சென்னை புழல் அருகேயுள்ள காவாங்கரை கண்ணப்பசாமி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மகள் ஜன்னதுல் பிரதௌஸ். மகளுக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
மகள் ஜன்னதுல் பிரதௌஸை, அவரது முறைமாமனுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு ஜன்னதுல் பிரதௌஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் இரண்டு வீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. முன்னதாக மனமகள் ஜன்னதுல், இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவரின் அந்த வாட்ஸ்அப் வீடியோவில், "இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. பல பெண்களுடன் எனது முறைமாமன் தொடர்பில் இருக்கிறார். இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என கூறியும் எனது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் நடத்த உள்ளனர். இந்த திருமணம் நடந்தால் நான் உயிருடன் இருக்கமாட்டேன்" எனப் பேசியிருந்தார்.
இவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து புழல் மகளிர் காவல் நிலைய போலிஸார் ஜன்னதுல் பிர்தௌஸ் வீட்டிற்குச் சென்றனர். பிறகு அவரையும், பெற்றோரையும் காவல்நிலையம் அழைத்து வந்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
போலிஸ் விசாரணையின் போதும், ஜன்னதுல் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என உறுதியாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து இந்த திருமணத்தை போலிஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் மகளின் விருப்பத்தை மீறி அவருக்கு திருமணம் செய்யக்கூடாது என்றும் மீண்டும் இப்படிச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது பெற்றோரை போலிஸார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.