தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள செம்மிபாளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் இளைஞர்கள் - மகளிருக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும்,மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியின் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் காசோலைகளையும், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் வளர்ச்சி நிதியின் மூலம் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவியும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் கிராமம் தோறும் பசுமை திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக கோடாங்கிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கவுண்டம்பாளையத்தில் பாரதி வனம், சங்கோதிபாளையத்தில் மகிழ்வனம் தாவரவியல் பூங்காவினை திறந்துவைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பாக பொறுப்பேற்று 55 நாட்களில் கொரோனா பெருந்தொற்றை தமிழ்நாட்டைக் காப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாகவும் அதனால் நோய்த் தொற்று முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஒவ்வொரு துறையின் சார்பிலும் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்து நிதிகள் ஒதுக்கப்பட்ட பின்னர் பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் நலத் திட்டங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறுப்புக் குழு உறுப்பினர் திருமூர்த்தி, செம்மிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.