முத்தமிழறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு வீடு வீடாகச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி தேர்தலில் வெற்றி பெறச் செய்தமைக்கு பொதுமக்களிடம் நன்றியும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்தியாவிலேயே முதல்முறையாகத் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர் பங்களிப்பில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தைத் தமிழ்நாடு தொடங்கவிருக்கிறது. இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சியாக இது அமையும்.
அதன்படி வருகிற புதன்கிழமை காவிரி மருத்துவமனையில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். மேலும் எத்தனை பேருக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்பது குறித்து ஒவ்வொரு மருத்துவமனையின் வளாகத்திலும் அறிவிப்பு பலகை வைக்கப்படும்.
மேலும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆய்வு மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு அதிகாரிகளுடன் நாளை செல்கிறேன்.
முகக்சவசம்தான் கொரோனாவுக்கான உடனடி பாதுகாப்பாக அமைகிறது. அ.தி.மு.க ஆட்சியில் தரமற்ற முககவசங்கள் வழங்கப்பட்டன. மக்களுக்கு N95 தரமுள்ள துணியால் முககவசம் வழங்குவது தான் பாதுகாப்பானது. எனவே தரமுள்ள இலவச முகக்கவசம் வழங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
கோவையில் உள்ள 13 எல்லைப் பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தொற்று பரவாமல் இருப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சார்பட்டா பரம்பரை படத்தில் விடுபட்ட காட்சி என ஜெயக்குமார் பாக்ஸிங் செய்வதுபோல் ஒரு வீடியோ வெளிவந்து இருக்கிறது. சார்பட்டா படத்தில் வரும் டான்சிங் ரோஸ் தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எனக் கூறுகிறார்கள்" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.