பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை யார்? பத்திரிகையாளர்கள் கூறித்தான் அவர் யாரென்றே தெரிகிறது” என கிண்டலாக பதிலளித்தார் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் 350 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசர் இன்று வழங்கினார்.
ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தனர். பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 200 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் இன்று 350 பயனாளிகளுக்கு 318 கோடி மதிப்பிலான நிலங்களின் பட்டாக்களை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். பட்டாக்களைப் பெற்றுக்கொண்ட மக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரிடம் செய்தியாளர் ஒருவர் ‘சார்பட்டா பரம்பரை’ படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், “ரோட்டோர அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கு வரலாறும் தெரியாது. கொள்கை கோட்பாடும் கிடையாது. தி.மு.க நீண்ட வரலாறு கொண்டது தி.மு.கவினர் வாலாறு தெரிந்தவர்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் 3 முதலமைச்சர்கள் என்ற பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்து கேட்கப்பட்டதற்கு, “அண்ணாமலை யார்? பத்திரிகையாளர்கள் கூறித்தான் அவர் யாரென்றே தெரிகிறது. அவருக்கு தி.மு.க பற்றியும் அதன் வரலாறு பற்றியும் ஏதும் தெரியாது அவர்கள் அப்படிதான் கூறுவார்கள்” எனப் பதிலளித்தார்.