கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடுகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி 2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழக வரலாற்றில் இந்த ஆண்டு முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு, காகிதமில்லா இ-பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும், தற்போதைய நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை ஆகஸ்ட் 9ஆம் தேதி நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட இருக்கிறார். இதன் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட நிதிப் பின்னடைவுகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும்.
தமிழக பட்ஜெட் தொடர்பாக, இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் தேதி உள்ளிட்ட முக்கியத் தேதிகள் இறுதி செய்யப்பட்டது.
அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை வரும் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதனை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
மேலும், ஆகஸ்ட் 9-ம் தேதி, 120 பக்கங்கள் கொண்ட நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முடிவு செய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ள நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடப்படும். 120 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் கடன் விபரங்கள், சென்னை மெட்ரோ வாட்டர், மின்சார வாரியம், போக்குவரத்து, உள்ளாட்சி, வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.