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முதல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவரது இந்தக் கருத்தைத் தொடர்ந்து, சென்னையில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில், "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" என்ற பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அது, புதிய தொழில்களை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்குமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய தொழில் துறையினர் அனைவரும் "கொரோனா கால கட்டத்திலும் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது" என்றனர். டி.சி.எஸ்., நிறுவனத்தின் சார்பில் பேசிய என்.கணபதி சுப்பிரமணியம், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளால் கொரோனா காலத்திலும் புதிதாக அலுவலகங்களைத் திறக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.
ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவழைத்தும் பணிகளை அளிக்கிறோம் என்றார். அவரது பேச்சு உள்பட அங்கிருந்த அனைவரின் கருத்தும், கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் இருந்து தமிழகமும், தொழில் துறையும் நிச்சயம் மீளும் என்பதேயாகும். இதற்கு மிக முக்கியக் காரணியாக அவர்கள் குறிப்பிடுவது; தொழில் தொடங்குவதற்கான வெளிப்படைத்தன்மையைத்தான். தொழில் முதலீட்டுக்கு முதலில் தேவையானது, அரசிடம் இருந்து உரிய அனுமதிகள். சிறியது முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரையிலும் ஒரு மாநிலத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு அந்த மாநில அரசின் அனுமதி தேவை. இந்த அனுமதிகளுக்காக ஒவ்வொரு துறையின் கதவையும் தட்டி அது திறப்பதற்குள் தொழில் நிறுவனங்களுக்கு வியர்த்துவிடும் அல்லது வெளியேறி விடுவார்கள். இந்த நிலையைப் போக்கவே, மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணைய தளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். இந்த இணையதளத்தின் மூலமாக தொழில்துறைக்குத் தேவைப்படும் அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணைய தளமாக அது விளங்கிவருகிறது.
முதலீட்டாளர்களை பெரிதும் ஈர்க்கிறது!
இந்த இணையதளம் இயங்கும் முறையே தொழில் முதலீட்டாளர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. இணைய முறையில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். பின்னர், அவை உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். சம்பந்தப்பட்ட துறைகளுடன் காணொலி மூலமாகச் சந்திப்புகள் நடத்தப்படும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வாடிக்கையாளர்களுடன் உடனடி உரையாடல்கள் நடத்தப்படும். இந்த வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணைய தளத்தில் இருக்கின்றன. இவற்றுடன் கூடுதலாக 210 சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார். பெயரளவிலும், காகித அளவிலும் என்று இல்லாமல், திறம்படச் செயல்படும் அமைப்பாக அந்த இணையதளம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அதன் செயல்பாட்டை, தானே கண்காணிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இதுபோன்ற செயல்பாடுகள் மூலமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற வட மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, "முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு" என்ற நிகழ்வின்போது, தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 5 ஆயிரத்து 595 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.4,415 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. காற்றாலை மின்உற்பத்தி, தொழில் பூங்கா, காகித அட்டை மற்றும் பெட்டிகள் தயாரிப்பு, பருத்தி நூல் உற்பத்தி என தென்மாவட்டங்களின் சூழ்நிலைக்கு ஏற்றாற் போன்று தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மேலும், தென்மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளதாக அரசின் தொழில் துறையினர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற செயல்பாடுகள் மூலமாக, சீரான வளர்ச்சி, நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடைய வேண்டுமென கொள்கை வளர்ச்சிக் குழுவின் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து 100 நாள்கள் நிறைவு செய்துள்ள அரசு, தமிழ்நாட்டை சீரான, நிலையான வளர்ச்சியை வருங்காலத்தில் எட்டச்செய்யும் என்பதே அனைவரின் நம்பிக்கை.
நன்றி - தினமணி நாளேடு